அக்டோபர் 31, 2005

வாழ்த்துகள் இரண்டு!


வையகம் எங்கும் பரந்து
வாழும் எல்லா
தமிழ் நெஞ்சங்களுக்கும்
வலைபதிவர்களுக்கும்!
வாசகர்களுக்கும்!

வரும் காலங்கள்
அனைவருக்கும்
தொல்லைகள் தொலைத்து
சுபீட்சமான நாட்களாக மாறி
எல்லோருக்கும்
எல்லாம் பெற்று தர
வேண்டி....

என்
இனிய தீபாவளி வாழ்த்துகளுடன் கூடி இன்ப ஈகை திருநாள் வாழ்த்துகளும்!......

என்றும் அன்புடன்
ஜோசப் இருதயராஜ்

அக்டோபர் 24, 2005

எனக்கு மனசு கேட்கவில்லை

கடந்த ஒரு வாரமாக தமிழ் மணம் பக்கமே வரமுடியவில்லை... கொஞ்சம் பிஸியாகி போனதால் தான் இந்த நிலை. ஆனால் இன்று வந்து பர்த்தால் நம்ம வீட்டில் ஒரே களேபரம்....

ஏறக்குறைய எல்லா அறைகளிலும் ( வலைபக்கத்திலும்) ஒரே விசனங்களும், வருத்தங்களும், கேள்விகளும், கோபங்களும்,விமர்சனங்களும், கண்டனங்களுமாக, மனிதனுக்குறிய எல்லா உணர்வுகளும் சிதறி கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது...... அவ்வளவையும் வாசிப்பதற்குள் எனக்கு தலை சுற்றிவிட்டது... பாதி விளங்கியது பாதி இன்னும் விளங்கவே இல்லை... அப்பப்பா,!

இது நாள் வரை தமிழ் மணம் மூலம் எனது கிறுக்கல்களும் திரட்டப்பட்டுள்ளன என்கின்ற வகையில், எனக்குள் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடு தான் இனி...

தமிழ் மணத்தின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள முறைமை அல்லது எடுத்துள்ள முடிவுகள் சரியா தவறா என்பதில் ஏகப்பட்ட கருத்துகள்.

ஆனால் கருத்துகள் சில இடங்களில் முன்வைக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட முறை சற்றும் அழகல்ல என்பது "நாகரீகம்" அறிந்த எல்லாருக்கும் தெரியும். இதற்காக அப்படி எழுதியவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்று அர்த்தமில்லை அவர்கள் கொஞ்சம் விரைவாக உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதை எழுதியவாகள் யாரும் படிக்காதவர்கள் இல்லை, கற்றவர்கள், அறிந்தவர்கள், தான் என்ன செய்கிறோம் என்று உணர்ந்தவர்கள். இந்த அளவிற்கு கொதித்தது நியாமாக இருந்தாலும், (அவர்கள் பார்வையில்) ... உதிர்த்த வார்தைகள் தான் தான் கொஞ்சம் எல்லாரையும் நெருடுகிறது. கொஞ்சம் யோசித்து வார்தைகளை பயன்படுதியிருக்லாமோ என்று எண்ண தோன்றுகிறது. அள்ளி வீசியாச்சு இனி எப்படி அதை சரிப்பண்ணுவது?.

ஐயன்மீர்!
தொடர்ந்து கொஞ்சம் பொறுமை காத்து வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....


இங்கு தமிழ் மணத்தில் இருப்பவர்கள் அல்லது எழுதி வருபவர்கள் போல் நான் அறிவாளியோ, கணனியில் புலியோ, கிடையாது ( சாதாரண கைநாட்டுதான்) ஆனால் தமிழின்பால் எனக்கு கொஞ்சம் பற்று உண்டு, தமிழன் எல்லா இடத்திலும் மதிக்கபடனும் என்ற எண்ணம் உண்டு அம்புடுதான். ( கல்லூரியில் இறுதி தோர்வில் கூட தமிழில் மட்டும் தான் நான் பாஸ்).

இங்கு ஜித்தாவில் உள்ள தமிழக நண்பர்கள் ஒன்று கூடி இணையத்தில் தமிழ் வளாப்போம் என்ற ஒரு கருத்தரங்குக்கு எப்படியோ என்னை அழைக்கப்போய், அழைப்பை பெற்று அங்கு போகும்வரை, தமிழ் மணம் பற்றியே எனக்கு தெரியாது. (ஆனால் அது வரை தமிழில் TISCI முறையில் தட்டச்சு செய்து எனது வீட்டுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதுவது மட்டுமே எனது தொழில்... ஊரில் நண்பர்கள் எல்லாரும் அடடே கம்யூட்டரில் கடிதம் எழுதுகிறானே (1996 களில்) என்று வியப்பார்கள் என்பது வேறு கதை)

கருத்தரங்குக்கு போயாச்சு!...

தொழில் என்று வந்த பின்னர் "தமிழ்" வீட்டிலும் நண்பர்களிடமும் மட்டுமே புழக்கத்தில் இருந்தாலும், இவ்வளவு காலமும் தமிழில் எழுதனும் என்று இருந்த ஆர்வம் மங்கிபோயிருந்த வேளையில் தான் இந்த கருத்தரங்கு எனக்குள் ஒரு புது தெம்பை தந்தது என்றால் தப்பில்லை. அதன்பிறகு தான் எனது கிறுக்கல்களை வலையில் பதிக்க தொடங்கினேன். (சரி சரி சுய புராணம் எதற்கு? என்ன சொல்ல வருகிறாய்? -ஐயா கொஞ்சம் பொருங்கள்)

நான் எழுத வந்த போது திரு.காசி அவர்களே கூட எனக்கு எழுத சொல்லி ஊக்கம் தந்தார்கள்.

இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்போது தமிழ் மணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளும் சரி, முடிவின் விளைவுகளும் சரி நம் எல்லோரையும் சற்று அவசரப்பட வைத்து விட்டதோ என எண்ண தோன்றுகிறது.....

திரு காசியும் மற்றும் நிர்வாகமும் எடுத்த முடிவை சற்று மறு பரிசீலனை செய்தால் நல்லது என்று என் கிறுக்கு புத்தி சொல்கிறது. காரணம் இன்று தழிழ் வலையுலகத்தில் "தமிழ் மணம்" ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதற்காக திரு காசி அவர்களும் அவரது நிர்வாக குழுவினரும் ஆற்றிய பங்கு எந்த விதத்திலும் குறையிட்டு சொல்ல முடியாது.

அதற்காக காசியின் பங்கு மட்டுமே காரணம் என்று சொல்லவும் கூடாது...., இதற்கு தங்கள் பங்களிப்பை செய்த (ஆக்கங்கள் வாயிலாக) எல்லா வலை பதிவாளருக்கும் இதில் ஒரு சிறு துளியாவது சேரவேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டடார்கள் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் தனது நேரத்தை எப்படியும் காசாக்கதான் பார்ப்பார்கள் என்று எனது சகோதரன் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன்...

அப்படியிருக்க தனது நேரத்தை தமிழுக்காக தமிழில் எழுதும் ஆர்வலர்களுக்காக ஒரு சேவை மனப்பான்மையுடன் தனது பொருளாதாரத்திலும் ஒரு பங்கை செலவிட்டு பங்காற்றியது உண்மையில் போற்றப்பட வேண்டிய விடயம் தான். வார்தையாக இல்லாது தமிழ் சமூகத்துக்கு உண்மையில் உழைத்தது பெரும் செயல்தான். நிச்சயம் அவர்கள் செயல் போற்றுதலுக்குறியது தான்....ஆனால்!

இப்படியாக எல்லாரும் சேர்ந்த ஆற்றிய ஒரு செயலால் தமிழ் கொஞ்சம் தன்னை ஒருபடி அழகு படுத்தியிருக்கிறது. உலகில் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக வலையில் அதிகம் பாவிக்கபடும் மொழி தமிழ் என்று கூட சொல்ல கேட்டிருக்கிறேன்... இன்று எதையும் வலையில் தமிழ் வடிவில் காண்கிறோம், போதாதற்கு தமிழ் மணம் உண்மையில் அநேக வாசகர்களை பதிவர்களை தன்னகத்தே கொண்ட பிரமாதமான ஒரு சேவை தான். ஒரு சிறந்த திரட்டி தான் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க இல்லை.

இது உண்மையில் தழிழுக்கு கிடைத்த வெற்றி தான். ஆனால் இந்த வெற்றி இப்படி பாலாக்கப்படுகிறதே!... யாரும் உணரவில்லையா?

தமிழனுக்கும் தமிழுக்கும் மட்டும் எந்த நல்ல விடயமும் தொடர்ந்து கிடைப்பதில்லை எல்லாத்துக்கும் அற்ப ஆயுசு தான். இது தான் நமக்கு கிடைத்த சாபம் போலும்.

நல்லது கெட்டது நாலையும் பேசி, கண்டு கேட்டு, உணர்ந்து சரியானதை தேர்ந்தெடுத்து வளரும் சமுதாயம் எவ்வளவு நல்லது. அது எந்த நிலையிலும் தன்னை அழியாது காத்துக்கொள்ளும், எந்த இடர்பாடுகளுக்கும் முகம் கொடுக்கும் நிலையில் தன்னை வைத்திருக்கும், உலகுக்கு தன் நிலை குறித்து உணர்த்தவும் தன் தனித்தன்மை குறித்து பெருமைபடவும் செய்யும்.... இந்த இலக்கை நோக்கி ஒரு சமூகத்தை பயணிக்க செய்ய முனையும் ஒரு கால கட்டத்தில்..... "நீக்கப்படும்" அல்லது "தணிக்கை" என்ற பொருள்படும் சட்டங்கள் கொண்டுவரலாமா?..

எனக்கு என்று நான் வைத்திருக்கும் சேவையில் யாரும் வந்து எனது விருப்புகளுக்கு இசையாத பட்சத்தில் நான் தணிக்கை செய்வேன் அல்லது நீக்குவேன் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர் கண்களுக்கு சர்வாதிகாரமாக தெரிந்தாலும்..., அது அவர் அவர் இஷ்டம் என்று தான் சொல்லலாம், இருந்தாலும் ஆனால் நமக்கு பிடித்தால் போவோம் இல்லை என்றால் விடுவோம் என்று மறுப்பதும் வருபவர்களின் உரிமை என்பதை மனதில் கொள்ளுதலும் அவசியமாகிறது.

இன்றைய நவீன எழுத்துலகில் ஒருவரின் சட்டங்களுக்கு
கட்டுபடவேண்டும், அல்லது கட்டுபட்டு தான் எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஒவ்வாமையை தோற்றுவிக்கிறது.

ஆனால் தமிழ் மணம் அப்படியல்ல ஒரு சேவை மனப்பான்மையோடு தொடங்கப்பட்டது ( அப்படிதான் நான் நேற்று வாசித்த ஏறக்குறைய எல்லா ஆக்கங்களிலும் இருந்து தெரிந்து கொண்டது), ஆக அங்கு யாவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருப்பது தான் நல்லது. அவரவர் கருத்து கண்ணோட்டம் அவரவர் சார்ந்தது.., இதில் மற்றவர் அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம்.

பொதுவாக ஒருவரது சிந்தனை, அறிவு, பெற்ற அனுபவம், கல்வி என்பவற்றை பொறுத்துதான் அவரது சமுகத்தின் மீதான பார்வை அல்லது உலக அளவிலான கண்ணோட்டம் இருக்கும். அது சிலருக்கு சரியாகவும் சிலருக்கு தவறாகவும் படலாம்... இதன்படி அவரவர் தன் மனவோட்டங்களை, எழுதலாம் அல்லது மேலும் சிலரின் மனவோட்டங்கள் நமக்கு புதிதாக இதுவரை நமது சமூகத்தில் இல்லாத ஒரு கருத்தாக ஒவ்வாமையாக இருக்கலாம்.

அதற்காக எதிர்மறையான கருத்துகள் அல்லது சிந்தனைகள் வரவே கூடாது என்று எதிர்பார்ப்பதும், தடுக்க நினைப்பதும் இயலாத காரியம் என்றே எனக்கு படுகிறது.

ஒரு சமூகத்தில் எல்லாரும் ஒத்த கருத்துகளையே கொண்டிருந்தால், அது அடிமைச்சமூகம் என்று தான் பொருள்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் யாருக்காவது கட்டுபடல் என்ற மனநிலையில் தான் அது சாத்தியப்படும்.

ஆனால் நிச்சயம் எதிர்மறையான கருத்துகளும், சிந்தனைகளும், தொடர்ந்து வெளிவரவேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் ஏன்? எப்படி? என்ன? என்ற கேள்விகள் வரும், ஆக இப்படியாக கேள்விகள் மற்றும் பதில்கள் என்று தேடல் இருக்கும் போது தான், ஒரு சமூகம் அடிமைதனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் பாம்பு சட்டை உரிப்பது போல் உரித்து வெளியில் வரும்.

ஆக இப்படியான கட்டுப்பாடுகள் சுய சிந்தனைகளை (அவை நம் நம் அளவுகோலின் படி நல்லதோ கெட்டதோ) கெடுக்கும் என்ற அடிப்படையில் தணிக்கை அல்லது நீக்கம் என்ற செயல்திட்டங்களை அமுல் படுத்துவதை சற்று மீள் பரிசீலனை செய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம்.

மேலும் அதிகரித்து வரும் பதிவுகளின் எண்ணிக்கையாலும், மூன்று மாதங்களுக்கு மேல் புதுப்பிக்கபடாத பதிவுகளை நீக்குவது என்பதையும் சற்று மீள் பரிசீலனை செய்தால் நல்லது என்று எனக்குப்படுகிறது.

காரணம் எல்லா வலைபதிவர்களும் தொடர்ந்து எழுதிகொண்டிருப்பவர்கள் அல்லர், தங்களது வாழ்வியல் வேலைகளுக்கூடே அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாங்கள் கண்ட கேட்ட உணர்ந்த விடயங்களை பதிப்பவர்கள் தான் அதிகம் இப்படி உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் பதிப்பது என்பது ஒரு சிலருக்கு முடியாத காரியம் அதுவும் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்து இருப்பவர்கள் என்றால் கொஞ்சம் கஷ்டம், அதுவும் மத்திய கிழக்கில் பணிபுரிபவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..., ஏனென்றால் இங்கெல்லாம் மற்ற நாடுகளை போல் விடுமுறை நாட்கள் என்பது கிடையவே கிடையாது. வாரத்தில் ஒரு நாள் தான், அதுவும் சிலருக்கு கிடையாது,

மற்றும் விடுமுறை என்று ஊருக்கு போய் திரும்பி வரும் சமயங்களில் அப்படியே தமிழ் மணத்துடனான சொந்தம் கொஞ்சம் விடுப்பு எடுத்துக்கொள்ளும். ஆக இப்படியான சந்தர்ப்பங்கள் அநேகம் ஆகவே பதிவர்கள் எப்போது வந்து பதிந்தாலும் அப்போது அது தானாகவே Activate ஆக ( தமிழ் தெரிலீங்க) ஆவண செய்தால் நன்று.

சரி அறிவிப்பை செய்தார்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்கள், உடனே பலர் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒரு சிலர் அதை சரி என்று வாதிட்டார்கள்... ஆனாலும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள், சற்று காரமாகவே எழுதி விட்டார்கள். ( எழுதி வருகிறார்கள்) சரி என்று வாதிட்டவர்களை, சற்று இளக்காரமாகவே பின்னூட்டமிட்டார்கள்... இந்த இடத்தில் தமிழர்கள் நாம் எல்லோரும் நம்மை மறந்து செயற்பட்டு விட்டோமோ என்று நினைக்கிறேன்.

தமிழ் மணத்தில் உள்ள பதிவர்கள் எல்லாரும் மதிப்பிற்குறியவாகள் தான் (அவர்கள் வயதில் சிறியவரானாலும் பெரியவரானாலும் ). ஆனால் யாராவது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நம் ஒருவருக்கொருவர் செயல்படுகிறோமா?...வேற்று மொழிகாரனுக்கொன்றால் விட்டு கொடுத்துவிடுவோம் தமிழருக்குள் விட்டுக்கொடுத்தால் அது மான பிரச்சினையாகிறது.

உனக்கு எந்த விதத்தில் நான் குறைந்தவன் என்ற ஒரு இருமாப்பில் எழுதுவது போல் எல்லாரும் ரொம்பவே அவசரம் காட்டிவிட்டோம். இது வேண்டாம். என்னை பொறுத்தவரை அவசரமுடிவுகள் இருபக்கமும் உள்ளதாகவே நினைக்கிறேன். இதை பெரிது படுத்தவேண்டாம்,

நான் என்ன சொன்னேன்?, அதற்கு நீ என்ன சொன்னாய் என்றெல்லாம் தாக்குதலகள் தொடர்கிறது. தவறுகள் எங்கு இல்லை? எவரிடத்தில் இல்லை? எல்லாருமே ஏதோ வகையில் தவறுகிறவர்கள் தான் அது தான் மனித இயல்பு என்று தவறுக்கு பிறகு தன்னை திருத்திகொள்வது தானே படித்தவர்க்கு அழகு,

எல்லா மதிப்பிற்குறிய எழுத்தாளர்களும், வலைபதிவர்களும், அறிஞர்களும், நாம எதையாவது பதிக்கும் போது ஏதாவது ஒரு நோக்கத்துடன் தான் எழுதுகிறோம். தற்கால உலகத்தில் தமிழன் நிலையும் தமிழும் எப்படி இருக்கு என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நம் இனத்தின் பெரும் பகுதி இன்னமும் கால்வயித்து கஞ்சிக்கு வழியின்றி தான் இருக்கு, அநேகம் பேர் அடிப்படை கல்வி அறிவு இல்லாது கண்ட கண்ட பினாத்தல் பேர்வழிகள் பின்னால் போய் அவர்களை அண்ணாந்து பாத்து கையேந்தி தான் நிற்கிறார்கள். இன்னமும் அடிமைகளும் அடிமைதனமும் அப்படியே தான் கையாளப்படுகிறது.

இன்னமும் படித்தவர்கள் நாமே கூட நம் மக்களுக்கு துரோகம் செய்கிறோம்... நாம நாம சும்மா நமக்குள்ள சண்டை போட்டு பிரிந்து போவதில் யாருக்கு லாபம் என்று யோசித்து பாருங்கள்.. நமக்குள் நீ பெரியவனா? நான் பெரியவனா? அல்லது நான் இன்ன சாதி அல்லது நீ இன்ன மதம், நீ ஒழுங்கா? நான் ஒழுங்கா? என்று இப்படியே நாமே பேசிப்பேசி நம் மக்களை பிரித்து எதிரிக்கு வழிசமைத்து கொடுக்கிறோம்...

தமிழன் எங்கெல்லாம் செரிந்து வாழுகிறானோ? அல்லது எங்கெல்லாம் கூடி வாழ முற்படுகிறானோ? அங்கெல்லாம் இந்த சமூகம் பிளவு பட்டுதான் வாழுகிறது, அதனால் தான் இன்னமும் கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றிய தமிழும் தமிழ் இனமும், இன்னமும் அடுத்தவருக்கு சேவகம் செய்கிறது என்பது வேதனையான விடயம்.

ஐயா பெரியவுங்க நீங்க எல்லாம் சேர்ந்து நட்ட ஒரு ஆலமரம் வளர்ந்து விழுது விட தொடங்கும் போது அப்படியே வெட்டி சாய்கிறது சரிதானா? எல்லாரும் தனித்தனியே போய் தனிமரமா தான் நிற்பேன் என்று போனால், அது தோப்பாகுங்களா? இன்றைய காலகட்டத்தில் நிறைய தோப்புகள் உருவாகலாம், ஆனால் ஒரு தோப்பை அழித்து விட்டு தான் இன்னொன்னு உருவாக்கனுமா? நம்ம சமுகத்துக்கு இது தான் நீங்கல்லாம் கத்துகுடுக்கிற பாடமுங்களா? இப்ப புதிதாக வருகிற பதிவர்களுக்கும் இந்த நோய் தானே தொற்றும்.... அப்ப எப்படீங்க...?........

அதனால இந்த கிறுக்கன் முளைக்கு பட்டத சொல்றேன்... எல்லாரும் எல்லாதையும் மறப்போம், மன்னிப்போம், ஒரு முறை செய்தது தவறு அல்லது அவசரப்பட்டுவிட்டோம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வோம், இதில் சுய கெளரவம் வேணாம்.., ஏதோ தப்பு நடந்து போச்சு போனது போகட்டும். இனி இப்படி நடக்காம பார்த்துக்குவோம்... எல்லாரும் எல்லாத்திலயும் சுதந்திரத்த அனுபவிப்போம், ஆனா நாம அனுபவிக்க முனைகிற சுதந்திரம், நாம செய்யப்போற காரியம் நம்ம இனம் தழைக்கவும் தலைநிமிரவும் பயன்படட்டும்.....,

ஆழக்கடலில் போய் மீன் பிடிப்பவர்கள் வலையில் எல்லா விதமான மீன்களும் தான் சிக்குது, அதுக்காக அவங்க எல்லாதையுமா? கரைக்கு கொண்டு வாராங்க..., அல்லது நமக்கு தேவையில்லாததும் கிடைக்குதுன்னு சொல்லி மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு போகாமலா இருக்காங்க...

"தமிழ் மணமும்" அந்த மாதிரி பரந்த நோக்கோடு இருக்கட்டும். யாரும் வந்து எழுதட்டும், நாம நாம நமது தேவைக்கு ஏற்ப மாதிரி Selective ஆக இருப்போமே. தமிழ் மணம் திரட்டிக்கு வரும் வாசகர்கள் தெரிந்து எடுத்து வாசிக்கட்டும், நமக்கு தேவையில்லாதது புறக்கணிக்கபடும் போது அதை தருபவாகள் தங்களை மாற்றிக்கொள்ள ஏதுவாகும்.

நாம எல்லாரும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழே வந்து.. மீண்டும் வீறு நடை போடுவோம்.

வீட்டை விட்டு போனவுங்க எல்லாரும் மீண்டும் வரட்டும் பழைய மாதிரி தமிழ் மணம் களை கட்டடுங்க.

நடக்குங்களா?... என்னமோ போங்க என் மனசுல பட்டத சுருக்குன்னு சொல்லிப்புட்டேன்.... இத பாத்துட்டு யாரும் நானும் ரொம்ப வெவரங்கெட்டதனமா? அவசரப்பட்டுட்டேன்னு எழுதிராதீங்க! நமக்கு தான் புத்தி பத்தாதுங்களே!

நன்றி.

அக்டோபர் 09, 2005

தமிழரும்!.... தமிழ் வளர்ப்பும்!

கடந்த வாரம் மீண்டும் ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த ஒரு கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது, இது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஓரு பகுதியாக இந்திய தூதரகமும், உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து நடத்தி வந்த ஒரு மாதகால தொடர்விழா நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக, தமிழர்களுக்கான விழாநாள் தான் கடந்த செப்டம்பர் 28 ம் திகதி.

நிகழ்ச்சி ஜித்தா சர்வதேச இந்திய பாடசாலை ஆண்கள் பிரிவின் விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தொடர்ந்து இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இதே மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 8ம் திகதி முதல் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் தமிழர்களுக்கான விழா நாள் தான் கடந்த செப்டம்பர் 28 ம் திகதி.

இனி மேடையின் மையப்பகுதியில் இந்திய கொண்டாட்டம் 2005 ( Indian Festival 2005) என்ற பெரிய விளம்பர போஸ்டர். கீழே மேடையின் கீழ் பகுதியில் ஜித்தா தமிழ் சங்கத்தின் ஒரு போஸ்டர் அதில் ஒரு அழகான வரி "தமிழால் ஒன்றிணைந்தோம் தமிழ் வளர்ப்போம்" என்று, ஆகா! அதை வாசிக்கவே ஒரு சந்தோஷம். (வாசகத்துக்கு சொந்தக்காரர் உண்மையில் பாராட்டபடவேண்டியவர்).

நிகழ்ச்சிக்கு அநேகம் பேர் விருந்தினர்களாக வந்திருந்தனர், அவர்கள் பெயர் விபரம் வேண்டாம், நிகழ்ச்சிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது துணைவியார் வருகை தந்திருந்தனர், மற்றும் இலங்கை தூதுவர் கூட வந்து கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து திரையுலக நடிகர் நாசர் அவர்கள் வந்திருந்தார், ஆனால் மிகவும் தாமதமாக வந்தார் பயணத்தில் ஏற்பட்ட தடங்கல் என்று சொன்னார்.

நிகழ்ச்சி மாலை 5.30 என்று இருந்தது... நிகழ்ச்சியும் 5.30 க்கு தொடங்கியது.
சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லாரும் பங்கு பற்றிய பல நிகழ்ச்சிகள் நாடகம், நடனம், பாடல் என்று இருந்தது.

நிகழ்ச்சிகளில் முதலில் ஞாபகசக்தி அல்லது விரைவாக கணக்கிடுதல் என்ற ரீதியில், தமிழகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார்..., (பெயர் ஞாபகத்தில் இல்லை, ) பல இந்திய மற்றும் ஒரு சில ஆசிய மற்றும் உலக சாதனைகளை செய்தவர் என்று அறிமுகப்படுத்தப்ட்டார். கணணியுடன் போட்டி போட்டார், சபையில் உள்ளவர்கள் தங்கள் பிறந்த அல்லது திருமணமாண, அல்லது தங்களுக்கு விசேசமான திகதியை சொன்னால் அவர் உடனே அந்த நாளின் பெயரை கூறிவிடுவார்... கணணியில் விடை வருவதற்கு முன்னர். சரியாகதான் சொல்கிறார் என்று சபையினரின் கைதட்டல்கள் சான்று சொன்னது.

மற்றும்படி இதில் பங்கு கொண்ட சிறார்கள், நன்றாக தத்தமது பங்களிப்புகளை செய்தார்கள். ஆனால் பெரியவர்கள் அளித்த எந்த நிகழ்ச்சியும் நல்ல தரமானதாகவோ, அல்லது ஏதாவது கருப்பொருள் உள்ளதாகவோ இருக்கவில்லை என்பது சோகமான விடயம்.

ஒரேயொரு நடன நிகழ்ச்சி, பதினொரு மாதத்தங்களுக்கு முன் வந்து போன சுனாமி பற்றியதாகவும் அதன் கொடூரம் பற்றியதாகவும், அழிவு பற்றிய தாகவும், அதனால் மக்களின் வாழ்கை தலைகீழாக புரட்டிபோடப்பட்டதையும் சொன்னது, நிகழ்ச்சி நன்றாக நெறிப்படுத்தப்ட்டிருந்தது, ஒளியமைப்பு, காட்சியமைப்பு போன்றவைகள் நன்றாக திட்டமிடப்பட்டு கோர்க்க பட்டிருந்தன. ஆனால் அந்த நிகழ்ச்சி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது தான் யாரும் எதிர்பாராத சோகம்.

மொத்ததில் நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திமயம், தமிழ் என்று பார்த்தால் சிறுமிகள் குழு ஒன்று நடனமாடிய " எங்களுக்கும் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால்..." என்ற பாடலுக்கான பொங்கள் நடனம் மட்டுமே தமிழாய் தமிழுக்காய் இருந்தது என்று சொல்லலாம்.

அல்லாது ஓரிருவர் நிகழ்ச்சிகளின் இடையில் ஓரிரு தமிழ் (சினிமா) பாடல்களை பாடினர், இன்றைய காலகட்டத்தில் மிகப்பிரபலமான "கரோகே" (Karoake) என்ற பாடலுக்கான பின்னனி இசையை சிடியில் ஒலிக்க விட்டு இசைக்கு பாடும் முறையில் பாடினர்.

இந்த ஓரிரு பாடல்களிலும் கூட சங்கீத மேகம்...., சங்கராபரணம் போன்ற பாடல்கள் மட்டும் கேட்டக கூடியதாய் இருந்தது என்பது வேறு விடயம். ஒரு யுவதி " ஒவ்வொரு பூக்களுமே... என்று மிகுந்த போராட்டத்துடன் பாடி சென்றார், அதிலும் அவருடன் சேர்ந்து ஒரு சிலர் "பியூஷன்" Fusion என்ற பெயரில் ஏதேதோ செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு தபேலா வாசித்த நபர் தான் கதாநாயகன். மிகவும் துல்லியமாக அருமையாக வாசித்து சென்றார். அந்த ஒரு திருப்தி மட்டுதான்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் சினிமாப்பாடல்கள் தான் தலை தூக்கி நின்றன என்பதை சற்று வருத்ததுடன் சொல்லவேண்டியதாகிறது. அதிலும் எல்லாம் இந்தி மயம்தான். மேல் சொன்ன சுனாமி பற்றிய நிகழ்ச்சியில் வந்த மின்சார கனவு படப்பாடல்கள் எல்லாம் கூட இந்தி பதிப்பின் பாடல்கள் தான். கலைக்கு இனம் மொழி மதம் தேவையற்றது... என்பது சரி தான், ஆனால் தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை பயன்படுத்த ஏன் இந்த தயக்கம்?

நிகழ்ச்சியின் இடையில் திரு. நாசர் அவர்கள் மேடைக்கு பேச வந்தார், வந்ததும் தனது ஆதங்கத்தை அப்படியே கொட்டிவிட்டார், ஒரு சிறப்பு விருந்தினர் ஆற்ற வேண்டிய உரையாக இல்லாது ஜித்தா தமிழ் சங்கத்துக்கு அறிவுரை சொல்லவேண்டிய உரையாக ஆக்கிகொண்டார். அவர் பேசும் போது அவையில் ஏகப்பட்ட சலசலப்பு. சில நேரம் பேசாது போய்விடுவாரோ என்று கூட நினைத்தேன். கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத ரசிகர்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். கடைசியில் அவரும் தமிழிலிருந்து மாறி ஆங்கிலத்தில் தான் பேசினார். ( தமிழ் அல்லாத ரசிகர்கள் வந்திருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாமோ? என்னவோ? )

தமிழர்களுக்கான, தமிழ் சங்கம், ஏற்பாடு செய்த தமிழ் கொண்டாட்டத்தில் இதுவரை ஒரு தமிழ் நிகழ்ச்சி கூட வரவில்லை, வந்த நிகழ்ச்சிகளும் கூட தமிழ் அல்லாதவையாக தான் இருக்கின்றன...., இங்கு அவர்கள் ஆடிய சினிமா பாடல்கள் எல்லாம் பெரியவாகளால் பெரியவர்களுக்காக
எழுதப்பட்டவை, அதை அந்த சிறார்கள் ஆடும் போது அதன் அர்த்தம் தெரிந்து தான் ஆடுகிறார்களா? என்று தன் உரையில் ஆதங்கப்பட்டு போனார்.... நிகழ்ச்சியின் இடையிலேயே அரங்கத்திலிருந்து காணாமலும் போயிவிட்டார்.

இப்படியாக ஜித்தா தமிழ் சங்கத்தின் இந்தி நிகழ்ச்சிகள் யாவும் இரவு 11.30 மணியளவில் முடிவுபெறும் போது அரங்கத்துள் ஒரு கால்வாசிப்பேர் தான் மிஞ்சியிருந்தார்கள். இறுதியாக அரங்கத்துள் தேசிய கீதம் பாடப்பட்டது,

ஆனால் பாருங்கள் அப்போது தான் இருந்த மிச்சப்பேரும் எழுந்து அவரவராக அரங்கத்தை விட்டு வெளியே போக தொடங்கிவிட்டார்கள்.

ஆகா என்னே நாட்டுப்பற்று...!

நானும் எனது நண்பர்களும் மட்டும் கடைசிவரை எழுந்து நின்று விட்டு வெளியில் வந்தோம்.... அப்போது என் நண்பர்கள் சொன்னார்கள்.

"தமிழ் சங்கத்துக்கு வந்ததால் கொஞ்சம் இந்தி கற்றுக்கொண்டோம்"

இது இங்கு மட்டுமில்லை தமிழன் புலம் பெயர்ந்து வாழும் எல்லா
இடங்களிலும் நடக்கிற ஒரு சம்பவம் தான். இதற்கு காரணம் என்ன யாருக்காவது தெரியுமா?...

ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழன், தமிழ் கலாச்சராம், தமிழ் மொழியென்று என்று ஏதேதோ "பினாத்தல்கள் குழந்தைகள்" மட்டும் தினம் பிறந்த வண்ணம் இருக்கிறது.

வாழ்க தமிழ்!

அக்டோபர் 02, 2005

போங்க போங்க புண்ணாக்குகளா!

இது கொஞ்சம் கொ(ப)ச்சையாக தெரியும் ஆகவே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்,

என்னமோ தெரியவில்லை நெய்வேலியின் இரண்டு பதிவுகளை
பார்த்ததும் எனக்கும் இத பத்தி ஏதாவது கிறுக்கனும்முன்னு தோணிச்சு ஆனாலும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

முதலாம், மற்றும் இரண்டாம் பதிவுகளை பார்க்க...

இது முழுக்க முழுக்க எனது கருத்து இது நான் யோசித்து பார்த்ததில் கிடைத்தவை. பயங்கரமான பின்னூட்டங்கள், வசைகள் மற்றும் துற்றுதல், ஏச்சுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன், ஆனால் என்ன செய்ய உண்மை இப்படியாக இருக்குமானால் என்ன செய்வது?

போன வாரம் Talk of the town என்னன்னா? குஷ்பு குஷ்பு குஷ்பு.... எங்கும் குஷ்பு! எதிலும் குஷ்பு!

அது சரி குஷ்பு கூறிய அல்லது சொன்னதின் உள்கருத்து என்ன?....
விச்சு அவர்களின் பதிவின் படி.....

1 // ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்//.

2 //கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்.//

3 //...ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.//

இப்ப இது தான் பிரச்சினை நமது பெண்களின் கற்பு என்பதும், தமிழனின் கலாச்சாரம் என்பதும் பெண்களின் பிறப்பு உறுப்பிலா நிச்சயிக்கபட்டுள்ளது?. பார்த்தால் எல்லாரும் அப்படி தான் பேசுகிறமாதிரி தெரியுது.

1. பெண்ணின் கற்பு என்பது அவளது பிறப்பபு உறுப்பில் இருக்கும் மெல்லிய சவ்வான கன்னித்திரையில் தான் தங்கியுள்ளது, என்று கலாச்சாரம் என்ற பெயரில் நமக்கு ஊட்டப்பட்டிருக்கிறது போலும்.

தற்கால நிலையில் ஒரு பெண் தனது கன்னிதன்மையை இலகுவில் இழந்து விடகூடிய அநேக சந்தர்ப்பங்கள் உண்டு..... அதற்கு உடலுறவு தான் அவசியம் என்று இல்லை.

விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றல், அதற்கான கடும் பயிற்சியில் ஈடுபடல், சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், உடற்பயிற்சி.... இப்படியாக தற்கால வாழ்வியலில் அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.... ( இது நான் சொல்லவில்லை மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது) அப்படியே இல்லையென்றாலும்.... சுய இன்பம் அப்படின்னு ஒன்னு இருக்கிறதே!... அதில் ஈடுபடும் பெண்களுக்கும் அது கிழிந்து தான் போகும் என்று மருத்துவ ரீதியாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.....

ஆகவே இம்மாதிரியான சந்தர்பங்களினால் அவளது கன்னத்திரை கிழிந்திருந்தால்.... அப்போது அவள் கற்பு இல்லாதவள் என்று ஆகிவிடுமா?

இதற்காககூட குஷ்பு " ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்......." என்று சொல்லியிருக்கலாம்.


2. அடுத்ததை கொஞ்சம் விபரமாக பார்ப்போமானால், இந்த செக்ஸ் (அதாவது உடலுறவு) என்பது உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் மனித இனத்திடம் மட்டுமே இவ்வளவிற்கு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. மற்ற உயிரினங்களிடத்தில் அந்த செயற்பாடு ஒரு இனபெருக்க செய்றபாடே ஒழிய வேறில்லை. ஆனால் மனிதனிடத்தில் அப்படியில்லை அது தான் வாழ்கையின் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும் மிகையில்லை. காரணம் மனித மனங்களின் நிறைவு காணாத ஒரு செயற்பாடு. அதனால் தானே இத்தனை மருந்துகள், மாத்திரைகள்...விளம்பரங்கள்... இத்தியாதி இத்தியாதி எல்லாம்.

செக்ஸில் திருப்தி அல்லது நிறைவு என்று ஒரு வார்தை வருகிறது, இதில் ஆண் பெண் இருபாலாருக்கும் அநேக முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.
காரணம் செக்ஸ் பற்றிய அறிவார்ந்த கல்வியும், கண்ணோட்டமும் ஆண் பெண் பரஸ்பர கருத்து பரிமாரல் இல்லாதது தான். மற்றது உடலுறவு காலஎல்லை என்பதும் ஆண் பெண் இருபாலாருக்கும் இடையில் அநேக இடைவெளி உள்ளது என்று வைத்திய ஆராய்ச்சிகளே கூறுகின்றன. ஆக இந்த செக்ஸ் விவகாரம் தான் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்க நினைகிறது என்று எண்ண தோன்றுகிறது...

மேலும் இன்றைய உலகில் ஆண் பெண் திருமன வயது என்பது எத்தனை என்பதை சற்று யோசிக்க வேண்டும், அது வரை இருபாலாரும் எப்படி தனக்குறிய உடல் மாற்றத்தால் வரும் உணர்ச்சிகளை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியும்?... ஏனெனில் இப்போதைய உலகம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சொல்லிகொடுக்க முனைவதில்லை, மாறாக உசுப்பிவிடுகின்றன... இதற்கு நம் தமிழ் சினிமா ஒன்று போதும் வேறு தேவையில்லை, இருந்தாலும் உலகம் இப்போது எல்லாவற்றிலும் மிக வேகமாக வளாந்து விட்ட நிலையில், பலஆயிரம் மைலுக்கப்பால் உள்ள அடுத்தவரின் வாழ்கை முறை கூட நமது நடுவீட்டில் வந்து உட்கார்ந்து விவாதம் பண்ணகூடிய கால வேகத்தில் ஊடகங்கள் இருக்கும் போது,

ஆண்கள்... வெளியில் தெரியாமல் தமது காரியத்தை கன கச்சிதமாக முடித்துக்கொள்வார்கள் ... (அதாவது வடிகால் தேடிக்கொள்வார்கள்) பெண்கள்... அவர்களும் மனிதர்கள் தானே!... அவர்கள் உடலிலும் ஓடுவது நமது குருதிக்கொப்பான குருதி தானே! அவர்களுக்கு உணாச்சிகள் இருக்காதா?... ஆசைகள் இருக்காதா?... ஒரு வேளை தனது சுயகட்டுப்பாடுகளிலிருந்து வெளி வர நேர்ந்தால், அதற்காக கவனக்குறைவாக இருந்து நோயை தேடிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் சொல்லப்பட்டிருக்கலாம்.

இதற்காக எல்லாரும் இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை யாரோ ஒருத்தி சொன்னாள் அதனால் செய்வோம் என்று எல்லாரும் செய்வோமா?... இல்லையே!

நமது புத்திக்கும் தெரியும் எது நல்லது எது கெட்டது என்று. கட்டுபாடுகளுடன் மனதை ஒருவழிப்படுத்தி இருக்கிறவர்கள் அல்லது அப்படிதான் இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் அப்படி இருக்கட்டும். வடிகால் வேண்டும் என்று நினைப்பவர்கள் முட்டாள் தனமாக இல்லாது பாதுகாப்பாக இருக்கட்டும் என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக கலாச்சாரம், அது இது என்று அரசியல் செய்கிறோம் அல்லது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மைகளை யதார்த்ததை உணர்வதில்லை... ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டியது இல்லை கலாசாரம் கற்பு என்று அதன் பின்னால் ஒளிந்து கொள்வது....

உன் வாழ்கையை நீ முடிவு செய்... அதனால் வரும் விளைவுகளுக்கு நீ மட்டுமே பொறுப்பாயிரு என்று சொன்னால் போதாதா?

யாராவது ஒரு பெண் சொன்னாள் என்பதற்காக நமது பண்பாடு அழிந்து விடுமா?... அப்படியானால் அது என்ன பண்பாடு?.. புண்ணாக்கு பண்பாடு.

நான் நினைப்பது என்னவென்றால் இந்த ஆணாதிக்க சமுகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில் அனுபவம் உள்ளவளாக இருந்தால், எங்கே தன்னோடு உறவில் இருக்கும் போது அந்த பெண் முன்னைய அனுபவத்தை இப்போது ஒப்பிட்டு பார்த்து தன்னை எடைபோடக் கூடும் என்ற பயஉணர்வாக இருக்குமோ? என்று எண்ண தோன்றுகிறது?. (கொஞ்சம் விரசமாக இருக்கிறது இல்லையா? என்ன செய்ய வெளிப்படையாக பேச முனைந்தால் இப்படியெல்லாம் பேச/எழுத வேண்டி வருவதை தவிர்க்க முடியவில்லை).

காரணம் நம் சமூக அமைப்பு அப்படி. மனித மனம் என்பது ஒரு சிக்கலுக்குறிய ஒரு விடயம், அதனால் தான் " மனம் ஒரு குரங்கு" என்று சொல்லியிருக்கிறார்கள், எதுவும் நடக்கலாம்.

இதனால் அவளின் போக்கு மாறலாம். அப்படி ஆகும் பட்சத்தில் தனது விருப்பபடி அவள் வேறு ஆண்களை நாடிவிட்டால், அப்போது நமக்கு சமூகத்தில் இருக்கும் அல்லது நம்மால் ஏற்படுத்தபட்டிருக்கும் நமது நிலை குறித்து விமர்சனம் செய்யப்படலாம் என்ற காரணமாகவும் இருக்கலாம்.( இதற்காக தான் சும்மா சும்மா காட்டு கூச்சல் போடுறாங்கன்னு தோனுது).

மனிதனை அவ்வாறு செய்ய தூண்டாது இருக்கவும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை கடைபிடிக்கவும் கலாச்சாரம், பண்பாடு என்கிற கோட்பாடுகள் சட்டங்கள் கீழ் முன்னோர்கள் கட்டிப்போட்டிருக்கிறார்கள். கூடிய வரையில் ஆண் பெண் இருபாலாரையும் திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் பெரும்பாலும் வேலி தாண்டினாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்... ஆனால் பெண்கள் அவ்வாறு இல்லை..

இங்கு எல்லாம் அரசியல் ஆக்கப்பட்டு இருக்கிறது, பெண் விடுதலை என்று பேசுகிறவர்கள்... எல்லாரும் சும்மா ஒப்புக்கு தானே ஒழிய மனதறிந்து அதில் ஒன்றுபடுவதில்லை.

இப்போது கூட இந்த விடயத்தில் எவ்வளவு கருத்துகள்... ஆமோதிப்புகள், வெறுப்புகள், விமர்சனங்கள், எல்லாம் வருகின்றன இது கூட ஒரு விதத்தில் நல்லது தான், ஏனென்றால் நாலையும் கண்டு கேட்டு பட்டு அறிந்து ஒரு தெளிந்த சமூகம் உருவாகலாம்.

ஆக அதை விடுத்து குழம்பிய குட்டையில் மீன் பிடித்து அரசியல் பண்ணி, கூட்டம் சேர்த்துகொண்டு ஆளாளுக்கு அடித்துகொண்டோமானால்,...
யாருக்கு லாபம். இதை மற்றவர்கள் பார்த்தால் சிரிப்பா சிரிப்பார்கள். பார்த்தாயா தமிழனின் சிந்தனைகளை என்று சொல்லி....,

இது போல் குறுகிய சிந்தனைக்குள் தழினை, தமிழனே வைத்திருப்பதால் அல்லது வைத்திருக்க முனைவதால் தான் மாற்றான் தமிழனை அவன் தலையிலேயே மிளகாய் அறைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

அப்படியானால் நமது சமுகம் அழிந்து விடும் அப்படி இப்படின்னு ஒரு சிலர் புருடா விடலாம்... அப்படி நடக்க சான்சே இல்லை, உதாரணமாக அமெரிக்காவை எடுத்துககொள்ளுங்கள், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, ஜாதிக்கோ, மதத்திற்கோ என்று இல்லாது தனி மனித சுதந்திரத்தை விரும்பும் பல்லின மக்கள் ஒன்று கூடி வாழும் மக்கள் உள்ள நாடு. அதில் எம்மை விட பிரச்சினைகள் அரசியல் சித்துகள் என ஏராளம் இருக்கின்றன... ஆனால் கலாச்சாரம் பண்பாடு என்று பொய் முகமூடி போட்டு யாரும் இருப்பதில்லை.

அதனால் தான் அந்த நாடு இன்னும் உலகில் வல்லரசாக இருந்தாலும், இன்னமும் கூட முழுப்பூமி பந்தையே தன் காலுக்டியில் கொண்டு வரவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு செயல்படுகிறது, அதுவும் நம்மல மாதிரி, கற்பு, கலாச்சாரம், கன்னித்தன்மைன்னு, வேஷம் போட்டுக்கொண்டிருந்தால் இன்னமும் நம்மல மாதிரி தான் எல்லாத்துக்கும் அடுத்தவரை கையேந்தி கொண்டு தான் நின்றுகொண்டிருந்து இருக்கும்.
அட போங்கப்பா புண்ணாக்கு போயி வேலைய பாருங்க!...

ஒங்களோட இந்த கூச்சலுக்கு பயந்து வேணாம்முடா சாமின்னு வெளிநாட்டுகளுக்கு போய் அங்கு குடியேரும் நம்ம இளைய சனங்கள் நம்ம ஊரிலேயே இருந்து உழைக்கவும் இந்த உழைப்பினால் ஊருக்கும் ஏதாவது வழி பிறக்க வைக்க முடியுமான்னு பாருங்க. எத்தனை ஆயிரம் ஏழை குழந்தைகள் படிக்க முடியாது இருக்காங்க அதுக்கு வழி இருக்கா பாருங்க! எத்தனை பேர் கால் வயத்து கஞ்சி கிடைக்காது அல்லல் படுறாங்க அவுங்களுக்கு ஏதாவது செய்யுங்க... எத்தனை ஆயிரம் வாழ வழி தெரியாது, அல்லது இல்லாது தடுமாறுது அதுக்கு ஏதாவது செய்ய பாருங்க!

வறுமை தாங்காது தனது உடல் அவயவங்களையே விற்க வரும் நமது சமுகத்துக்கு ஏதாவது செய்யபாருங்க.

மற்றவர்கள் எல்லாம், குறிப்பா எல்லா வெளிநாடுகளிளுமே தமிழன் என்றால் எல்லாரும் ரொம்ப இலக்காரமா பார்கிற நிலையில இருந்து தமிழையும் தமிழனையும் மீட்க ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க...

அத வுட்டுப்புட்டு கற்பு, கன்னிதன்மை, அப்டின்னுகிட்டு. அப்படி என்னய்யா தமிழனின் கலாச்சாரம் மட்டும் என்ன கவட்டிக்குள்ளயா இருக்கு?....

தூற்றுவோர் தூற்றட்டும்
போற்றுவோர் போற்றட்டும்
நீ
நீயாக இரு!....

இத பத்தி இதே மாதிரி கருத்தை கூத்தாடி கூட சொல்லியிருக்கார், போயி பாருங்க!

அப்புறம் என்னை திட்டி தீக்கிற வழிய பாருங்க!
வாழ்க தமிழன்!

செப்டம்பர் 13, 2005

உலகம் என்னாகும்!

கடந்த சனிக்கிழமையன்று BBC தொலைகாட்சியில் பாஸ்லான் குழந்தைகள் "Children of Baslen" என்ற ஒரு நினைவு நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன்.

கடந்த வருடம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் பாஸ்லான் என்ற சிறிய நகரத்து பாடசாலையொன்றில் விடுதலைக்கான போராட்டம் என்ற பெயரில் வெறிப்பிடித்தாடி ஏறக்குறைய 700 பேரை கொன்று தீர்த்த (அதில் சிறுவர் சிறுமியர் மட்டும் 300 பேர் வரையில் என்று கூறப்படுகிறது) ஒரு அகோர சம்பவத்தை நினைவு கூறும் முகமாக, அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த அந்த பிஞ்சு குழந்தைகளை விட்டு அந்த கோர மணித்தியாலங்களை நினைவுபடுத்தி பார்த்திருந்தது அந்த நிகழ்ச்சி.....

நிகழ்ச்சி என்ன சொன்னது என்பது பின்னால் பார்க்கலாம். ஆனால்...,!

அந்த துயர மணித்தியாலங்களை, கொலைபிசாசு தாண்டவமாடிய அந்த நேரத்தை அந்த பிஞ்சு உள்ளங்கள் மறந்து, மீண்டும் அவர்களின் மனசு தெளிய முனையும் இந்த வேளையில், அதே பிள்ளைகளை விட்டு அந்த வெறியாட்ட நிகழ்ச்சியை அவர்களுக்கு நினைவு படுத்தியது.... சரியா தவறா என்பதில் எல்லாருக்கும் ஒரு பொதுவான கருத்து இருக்குமா? தெரியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தவரை அந்த பிஞ்சு பூக்களுக்கு திரும்பவும் அந்த நிகழ்ச்சியை ஞாபகமூட்டியது தவறு என்றே படுகிறது.... பாவம் அந்த பால்மணம் மாறா சின்னஞ்சிறுசுகள்.... ஒரேயொரு சிறுவனை தவிர மற்றவாகள் எல்லோரும் இன்னமும் பயத்துடனும், சோகத்துடனும் தான் பேசினார்கள். எல்லாரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று மட்டும் சொல்லலாம்.

ஒரு தலைசிறந்த ஊடக நிறுவனமாக கொள்ளப்படும் பிபிசி இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரித்துள்ளது பெறும் வியப்பு.... !!!!

குழந்தைகளின் மனோநிலை என்னவாகும்?, படிப்படியாக பழசை மறக்க தொடங்கும் ஒரு நிலையில், திரும்பவும் அதை கிளறிவிட்டால் அவர்கள் எந்த வகையில் அதை தாங்கிகொள்வார்கள், என்று BBCக்கு கொஞ்சம் கூட நினைக்க தெரியாமல் போனது தான் எப்படி என்று விளங்கவில்லை.

இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்,
அவர்களை அழைத்து அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தியிருக்கலாமே.....! ஏன் இந்த பிஞ்சுகளை அஞ்சலி என்ற பெயரில் கொதி தண்ணீருக்குள் மீண்டும் போட வேண்டும்?

குழந்தைகள் ஒன்றும் திரித்து சொல்லமாட்டார்கள்.... உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள் என்று நினைத்து இருக்கலாம்..., ஆனால் அந்த பிஞ்சு மனங்களை மீண்டும் கீறி காயப்படுத்துவதில் அந்த சிறார்கள் என்ன ஆவார்கள் என்று யோசிக்க முடியவில்லையா...,? அல்லது பயங்கரவாத்திற்கெதிரான போர் என்ற பெயரில் உலக அரங்கில் அனுதாபம் பெற செய்த திட்டமிட்ட கைங்கரியமா?..... யார் என்னவானால் எனக்கென்ன நான் நினைத்தது நடந்தால் சரியென்ற ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சிகளின் தூண்டலா?

உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் மனிதம் தெரிந்த, மனித நேயம் கொண்ட, எந்த மனிதனும் மனித கொலைகளை இனம், மொழி, நாடு, மதம், நிறம், சாதி என்பன துறந்து கண்டிக்க தவறுவதில்லை, அதுவும் அந்த கொலைகளை எந்த சட்டை போர்த்தி யார் செய்தாலும். ( நான் மட்டும் தான் இப்படி ஒரு கோக்கு மாக்கு நெனப்புல இருக்கிறோனோ? தெரியலீங்க!).

மேலும் இந்தமாதிரியான ஒரு நிகழ்ச்சியால் தான் பயங்கரவாத்தை உலகிற்கு வெளிகாட்டனும் என்ற அவசியம் இருந்தால், இந்த உலகம் சீக்கிரம் அழிந்தால் மிகவும் நல்லது என்றுதான் தோன்றுகிறது இந்த கிறுக்கனுக்கு.

பெரியவர்கள் நடத்தும்
பலப்பரீட்சையின் காலடியில்
பாவம் அந்த
பிஞ்சு மலர்கள்!


சரி..., நடந்தது நடந்து போச்சி...

இனி அந்த கோர சம்பவம் எப்படி இருந்தது என்று பார்த்தால்..... ஏன் மனிதன் இப்படி ஆகிவிட்டான் என்று ரொம்பவும் வியப்பாகவும் பயமாகவும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும், எதை பார்த்தாலும் கொலை அல்லது கொல்!.... ச்சே!...... என்ன உலகமோ தெரியவில்லை. நான் அப்படியே நிகழ்சியை பார்த்துகொண்டிருக்கிற போது அழுது விட்டேன்.

இனிமேல் எனக்குள் இருக்கும் கொஞ்ச கடவுள் நம்பிக்கையும் அப்படியே அற்றுவிடும் போலிருக்கிறது.... எல்லா கடவுள்களும் பொய்... கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படி? நடக்குமா?... அந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தன?....

அந்த வெறித்தனம், அந்த காட்டுமிராண்டிதனத்தை ( இதை எந்த சொல் கொண்டு சொன்னால் அது மொத்த அர்த்தப்படும் என்று தெரியவில்லை), எல்லாரும் அறிந்தார்களா தெரியவில்லை..... எதிர்கால உலகம் என்னவாகும் என்று உண்மையிலேயே கவலை கொள்ளும் ஒரு சில அன்பர்களாவது தெரிந்து கொள்ளட்டும் என்று தான் கீழே வருபவற்றை எழுத விழைகிறேன்.

அந்த பிஞ்சுகள் பேசிய.... பாதி அழுகையும்... பாதி பயமும்... கலந்த வார்தைகளில் சில...

"எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை, எங்களால் தாங்க முடியாத நேரத்தில் மற்றவரின் சிறுநீரை அருந்த தொடங்கினோம்"... என்கிறாள் ஒரு சிறுமி.

"அதிலும் ஒரு பெண்மணி தனது சிறு நீரை தந்த போது அதை குடிக்க கூட எனக்கு உனக்கு என்று அதிக போட்டிகள்"..... என்று இன்னொறு சிறுமி.

"அந்த பயங்கரவாத கூட்டத்திற்குள் ஒரு பெண் இருந்தாள்.... அவள் ஒரு போத்தல் தண்ணீரை எடுத்து பக்கத்தில் தண்ணீர் கேட்ட சிறுமிக்கு கொடுத்திருக்கிறாள்... அதை அந்த கூட்டத்து தலைவன் பார்த்து விட்டானாம், உடனே அவனது கையிலிருந்த ரிமோடடை இயக்கி அந்த பெண்ணை அந்த இடத்திலேயே வெடிக்க செய்து விட்டானாம், அவள் தற்கொலை குண்டுதாரியாக இருந்தாளாம் "... என்று இன்னுமோர் சிறுமி.

"தன்னிடம் 15 ரூபிள் பணம் இருந்ததாகவும், அதை தான் தருவதாகவும் தன் தாய் சுகமில்லாது இருப்பதால் அவரை விடுதலை செய்யும்படி தீவிரவாதியிடம் வேண்டிதாகவும்"... ஒரு சிறுவன் சொன்னான்.

"கடும் சண்டையின் நடுவே இன்னோர் தாய் தன் மகளை தப்பியோடும்படி சொல்லி உதவிடும் நேரத்தில் சுடப்படுகிறார்".... அந்த நேரத்திலும் அவர் மகளே ஓடு ஓடு என்று தான் கத்தினாராம்... அதை அந்த மகளே சொல்கிறாள்...

இன்னோர் சிறுமி "தான் தப்பி வெளியில் வந்து விட்டாராம்..., ஆனால் தனது தாயை தேட வேண்டும் என்று மீண்டும் ஜன்னல் ஏறி உள்ளே போக முயற்சித்தாராம், அப்போது ஒரு குண்டு வெடிக்க வெளியில் தூக்கி எறியப்பட்டுவிட்டாளாம்"....

இப்படியாக கோரப்பேய்கள் ஆடிய தாண்டவ கதைகள் ஏராளம், வேண்டாம் என்னால் சொல்லவும் முடியாது, எழுதவும் முடியாது....

இனி, பாருங்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எப்படி குரூரம் விதைக்கபட்டுவிட்டது என்று.....

...... ஒரு சிறுவன் "நான் எதிர்காலத்தில் ஒரு ஜனாதிபதியாக வருவேன்... அப்படி வந்தால் தீவிரவாதிகளை கொல்வது தான் என் வேலை என்கிறான்.

நான் தீவிரவாதிகளை படமாக வரைந்து அவற்றை தாறுமாறாக கிழித்து தீவைத்து திருப்திபடுகிறேன்... ஆனால் எனக்கு இது போதாது... இன்னும் ஏதாவது அதிகம் செய்து அவர்களை பழிதீர்க்க வேண்டும்..... என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.

எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை, எனக்கு ரஷ்யா மீதும் அதன் ராணுவத்தின் மீதும் தான் நம்பிக்கை அதிகம்.... என்று இன்னொறு சிறுவன் சொல்கிறான்.

நான் பெரிய ஆளாக ஆனதும் செச்னியாவிற்கு போய் அந்த தீவிரவாதிகளை பழிதீர்ப்பேன் என்கிறான் இன்னொறு சிறுவன்.

இன்னொறுவன் சொல்கிறான்... "அவர்கள் உள்ளே வந்ததும் மேலே வானத்தை நோக்கி சுட்டார்கள்... நான் பயப்படவில்லை மாறாக சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் அவர்களது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்துவிடுமே என்று".....

பாருங்கள் எதிர்கால சந்ததி, சமுதாய தலைவர்கள், என்று உலகம் எதிர்பார்க்கிற இந்த சின்னஞ்சிறார்கள்.... எப்படியான சூழலில் வளர்கிறார்கள்... அல்லது வளர்க்கப்படுகிறார்கள் என்று. இதற்கு தான் நான் மேலேயே சொன்னேன், இந்த உலகம் சீக்கிரம் அழிந்தால் நல்லது என்று.

இதில் நான் அந்த பாஸ்லான் குழந்தைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன், ஆனாலும் வெளியில் தெரியாமல் அல்லது யாராலும் வெளி உலகுக்கு காட்டப்படாமல் நமக்கு தெரியாமல் இந்த பூமியில் எத்தனை ஆயிரம் பிஞ்சு மணங்கள்... எத்தனையாயிரம் துயரங்களை கொண்டு வாழ்கின்றன... எத்தனை நூறு பேர்கள் மடிந்து போகிறார்கள்..., அல்லது மடிந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது தெரிகிறதா?

எத்தனை எத்தனை விடுதலை போராட்ட கூட்டங்கள், எத்தனை பணக்கார அரசியல் ஆட்சிகள், வல்லாதிக்க அரசியல்கள், நாடுகள், நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள்... மதம் பேசித்திரியும் கூட்டங்கள், ஆனால் யாராவது இதைப்பற்றி யோசிக்கிறார்களா?

அறிவியல் என்கிறோம், விஞ்ஞானம் என்கிறோம், தொழில் நுட்பம் என்கிறோம் பூமியை விட்டு வெளியே என்ன இருக்கு என்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.... கம்பூட்டர் என்கிறோம், அரசியல் புதுமையென்கிறோம், புரட்சியென்கிறோம்.

ஆனால் எதிர்காலம் என்பது பூமிக்கு கானல் நீராகிவிடுமோ? என்று தான் எண்ணவைக்கிறது.....!

செப்டம்பர் 04, 2005

இதோ ஒரு உண்மை சம்பவம், (பகுதி இரண்டு)

அவசர காலசட்டமும் தமிழர் படும் பாடும்
என்ற பதிவின் தொடர்ச்சி....

......நான் வெளியில் அமர்ந்திருந்த அந்த தாயிடம் பேச்சு கொடுத்தேன் அவர் சொன்ன தகவல் பெரும் அதிர்ச்சியை தந்தது, அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர், மறுநாள் காலை அவரது இளைய மகளுக்கு ஏதோ தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக போக வேண்டும், அவருக்கு இதயத்தில் ரத்த ஓட்ட பகுதியில் ஏதோ சிகிச்சையாம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவர்கள் அன்று மாலையில் தான் கொழும்பிற்கே வந்திருக்கிறார்கள், "அதற்குள் அவசரகால சட்டம் அதன் வேலையை காட்டிவிட்டது".

அந்த தாய் எங்கள் ஊர் பேர் விபரம் எல்லாம் கேட்டார், மிகவும் அன்பாக பேசினார். பின்னர் சொன்னார் " என்ன தம்பி இப்படி ஜோக் அடித்து கொண்டிருக்கிறீங்கள்..., பேசாம உட்கார்ந்து பிராத்தனை பண்ணுங்கள் கெதியா வீட்டுக்கு அனுப்ப வேணும் என்று. நான் சொன்னேன் கடவுள் வருவதாய் இருந்தால் அவர் கொழும்பில் எத்தனை ஜெயிலுக்கு தான் போவார் என்று...

எனக்கு என் மன நிலையை சொல்ல வார்தையில்லை, மனதில் சோர்வு, ஒரு வித பயம்.... எங்களை 29ம் திகதிக்குள் வெளியில் விடுவார்களா?.... இசை நிகழ்ச்சிக்கு போக முடியுமா? என்ற எண்ணம் வேறு. மேலும் எல்லாரும் நின்ற நிலை, உட்கார முடியாது காரணம் இடம் காணாது, எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும் பிறகு ஒவ்வொருவராக மாறி மாறி அந்த தரையில் அமர்ந்து எழ தொடங்கினோம். விடிய ஒரு ஐந்து மணியிருக்கும் நான் அப்படியே தரையில் அமர்ந்தேன், சுவரில் சாய்ந்து தூங்கிவிட்டேன்.

இரண்டாவது நாள் காலையிலேயே எங்கள் முத்த சகோதரரின் கடையில் இருக்கும் அவரது உதவியாளாகள் விடயம் கேள்விப்பட்டு ஓடி வந்து விட்டார்கள், அவர்கள் போய் அந்த நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில விசரணைகள் இருக்கும் அது முடிந்ததும் அனுப்பிவிடுவோம் என்று.

சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணீர் கிடையாது, அப்படியே உறவினர்கள் எங்களை பார்க்க வருபவர்கள் ஏதாவது வாங்கி வந்தாலும் சாப்பிட முடியாது, அந்த சூழல் அப்படி...., மேலும் வாழ்கையில் முதல் அனுபவம், போலீஸ், கைது, சிறையென்று,

ஆனால் 29ம் திகதி அன்று காலை ஒருவரை கைது செய்து வந்து எங்களுடன் சிறையில் இட்டார்கள், வந்தவர் எங்கள் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார் அப்போது எங்கள் மத்தியில் இருந்த இன்னொரு இளைஞரை அடையாளம் கண்டு கொண்டார்..... இருவரும் சிங்களத்தில் உரையாடிக்கொள்கிறார்கள். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை அந்த இருவரும் மக்களிடம் பணப்பை திருடும் வழக்கத்தை கொண்டவர்கள், (பிக்பொக்கட் என்று தமிழில் சொன்னாதானே விளங்கும் இல்லீங்களா? ).

பிறகு நடந்தது தான் வேடிக்கை, வந்தவர் உரக்க தமிழும் சிங்களமும் கலந்து சொல்கிறார் " மே மினிசு புலி நெவே! எலி!....,
புலி இன்னே கெலே!, மூங் எலி! அப்பராதே பாங், மூவ கெனல்லா தியேன்னே".

அதாவது "ஏய் இவர்கள் எல்லாம் புலி இல்லை சாதாரண எலி, புலியெல்லாம் காட்டுக்குள்ளே இருக்கு அநியாயமா போய் எலியை பிடித்து வந்திருக்கிறீர்களே" என்று கிண்டலாக சொன்னார். கிண்டலில் கூட உண்மை இருக்க தான் செய்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் கையில் ஒரு குழந்தையுடன் ஓடி வந்தார்... வந்தவரின் மனைவி என்று பிறகு புரிந்தது. வந்தவர் கம்பிகளுக்கருகில் நின்று அழுதார், அதற்கு அந்த நபர் சொன்னார், இதை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறேன் சிங்களம் வேண்டாம்!

" இந்தா இங்க ஒன்னும் அழுவ வேணாம், நான் இன்னும் ஐந்து நாட்களில் வந்து விடுவேன், என்ன சரியா? இந்தா அதுவரை செலவுக்கு பணம் என்று ஏதோ கொஞ்சம் பண நோட்டுகளை சுருட்டி அவர் கையில் திணித்தார், பிறகு அந்த பெண் குளிர் பானமும், ஏதோ சாப்பிட சிற்றுண்டியையும் ஒரு 3 சிகரெட்டையும், ஒரு சாரமும் ஒரு பையில் வைத்திருந்து கொடுத்தார், அதை வாங்கிக்கொண்ட நபர், சரி சரி போயிட்டு வா, ஒன்னுக்கும் யோசிக்காதே ! நான் வந்து விடுவேன் என்றார்.... எனக்குள் ஆச்சர்யம் என்ன ஒரு உறுதியான நம்பிக்கை.

இவரை கற்பனை செய்து கொள்ள நமது தமிழ் திரைப்படங்களில் தலைவாசல் விஜய் சேரி பாத்திரம் ஏற்று நடிக்கும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை நினைத்து கொண்டால் போதும். கன கச்சிதமாக பொருந்தும். மகளிர் மட்டும் படத்தில் வரும் பாத்திரம் அப்படியே.

பிறகு அவர் என்ன செய்தார் தெரியுமா?... உடனே உள்ளே இருக்கும் கழிப்பழறைக்கு போய் தான் கட்டியிருந்த சாரத்தை (லுங்கியை) அவிழ்த்தார். நிலத்திலிருந்து இரண்டடி உயரம் மட்டுமே கொண்ட தண்ணீர் குழாயை திறந்து சாவகாசமாக குளித்தார்.... திரும்பி வந்தார் மனைவி தந்திருந்த லுங்கியை எடுத்து தலையை துவட்டிக்ககொண்டு அதையே கட்டிக்கொண்டார்.

பிறகு எங்கள் எல்லாரையும் முன்னால் இருக்கும் சிறைக்கதவை மறைத்து நிற்கும் படி சொல்லவே நாங்களும் நின்றோம், உடனே அவரும் அவர் கூட்டாளியும் ஒன்றாக உட்கார்ந்தார்கள், அவர் ஒரு சிகரெட்டை எடுத்தார், மற்றவர் தனது இடுப்பில் இருந்து ஏதோ ஒரு மிகச்சிறிய பொட்டலம் ஒன்றை எடுத்தார், முதலாமவர் சிகரெட்டை பற்றவைத்தார், மற்றவர் பொட்டலத்தை விரிததார்............,

என்ன நடக்கிறது என்று பர்க்க வேண்டும் என்ற ஆவலில் நான் லேசாக திரும்பி அவர்களை பர்ர்த்தேன் உடனே முதலாமவர், என்னை தன் பக்கம் பார்க்க வேண்டாம் என்று ஓரு அதட்டல் விட்டார், எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது. எல்லாரும் என்னை பார்த்த பார்வையில் நான் அசடு வழிந்து நின்றேன். பிறகு இருவரும் எழுந்தார்கள், திண்ணையில் ஏறினார்கள் நன்றாக தூங்கிப்போனார்கள். ஆகா! கவலையில்லாத மனிதர்கள் போலும் என்று என் சகோதரனிடம் சொன்னேன்.

...., மாலை 3 மணிக்கு பின்னர் தான் ஒவ்வொருவரையாக வெளியில் கூப்பிட்டு வைத்து விசாரிக்க தொடங்கினார்கள். என்னையும் என் சகோதரனையும் கூப்பிட்ட போது 2வது (29ம் திகதி) நாள், நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டேன்.

நாங்கள் நினைத்திருந்தோம் ஒரு நாளையில் அனுப்பிவிடுவார்கள் என்று. அப்படியில்லை என்றானபோது ஒருவித பயம் வந்து விட்டது. ஒவ்வொருவரையும் விசரித்து அதனை அவரவர் ஊரில் உள்ள போலீஸ் நிலையத்துடன் ஓப்பீடு செய்து அறிக்கை வந்தால் தான் வெளியில் விடுவார்கள் என்று. உள்ளே எங்களுடன் இருந்த ஒருவர் சொன்னார். அப்படி ஒப்பீடு செய்யும் போது நமது தகவல்களில் ஏதாவது முரணபட்ட பதில்கள் தகவல்கள் இருந்தால் அந்த நபரின் விடுலை தள்ளிப்போடப்படும்..... அப்படி தள்ளிப்போடப்பட்டால், அந்த நபரை இந்த பொலீஸ் நியைத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி விடுவார்கள் என்றும் மேலதிக தகவலாக சொன்னார்... உண்மையிலேயே எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த மாதிரி தான் இருந்தது.

ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன, நாலைந்து போலீஸார் ஒவ்வொருவரையாக தனித்தனியாக அழைத்து விசரிப்புகளை செய்தார்கள்.

என்னை அழைத்து விசாரித்த உத்தியோகத்தர் மலாய் சமூகத்தை சேர்ந்தவர்
நான் இது வரை அடக்கி வைத்திருந்ததை அப்படியே சற்று உணர்ச்சி பொங்க கொட்டிவிட்டேன், அனால் அவர் எல்லாம் பொறுமையாக கேட்டார்...., கேட்டுவிட்டு சொன்னார் எங்களுக்கு எல்லாம் தெரியும், ஆனாலும் என்ன செய்ய சட்டம் அப்படி..... நாங்கள் எங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுகிறோம் அவ்வளவு தான். என்றார்.


இந்த இடத்தில் நான் விளங்கிக்கொண்டது என்னவெனில் இலங்கையில் அதிகார மட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் எல்லா விபரமும் தெரியும், ஆனால் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.... ஆனால் இந்த நடிப்பை அரங்கேற்ற அப்பாவி தமிழர்கள் தான் கிடைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு.

பின்னர் அவராகவே பொலீஸ் நிலைய அதிகாரிகளுக்கென உள்ள சிற்றுண்டிச்சாலையில் எனக்கு தேநீர் வாங்கி தந்து, என்னை அங்கேயே அவர்களின் உபயோகத்திற்காக உள்ள கழிப்பறையில் பல் துலக்கி முகம் கழுவ செய்து...., மிகவும் நன்றாக உபசரித்து கண்ணியமாக நடந்து கொண்டார்.... எனக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.

பிறகு விசாரணை ஆரம்பம்....., பிறந்தது எங்கே வாழ்ந்தது அல்லது இப்போது வசிக்கும் இடம். கல்வி பயின்ற பாடசாலை...., நெருங்கிய பாடசாலை நண்பர்கள்..., ஆசிரியர்கள், பிறகு எங்கு வேலை செய்தீர்கள்..., இப்போது என்ன செய்கிறீர்கள்..... தாய் தந்தை யார்?, என்ன தொழில் செய்கிறார்கள்?, சகோதர சகோதரிகள்..., யார்? யார்? என்ன என்ன செய்கிறார்கள்?.... கொழும்புக்கு வந்த நோக்கம்?, தங்கியுள்ள வீட்டின் நிலவரம்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவு முறை.... அப்பப்பா!... பாதி கேள்விகள் எனக்கு மறந்தும் போய் விட்டது.....

அதற்குள் எங்கள் விடயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து எங்கள் வீட்டிலிருந்து எங்கள் பிரதேச போலீஸுக்கு போய் விபரங்களை கொடுத்து எங்களை வெளியில் கொண்டு வர முயற்சிகளை எனது தந்தையார் செய்து கொண்டு இருக்கிறார் என்று எங்களுக்கு தகவல் வந்தது.... கடவுளே ஒரு சிறிய ஆறுதல்.

ஆனாலும் ஏப்பிரல் மாதம் 31ம் திகதி ஆகிவிட்டது, அன்று காலையில் தான் முதன் முதலில் ஒருவரை வெளியில் செல்ல அனுமத்தித்தார்கள். அவர் ஒரு வர்த்தகர் கொழும்பில் பல வருடங்களாக இருப்பவர், வெளிக்கடை சிறை இப்படி இப்படியென எங்கள் வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான்.

மற்ற யாரையும் விடுவிக்கவில்லை, இப்போது ஒரு புதிய சிக்கல் அடுத்த நாள் மே முதலாம் திகதி. மே தினம்.! ஆகவே எல்லா பொலீஸாரும் வெளியில் கடமைக்கு போகப்போவதாயும் அதனால் எங்கள் எல்லாரையும் அங்கு பொலீஸ் நிலையங்களில் வைக்க மாட்டார்கள் என்றும் அன்று மாலை எல்லாரையும் வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றிவிடுவார்கள் என்று முதல் நாள் வந்திருந்த அந்த திருடன் சொன்னான்.

எனக்கு வாழ்கை முற்றுமாக வெறுத்து விட்டது. ஏனென்றால் மத்திய சிறைச்சாலையென்பது, முற்றிலுமாக வித்தியசமான போக்குகளையும் சூழலையும் கொண்டது. அதற்குள் போனால் பிறகு சுலபமாக வெளியில் வர முடியாது, அதன் பிறகு வக்கீல் வைத்து நீதிமன்றம் போய்... அதை செய்து இதை செய்து தான் வெளியில் வரவேண்டும். எப்படியும் 15 அல்லது 20 நாட்கள் போகும்.

ஆனால் தெயவாதீனமாக எனது தந்தையின் உடனடி நடவடிக்கையால் எங்கள் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் வழியாக எங்கள் பிரதேச போலீஸ் பொறுப்பதிகாரியே எங்களை தடுத்து வைத்திருந்த மோதரை பொலீஸுக்கு எங்களை பற்றி தகவல் சொல்லி எங்களை வெளியில் அனுப்ப சொல்லிவிட்டார்....,

நேரம் மாலை 5.00 மணியிருக்கும் எல்லாரும் அடுத்து வரபோகும் பெரிய சிக்கலை பயத்துடன் எதிர்பார்த்து இருக்கும் போது, எங்கள் இருவர் பெயரை கூப்பிட்டு திறந்து விட்டதும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை....,

எங்களுடன் கூட இருந்த யாரிடம் என்ன பேசுவது...., நாங்கள் போகிறோம் என்று கூட சொல்ல முடியாத நிலை. ஏனென்றால் வெளியில் போகும் போது எங்களை உள்ளே இருக்கிறவர்களிடம் பேச விடமாட்டார்கள். நான் எல்லாரிடமும் கண்களாலே சைகை செய்து போகிறோம் என்று சொல்லி வெளியேறினேன். ஆனால் எல்லார் கண்களிலும் தாங்கள் எப்போது விடுவிக்கபடுவோம் என்ற ஒரு ஏக்கம் மட்டும் தான் தெரிந்தது....

வெளியில் வந்தால் உள்ளே இருப்பவாகளின் மனைவி மார்கள், சுகோதரர்கள் உறவினாகள், என்று ஏகப்பட்டவர்கள் உள்ளே உள்ளவர்களை அழைத்து போக வந்து காத்து நிற்கிறார்கள்.... எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு போட்டதை போட்டடபடி அப்படியே போட்டுவிட்டு வந்து காத்து நிற்கும் பரிதாபமான காட்சி...

எங்களை கண்டதும் மற்றவர்கள் என்ன ஆனார்கள் எப்போது வருவார்கள்?.. என்ற கேள்விகள் மட்டும் தான் எல்லாரிடமும் இருந்து வந்தன. இன்றைக்கு விடுவார்கள் என்று எல்லாருக்கும் ஒரு பொய்யான பதிலையே சொல்லிக்கொண்டு வந்தோம்.... எங்களால் வேறு என்ன செய் முடியும்.

இதன் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது... எத்தனை நாட்கள் உள்ளே இருந்தார்கள், வைத்தியத்திற்காக தன் பிள்ளைகளுடன் வந்திருந்த தாய், தனது எதிர்காலத்திற்காய் கனடா செல்ல வந்த அந்த இளைஞன்..... என்ன ஆனார்கள் எனபது யாருக்கு தெரியும்.

அன்று நான் வீடு திரும்பியதும் எனக்குள் இனி நமக்கு இலங்கை வேண்டாம், எங்காவது போய்விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அன்று இரவே எங்கள் ஊருக்கு திரும்பிவிட்டேன். ஒரு மூன்று மதங்கள் வரையில் நான் வீட்டை விட்டு எங்குமே வெளியில் கூட போகவில்லை..... அந்த அதிர்ச்சி தந்த பயத்தில்.

அதன் பிறகு சரியாக இரண்டு மாதங்களில் மிகுந்த முயற்சி செய்து இப்போது நான் செய்யும் தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்கு வந்த விட்டேன்.....

நண்பர்களே!...
இதில் நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை, சில வேளை உங்களுக்கு இது சுவராசியம் அற்று இருக்கலாம்.... அல்லது உங்களில் யாருக்காவது ஒருவருக்கு இதை விட கொடுமையான சம்பவங்கள் நடந்திருக்கலாம்.

இந்த பதிவின் நோக்கம்
இலங்கையின் அவசரகால சட்டம் ஒரு சாதாராண தமிழனை, என் போன்ற பல்லாயிரக்கணக்காண தமிழர்கள் வாழ்வை எப்படி பாதிக்கிறது எனபதை காட்டவே!

இந்த சட்டம் நீடிக்கவேண்டுமா?..... இந்த சட்டம் யாருக்காக?.... மக்களை பாதுகாக்க என்ற போர்வையில் மக்களையே பலிகொள்ளும் பெரும்பான்மை அரசியல் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு வருமா?

ஆகஸ்ட் 31, 2005

இதோ ஒரு உண்மை சம்பவம்

அவசர காலசட்டமும் தமிழர் படும் பாடும்
என்ற பதிவின் தொடர்ச்சி.....

1996 ஏப்ரல் மாதம் 27ம் திகதி.

நான் இசைக்குழுக்களில் அங்கம் வகித்த காலங்களில், நானும் எனது நண்பர் ஒருவரும் ( இருவரும் சகோதரர்கள் மாதிரி). எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் எது செய்தாலும் இருவரும் தான்,.... அந்த காலங்களில் எங்கள் இரு வீடுகளிலும் நாங்கள் இருவரும் வாங்காத ஏச்சு கிடையாது, சும்மா மியூசிக், மியூசிக்கென்று வெட்டியா ஊர் சுத்துரோம் என்று, இருவரும் தொழில் செய்தாலும் மனசு எப்போதும் இசைபற்றிதான்....

உண்மையில் "அது ஒரு நிலா காலம்" தான்...... சரி அது ஏன் இப்போ விடயத்துக்கு போவோம்....

சரி!

மேற்சொன்ன தினத்தன்று கொழும்பிற்கு ஒரு இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்வதற்காக கிடைத்த அழைப்பை ஏற்று வந்திருந்தோம். 29ம் திகதி நிகழ்ச்சி ஏற்படாகியிருந்தது, 27ம் திகதி காலை இருவரும் நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு சென்றுவிட்டு மாலை எனது நண்பரின் மூத்த சகோதரர் வீட்டிற்கு சென்றோம். கொழும்பு வந்தால் வழமையாக அங்கு தான் தங்குவது வழக்கம். அவர் கொழும்பில் ஆடைகள் வியாபாரத்தில் உள்ளவர் மோதரை பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இத்தனைக்கும் அந்த வீட்டின் சொந்தகாரர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சோந்தவர்கள். எங்களுக்கு பக்கத்து வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.

வீட்டிற்கு போனால் அங்கே அண்ணியின் முதல் பிரசவத்திற்காக அவர் தனது செந்த இடமான தலவாகலைக்கு போக வேண்டி, (அதாவது எங்கள் வீட்டுக்கு), கிளம்பி கொண்டிருந்தார். சரியென்று அவரை வழியனுப்பிவிட்டு நாங்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு, சுயாதீன தொலைக்காட்சியில் (ITN) ஒளிபரப்பான ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம் பார்த்து கொண்டிருக்கையில், ஒரு 12.30 நடு இரவு திடீரென எங்கள் வீட்டை சுற்றி காலடியோசைகள்..... நாங்கள் என்ன ஏது என்று யோசித்து முடிவெடுக்கும் முன் வீட்டு கதவு தட்டப்பட்டது திறந்தோம் திடு திடுவென் போலீசார் உள்ளே புகுந்தார்கள். எங்களின் அடையாள அட்டையை கேட்டார்கள் கொடுத்தோம், எங்கே பதிவு செய்த கடிதம் என்றார்கள் நாங்கள் உண்மை நிலையை எடுத்து சொன்னோம்.... பக்கத்து வீட்டார் ( எங்கள் வீட்டு சொந்தக்காரர்) அவர்களும் வந்து எங்களை பற்றி விபரம் சொல்லியும் யாரும் கேட்கவில்லை,

மாறாக அவர்களை ஒரு போலீஸ்காரர் திட்டுகிறார் " உம்பலா தமாய் கொட்டியின்னட சப்போர்ட் கரண்ணே! " அதாவது நீங்கள் எல்லாம் தான்டா புலிக்கு ( த.வி.பு) உதவி செய்கிறீர்கள் என்று.....

இன்னொரு போலீஸ் எங்களை அடிக்க கை ஓங்கியது...., யார் செய்த புண்ணியமோ அடிக்கவில்லை. நாங்கள் கட்டியிருந்த லுங்கி, மேலே போட்டிருந்த டீ சேர்ட்டுடன் கையில் எங்கள் அடையாள அட்டையை பிடித்தபடி போலீஸ் பஸ்சில் ஏற்றப்பட்டோம்,

ஏற்றும் போது என்ன சொன்னார்கள் தெரியுமா? போலீஸில் ஒரு சில வழக்கமான விசாரிப்புகள் இருக்கின்றன... உடனே வந்து விடலாம் என்றார்கள்.

அவ்வளவு தான் விடியற்காலை ஒரு இரண்டு மணியளவில் அந்தப்பகுதியில் உள்ள எல்லா இடங்களையும் தேடி முடித்து எங்களோடு சேர்த்து ஒரு பத்து பன்னிரன்டு பேருடன் மோதரை போலீஸில் சிறையில் கொண்டு போய் அடைக்கப்பட்டோம்.

நான் சுற்றி சற்று நோட்டம் விட்டேன், எனது மற்ற சகோதரன் பேசவேயில்லை, ரொம்பவும் சூழ்நிலையால் பாதிக்கபட்டிருந்தார். பக்கத்து அறையில் ஏற்கனவே ஒரு எட்டு பத்து பேர் வரையில் இருக்கிறார்கள். எங்கள் அறைக்கு வெளியே ஒரு பெஞ்சில் ஒரு தாய் தனது இரண்டு மகளுடன் அமர்ந்திருக்கிறார், கொஞ்சம் தள்ளி இன்னும் கொஞ்ச பெண்கள் எங்களை போல் சந்தேகத்தில் அழைத்து வரப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

நாங்கள் விடப்பட்ட அறையில் ஓரு சிறிய திண்ணை போல சீமெந்தால் கட்டப்பட்ட ஒரு பகுதி, கைதிகள் நித்திரை செய்ய என்பது தெரிந்தது, அதை தாண்டி கதவுகள் இல்லாத ஒரு கழிப்பறை மாத்திரம், ஒரு சிறிய தண்ணீர் குழாய் தரையிலிருந்து ஒரு இரண்டடி உயரத்தில், ஓரு பழைய வெற்று பெயிண்ட் கொள்கலன் ( பெயிண்ட் டின்), துருப்பிடித்து, தனது உண்மை வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு......

சுத்தம் என்பது மருந்துக்கும் கிடையாது, ஒருபுறம் புழுக்கம், இன்னொரு புறம் துர்நாற்றம்....., தாங்க முடியவில்லை.

நான் இருந்த அறையில் ஒரு ஏழு பேர் வரையில் இருந்தோம். அந்த அறையில் ஒரு இளைஞர், ஒரு நாளுக்கு முதலே அவரை அழைத்து வந்திருக்கிறார்கள் சந்தேகத்தின் பேரில், பாவம் அவர் இரண்டு நாட்களாக பச்சை தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவரது தந்தையாரும் மற்றவர் உறவினர் என்று நினைக்கிறேன் இருவரும் வெளியிலிருந்து ஏதேதோ சமாதானம் சொல்கிறார்கள் ஆனால் அவர் கேட்பதாய் இல்லை. உரக்க கத்துகிறார், " எப்படியாவது என்ன வெளியில எடுங்கோ..." என்று. காரணம் என்ன தெரியுமா? அவரது உறவினர் சொன்னார் அடுத்த நாள் அவர் கனடா பயணமாக போகிறார் அதற்காக தான் கொழும்புக்கு வந்திருக்கிறார், என்று...

அந்த பயணத்தில், அவரது எதிர்காலத்தின் கனவில், மண்விழுந்து விட்ட சோகம், ஆற்றாமை, துடிப்பு தான் அவரை அவ்வாறு செய்ய தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பார்க்க வந்தவாகள் எல்லாரையும் போலீஸார் திருப்பியனுப்பிவிட்டனர். இப்போது போலீஸ் நிலையத்துள் அழைத்து வரப்பட்டவர்கள் மட்டும்.
நான் என்ன செய்தேன் தெரியுமா அந்த இடத்தின் வெறுமையை, சோகத்தை, போக்க நினைத்து எனது சகோதரனுடன் சேர்ந்து கொண்டு நகைச்சுவையாக பேச தொடங்கினேன் அங்கிருந்தவர்களிடம், எனது நோக்கம் அப்படியாவது
எங்களோடு இருந்தவர்கள் மத்தியில் ஒரு இறுக்கம் நீங்கி ஒரு பரஸ்பரம் வந்தால் எல்லாரும் சற்று கவலை மறக்கலாமே என்ற நினைப்பில். நேரம் நகர நகர எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயமானது போன்ற உணர்வு வரத்தொடங்கியது....

தொடர்ந்து வரும்.......!

ஆகஸ்ட் 30, 2005

கொழும்பிலே! மீண்டும் கோவிந்தா,

கொழும்பிலே!... மீண்டும் கோவிந்தா,

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கிறது, அதுவும் கொழும்பிலே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் ராணுவம் மற்றும் போலீஸ் உசார் நிலையில் இருக்கிறது. சோதனை சாவடிகள்.... சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், இத்தியாதி இத்தியாதி......

ஆனால் கொழும்பில் மீண்டும் சுடரொளி பத்திரிகை அழுவலகம் குண்டு வீசிதாக்கப்ட்டு இருக்கிறது. இதில் ஒருவர் பலியாகியிருக்கிறார், மற்றும் மூவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

பாருங்கள் இவ்வளவு பாதுகாப்பிற்குள்ளும், தைரியமாக மோட்டார் சைக்கிளிலே வந்து தாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இதில் என்ன பெரிய விஷேசம் என்றால், இன்று காலை இலங்கையில் இருந்து வெளிவந்திருக்கும் தினசரி பத்திரிகைகளில் அதுவும் தமிழ் மொழி அல்லாத எந்த பத்திரிகைகளிலும், (அதாவது சிங்கள மொழி அல்லது ஆங்கில மொழி பத்திரிகைகள்) இந்த விடயம் பற்றி தலைப்பு செய்தியாகவோ அல்லது முன்பக்க வசய்தியாகவோ வரவில்லை. டெயிலி நியூஸ் பத்திரிகை மட்டும் செய்தியை வெளியிட்டு இருந்தது.

இவ்வளவு தான் ஊடகங்களின் ஒற்றுமையும், ஊடக ஜனநாயகமும்!
இதிலிருந்து என்ன தெரிகிறது.....,

அட போங்கப்பா..!..!...!
தூங்குறவன எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியுமா?.....


தயானந்தா எங்கே.....! ?.

கடந்த வாரம் வெக்டோன் தொலைக்காட்சியின் இலங்கை கலையக பொறுப்பாளர், திரு.தயானந்தாவுக்கு கொலை மிரட்டல் செய்தி பற்றி எனது பதிவில் பதிந்திருந்தேன்.

அதன் பிறகு விடியல் நிகழ்சியில் இன்று வரை தாயானாந்தாவை காணவில்லை, அவரை நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டதா வெக்டோன் தொலைக்காட்சி, அல்லது அவர் நமக்கேன் வம்பு என்று விலகிவிட்டாரா?.... அல்லது கொஞ்சம் சூடு தணியட்டும் பிறகு தலைகாட்டுவோம் என்று விடுப்பில் சென்று விட்டாரா?. தெரியவில்லை

என்ன இருந்தாலும் அவர் இல்லாதது விடியல் நிகழ்ச்சியில் ஒரு இடைவெளி தெரிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அவரது கிண்டலும், கேலியும், கூடி நமட்டுசிரிப்பு என்று சொல்வார்களே அந்த ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்புடனுமான, அவரது அரசியல் அல்லது நடப்பு சம்பவங்கள் நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்களும் கருத்துகளும் மிகவும் ரசிக்க கூடியவை......,

என்ன செய்ய
எதையுமே தொடர்ந்து அனுபவிக்க முடியாது அல்லது கூடாது எனபது தானே
தமிழன் தலையெழுத்தாகி போயிருக்கிறது இலங்கையை பொறுத்தவரை!.

பத்திரிகை சுதந்திரம் கோயிந்தா!.... கோயிந்தா!

ஆகஸ்ட் 25, 2005

அவசரகால சட்டமும் - தமிழர் படும் பாடும்

உலகத்தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு.
யாரோ ஏதோ செய்தார்கள், அது வெற்றியா தோல்வியா? அல்லது அவர்கள் நினைத்தது நடந்ததா தெரியவில்லை... ஆனால் இலங்கை பேரினவாத அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

இதனால் மீண்டும் தமிழர் நிலை திண்டாட்டமாகி போனது தான் பெரும் சோகம்!

ஆம், கடந்த வார கதிர்காமர் கொலையின் பின்னர் இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.... !
இதன் தொடர்ச்சியாய், குறிப்பாக கொழும்பில் வரையறையற்ற கைதுகள் இடம்பெறுவதை காணக்கூடிய தாக இருக்கிறது... தினம் தினம் ஊடகங்களி்ன் தலைப்பு செய்திகளை இவை மாத்திரமே அடைத்து நிற்பதை எல்லாரும் அறிவோம்.

அதுவும் தமிழர் மட்டுமே இப்படி கைது செய்யப்படுகிறார்கள்....
சிறையில் விடப்படுகிறார்கள் என்று மட்டும் தெரியும். ஆனால் அப்படி கைது செய்யப்பட்டவர்கள் யார் பின்னர் அவர்களின் நிலையென்ன திரும்பவும் விடுதலை செய்யப்பட்டார்களா? யாருக்காவது தெரியுமா? அரசாங்கம் யாருக்காவது தெரியப்படுத்துகிறதா?, எந்த ஊடகத்துக்காவது தெரியுமா?

நேற்று சுடரொளி பத்திரிகையின் நிருபர் புகைப்படபிடிப்பாளர் இலங்கை பொலீஸ் அல்லது ராணுவம் அல்லாத ஜேவிபியின் ஆயுதம் தாங்கிய அங்கத்தவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவரது புகைப்பட கருவிகள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன.... உடமைகள் களவாடப்பட்டிருக்கின்றன, காரணம் சுடொரொளி பத்திரிகை விடுதலைப்புலிகளின் பத்திரிகை என்ற கண்ணோட்டத்துடன்.

கொழும்பிலே வைத்து இலங்கையின் எதிர்கட்சி தலைவரின் வீட்டுப்பகுதியில் வைத்து ஒரு தமிழர் கைது செய்யப்படடிருக்கிறார். அதுவும் இவர் நாட்டிலிருந்து ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னாலேயே புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் வசிப்பவர், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர், தற்போது விடுமுறையில் இலங்கைக்கு வந்து அவர் கல்வி பயின்ற ரோயல் கல்லூரியையும் அதன் விளையாட்டு மைதானத்தையும் தனது புகைப்பட கருவியில் பதிவுசெய்த வேளை, எதிர்கட்சி தலைவரின் வீட்டை படம் பிடித்தார் என்று கைது செய்யபட்டிருக்கிறார். ( அதாரம் வெக்டோன் செய்திக்குறிப்பு)

இப்படி வெளிவந்தவை கொஞ்சம் வராதவை ஏராளம் எழுதினால் எழுதலாம் எழுதிக்கொண்டேயிருக்கலாம்.

ஐயோ பாவம் தமிழர்கள்!
அதுவும் குறிப்பாக கொழும்பை நாடிவரும் தமிழர்கள்.

ஏன் வருகிறார்கள்?
கீழே நான் சொல்ல போவது இலங்கையில் இருக்கும் அல்லது அங்கிருந்து புலம் பெயர்ந்த தழிழர்களுக்கு தெரியும், ஆனால் இலங்கையை பற்றி அறியாத தமிழர்களுக்காக சற்று விளக்கமாக சொன்னால் தான் அவர்களுக்கு தமிழரின் பாடு புரியும் என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.

சாதாரணமாக நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பிற்கு தான் வரவேண்டும் என்பது கட்டாயம், இது எல்லாருக்கும் தெரியும்.

குறிப்பாக பார்ப்போமானால் ஏதாவது பெரிய நோய் அல்லது அது குறித்த சிகிச்சைக்காக, பெரிய வைத்தியசாலைகள் தேவையென்றால் அதற்கும் கொழும்புதான்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடி வரவேண்டுமென்றால் அதற்கும் கொழும்பு தான்....

அரசாங்க காரியங்கள் ஆகவேண்டுமென்றாலும், குறிப்பாக குடிவரவு குடியகல்வு ஆவணங்கள், பத்திரங்கள் அத்தாட்சிபடுத்தல் எல்லாம் கொழும்பு தான்...

அரசாங்க அமைச்சக அலுவல்கள் அதாவது இடமாற்றம், அல்லது பதவி நியமன கடிதம், சம்பள மாற்றத்தை உறுதிபடுத்த, அல்லது ஏதாவது ஆவணம் பெற, குறிப்பாக கல்வி திணைக்களம், சுகாதார திணைக்களம் சம்பந்தமானவை என்றாலும் கொழும்பு தான்.
இது குறிப்பாக தமிழருக்கு மாத்திரம் அதிகம் எனலாம்.

வாகனம், மற்றும் போக்குவரத்து திணைக்கள சம்பந்தமான அரசு சம்பந்தபட்ட வேலைகளுக்கும் கொழும்பு தான்....

யாராவது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க, அல்லது மனுக்களை தர அல்லது தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும் கொழும்புதான்.

மற்றது வெளிநாட்டில் வேலை செய்து வீடு திரும்பும் போதும் அவர்களை வரவேற்று எதிர்கொள்ளவும், அல்லது திரும்ப வழியனுப்பிவைக்கவும் கொழும்புதான்.

வெளிநாட்டு பொருட்களை கொண்டு சென்றால் அதை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கவும் கொழும்புதான் ( இது நாட்டின் ஏனைய ஒரு சில இடங்களில் இருந்தாலும் தழிழர்களுக்கு கொழும்புதான்)

இதில் இன்னோர் முக்கிய விடயம் வடக்கு கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் அல்லது அனுப்பிய பணத்தை பெற்றுக்கொள்ளவும், அல்லது அவர்களோடு தொலைபேசி தொடர்புகொள்வதற்கும் கொழும்பிற்கு தான் வரவேண்டும் என்ற கட்டாய நிலையிருந்தது, யுத்த காலங்களில் வடக்கு கிழக்கிற்கு அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்து இருந்த வேளையில்... இப்போது எப்டியோ தெரியாது.

அடுத்தது முக்கியமாக பெரும்பாலான தழிழ் இளைஞர்கள், யுவதிகள் தொழில் நிமித்தம் வருவதும் கொழும்பு தான். கொழும்பிலே தங்கம், மற்றும் ஆடை ஆபரண தொழில் மற்றும் வியாபாரம் அல்லது மற்ற வியாபாரத்தில் அநேகம் பேர் தமிழர்கள் தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும்.

மற்றது கலை துறை சார்ந்த வேலைகள், அதாவது தொலைகாட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டுமென்றாலும், ஏதாவது பிரத்தியேக ஒலி அல்லது ஒளிபதிவுகளுக்கும் கொழும்பு தான்.

இப்படி எதற்கெடுத்தாலும் கொழும்பு! கொழும்பு! கொழும்புதான்!,

ஆக இப்படி இருக்கும் நிலையில் கொழும்பு என்பது மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதது, தினம் தினம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகர் தேடி வரும்போது அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதது.

தலைநகரில் இரவு தங்குவது என்பது நிச்சயமற்ற ஒன்று, உறவினர், நண்பர் வீடோ? அல்லது விடுதிகளோ?, ஹோட்டல்களோ? எல்லாமே பயம் தான் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

ஆகவே தூர இடங்களிலிருந்து வருபவர்கள் அநேகர் இரவோடு இரவாக தான் தலைநகரை நோக்கி புறப்படுவார்கள் காரணம் காலையில் தலைநகருக்குள் வந்து தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலையில் தலைநகரைவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

மாலை ஆறு மணிக்கு பின்னர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்தை சென்று பார்த்தவர்க்கு தெரியும். வவுனியா, மட்டகளப்பு, மற்றும் பதுளை நோக்கி (முற்றிலுமான தமிழ் பிரதேசங்கள்) போகும் இரவு கடுகதி புகையிரதத்திற்கு எவ்வளவு சனங்கள் இருப்பாகள் என்பதை.
ஏன் தெரியுமா? இரவு தங்கி சிலநேரம் தாமும் சந்தேகத்தில் கைது செய்யப்படலாம் என்ற பயமும் அதனால் வரும் சிக்கல்களக்கு ஆளாக முடியாத பயமும் தான்.

மீண்டும் மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணியளவில், இதே கோட்டை ரயில் நிலையத்துக்கு சென்றால் தெரியும், மேற்சொன்ன இடங்களிலிருந்து புறப்பட்டு காலையில் கொழும்பை அடையும் இரவு கடுகதி புகையிரதத்தில் எவ்வளவு சனம் வரும் என்று.....

தங்களின் தேவைகளை சுமந்து கொண்டு, தூக்கம் தொலைத்து, களைத்து போய், தைரியத்தை கைவிடாது, ஒரு நிமிஷமும் வீணாகி போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பில் எல்லாரும் பிரதான வெளிவாயிலை நோக்கி ஓடுவதை..... பார்க்க பரிதாபமாக இருக்கும்.

ஐயா!, அந்த இடத்தில் இருந்தால் தெரியும் அதன் வேதனையும் வலியும்.
இதை நானும் அனுபவித்தவன் என்ற அளவில் எனக்கு அந்த வலி வேதனை, களைப்பு, பயம், எல்லாம் தெரியும்.

ராணுவத்தினரோ, அல்லது போலீசோ நீங்கள் புகையிரத நிலையத்திலிருந்து அல்லது வெளியில் வரும் போதோ பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது உங்களை மறித்து நிறுத்தி உங்களை சோதனையிடும் போது உயிர் போய் வரும், காரணம் நீங்கள் தமிழனாய் இருப்பது தான், ராணுவ அதிகாரியோ போலீஸோ உங்களை அந்த இடத்திலே கைது செய்யலாம், யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் அவசரகாலசட்டம்,

கொழும்பு வருபவர்களில் அநேகம் பேர் ஓரே நாளில் தங்களது வேலைகள் பூர்த்தியடையாமல் மறுநாளும் இருக்க வேண்டிய ஒரு சூழல் வந்து, எங்காவது தங்கியிருக்கும் போது சோதனை என்று வந்தால் போச்சு, போலீசில் பதிவு செய்யவில்லையா, உடனே கைது.

அந்த ஒரு நாளுக்காக எங்கு போய் என்னத்தை பதிவது,

ஏனென்றால் பதிவு செய்வது என்பது இன்னும் சிக்லான விடயம். ஏனென்றால் கொழும்பில் போலீசில் பதிவு செய்வதாய் இருந்தால், ஒரு நபர் தான் நிரந்தரமாக வதியும் முகவரி அப்பகுதி கிராம சேவகரால் உறுதிசெய்யப்பட்டு அது அப்பகுதிக்குறிய போலீஸ் நிலையத்தில் அத்தாட்ச்சிபடுத்தபட்டிருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் கொழும்பில் பதிவு செய்யலாம். அதிலும் நிறைய சிக்கல் உண்டு அதையெல்லாம் சொல்லி முடியாது.

ஆக வந்த வேலை பாதியில் நிற்க நாம் தீடிரென தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் சந்தேகம் என்று அழைத்து செல்லப்பட்டு விட்டால், ஒன்னு கிடக்க ஒன்னாகிவிடும் அதாவது வந்த வேலையை முடிக்கவும் முடியாது, தொடரவும் முடியாது, அதிலிருந்து வெளிவர ஆகக்குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும், ஆனால் தமிழர் விடயத்தில் இரண்டு நாட்கள் எல்லாம் வெறும் பொய்.

அப்போது அந்த தமிழரின் உணர்வு எப்படியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். அவரின் காலம், நேரம் வீண், பட்ட சிரமம் வீண், பணம் வீண், எல்லாமே பாழ்பட்டுபோயிருக்கும். பிறகு வெளியில் வந்து திரும்ப முதலில் இருந்து தனது காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். இதில் பாதிக்கபடுகிற மொத்த அப்பாவித்தமிழர்களின் உணர்வை இழப்பை யாராவது கணக்கிட்டு இருக்கிறார்களா?, இல்லை.

இதில் கைது செய்யப்படும் பெண்கள் பாடு பெரும் பாடு,
பாருங்கள் இலங்கையில் தமிழனாய் பிறந்ததின் பலனை!

குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, அதற்காக அப்பாவி தமிழர்கள் எவ்வளவு பேர் பாதிக்க படுகிறார்கள் என்று யாருக்காவது அக்கரையிருக்கா?

அண்மையில் லண்டன் குண்டு வெடிப்பு இடம் பெற்றது, தேடுதல் நடத்தப்பட்டது கைதுகள் இடம்பெற்றன.... இதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயம் கைது செய்யப்பட்டதா?...,

ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? சந்தேகம் என்றால் அது ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் மீது மட்டும் தான் விழுகிறது.
இது ஏன்? இந்த விடயத்தில் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்களும் ஸ்தாபனங்களுகம் ஏன் இதை பார்க்க மறுக்கின்றன. சாதாரண ஒரு பிரஜையை சும்மா கைது செய்து கொண்டு போய் சிறைப்படுத்தி பின்னர் விடுதலையாகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரது உள உணர்வுகள் எப்படியிருக்கும்?

யாராவது யோசிக்கிறார்களா?... தமிழன் தானே அவனுக்கென்ன உளமாவது, உணர்வாவது என்ற எண்ணம் தானே.

பிறகு எப்படி சமாதானம், சம உரிமை சகோதரத்துவம் எல்லாம் வரும் எல்லாம் வார்தைகளாக மட்டுமே தான் இருக்கும்.

தமிழ் மணத்தில் இருக்க கூடிய அறிஞர்கள், தமிழர் சமூக நலவிரும்பிகள், தமிழுக்காக குரல் கொடுப்பவாகள், எழுச்சிமிக்க சிந்தனைவாதிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்து, சர்வதேச சமூகத்தை மனித உரிமைகள் ஸ்தாபனங்களை, இந்த பிரச்சினையை சற்று உற்று நோக்க வைக்க முடியாதா?

இலங்கை பேரினவாத அரசுக்கு சற்று அழுத்தம் கொடுக்க வைக்க முடியாதா?.....

நான் இந்த பதிவை ஏன் இடுகிறேன் என்றால், எனது சொந்த அனுபவம் தான் காரணம். மீண்டும் இலங்கையில் அவசரகால சட்டம் என்றதும் எனக்குள் மறந்து போயிருந்த அந்த கசப்பான நினைவுகள் மீண்டும் விழித்து கொண்டதன் விளைவு தான்.

மற்ற நாடுகளில் அவசரகால சட்டம் எப்படியென்று எனக்கு தெரியாது, ஆனால் இலங்கையில் அந்த சட்டம் ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது என்றால் மிகையில்லை.

முடிந்தால் எனது அடுத்த பதிவில் அச்சட்டத்தால் 90களின் கடைசிப்பகுதியில் தலைநகரில் நான் பெற்ற இன்பத்தை?????????

உங்களோடு பகிர்ந்துகொள்ள பார்க்கிறேன்.

ஆனால் அதற்கு முன் ஏதாவது செய்ய முடிந்தால் நலமென்று
இந்த கிறுக்கனுக்கு தோன்றியது!

ஆகஸ்ட் 23, 2005

ஊடகங்களின் சுதந்திரமும் அதன் எதிர்காலமும்.

இன்னொரு ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டலா?

இன்று காலை வெக்டோன் தழிழ் தொலைக்காட்சியியில் விடியல் நிகழ்ச்சியில் பத்திரிகைச்செய்திகளை பார்கமுன், இரண்டு இணைய செய்திகளை வாசித்தார்கள்.

"நிதர்சனம்" என்ற தளத்திலும், "நெருப்பு" என்ற தளத்திலும் வெளியாகியிருந்த இரு செய்திகளே அவை.

அதில் "நெருப்பு" இணைய தளம் திரு.தயானந்தாவுக்கு கொலைமிரட்டல் என்று தமக்கு செய்தி கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது என்றும்,

"நிதர்சனம்" என்ற தளம் வெக்டோன் தொலைக்காட்சி தனது செய்தியில் இலங்கையின் திரு.ஆனந்தசங்கரியினை அழைத்து (பாராளுமன்ற அங்கத்தவர் என்று நினைக்கிறேன் நமக்கு ஏதுங்க? அரசியலும் அறிவும்,) சுடரொளி பத்திரிகையின் கொழும்பு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக அவரை சம்பந்தப்படுத்தியிருப்பதை பற்றி அவரது கருத்தை கேட்ட போது, அவர் இது குறித்தும் தமிழர் தாயகம் குறித்தும் சொன்ன ஒரு கருத்தாடலை ஒளிபரப்பியது மிகத்தவறானது என்ற பார்வையில் மிகவும் காரசாரமாக விமர்சித்து இருந்ததாகவும், வெக்டோனின் இந்த செய்தியால் உலகம் முழுக்க வாழும் தமிழர் மத்தியில் அந்த தொலைக்காட்சி பற்றி ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், குறிப்பிட்டு இருக்கிறது என்றும் வாசிக்க பட்டது.

இதன் செய்திகளை வாசிக்க தளங்களின் பெயர்களை கிளிக்கினால் செய்திகளை வாசிக்கலாம். ஆனால் இப்படி உரல் தொடுப்பு கொடுப்பது சரியா தவறா தெரியவில்லை, ஏனென்றால் இப்போதெல்லாம் நாளுக்கு நாள் பதிது புதிதாக இணைய தளம், கணணி, சம்பந்தபட்ட சர்வதேச சட்டங்கள் நிறைய வருகின்றன... (அதெல்லாம் இந்த கிறுக்கனுக்கு தெரியாதுங்க!. ஆகவே தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் நான் நீக்கிவிடுகிறேன்,)

" நிதர்சனம் " ,

" நெருப்பு ".

நானும் பார்த்தேன் "கேணயன்கள்" போன்ற நாகரீகமான!!!! பதங்கள் எல்லாம் பயன் படுத்த பட்டிருக்கின்றன....

அதற்கு திரு.தயானந்தா பேசும் போது திரு.ஆனந்தசங்கரி கொழும்பு கலையகத்திலிருந்து கொண்டு இந்த கருத்தை சொல்லவில்லை அது எங்களுக்கு தெரியாது என்றும், இது லண்டனிலிருந்து நேரடியாக அவரோடு பேசப்பட்டது என்றும், ஆனாலும் யாராவது ஒருவரை அழைத்து பேச வேண்டி வந்தால் எங்களுக்கு தெரியும் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று... என்று விளக்கம் அளித்தார்,,,,,


சரி நான் எழுத வந்தது என்னவென்றால்:

இன்றைய உலகில் யாருக்கும் தனது சொந்த கருத்தை சொல்ல உரிமையில்லையா?... மேலும் ஊடகங்கள் இதை வெளியிடுவது தவறா?

ஒரு நாட்டில், அல்லது ஒரு சமூகத்துள், ஒரு விடயத்தில், அல்லது ஒரு கொள்கையில், அங்குள்ள அது சம்பந்தபட்ட ஒவ்வெருவரிடத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு, அல்லது பார்வை இருக்கும். இது தவிர்க்க முடியாதது, இது அவரவர் அது பற்றி கொண்டிருக்க கூடிய அல்லது அறிந்திருக்க கூடிய விபரங்கள், தகவல்கள் மற்றும், அது பற்றிய அறிவு, போன்றவையால் வருபவை. இது சிலநேரம் தனிமனித சுய லாபமாகக்கூட இருக்கலாம், சரி இதற்காக நீ உன் கருத்தை சொல்லகூடாது என்பது சரியா?. இது மனித குல சுதந்திரம் ஆகுமா?. குரல்வளையை நசுக்குவது போல தானே!

இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்புகள் பக்கம் சார்ந்தனவாக இருக்கலாமா? எல்லாரின் கருத்துகளையும் ஒளிபரப்புவதில் அல்லது சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்...,

ஒருவர் சொன்ன கருத்து பிழையென்றாலோ?, அல்லது அது சொல்லபட்ட விதம் பிழையென்றாலோ?, எதிரானது என்றாலோ? அதை திருத்தி அல்லது அதை மறுத்து இன்னொறுவர் தனது நிலைபாட்டை வெளிப்படுத்தலாம், இதை விட்டு அவர் கருத்தை ஒளிபரப்பிய ஊடகத்தை குறை கூறுவது சரியில்லை என்றே எனக்கு படுகிறது.

திரு.தயானந்தாவுக்கு உண்மையிலேயே கொலை மிரட்டல் வந்ததா இல்லையா தெரியவில்லை, அதை அவரும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அப்படியே உண்மையாக இருந்து, உண்மையிலேயே இவ்வாறாக எல்லாரையும் கொலைசெய்து கொண்டே போனால் பிறகு உலகில் எப்படி கருத்து சுதந்திரம் இருக்கும்?.... இப்படி பார்த்தால் துப்பாக்கிகள் கொண்ட உலகம் மட்டுமே மிஞ்சும் போல் தான் இருக்கிறது.

என் கருத்துக்கும் கொள்கைக்கும் யாராவது முரண்பட்டால் கொலைதான் என்றால், அறிவு, நாகரீகம், அறிவியல், கலாச்சாரம், எல்லாம் என்னாவது அது வெறும் வார்தை மட்டுட்ம்தானா?

அதேநேரம் முக்கியமாக நமது தமிழ் இனம் மட்டுமே இப்படி அடித்துக்கொண்டு அழிந்து போகுமோ என்ற பயமும் கூடவே வருவதையும் உணர முடிகிறது. அப்படியானால் நமக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமலேயே போய்விடுமே!. நமக்குள்ளேயே அடித்துக்கொண்டு நமது சமூகம் சுருங்கி போகுமானால் இது உண்மையில் எதிரிக்கு தானே சாதகமாகும், ஏன் நாம் இதை உணர மறுக்கிறோம்? பிறகு எங்கே நாம் பலம் வாய்ந்த சமூகமாக வரமுடியும். சுதந்திர காற்றை சுவாசிக்கமுடியும். தொடர்ந்தும் நம்மை நாமே காட்டிக்கொடுத்தது போல தானே ஆகும்.

காலணித்துவ நாடுகள் தான் தாங்கள் கால் பதித்த நாடுகளி்ல் இந்த பிளவை வேண்டுமென்றே ஏற்படுத்தியிருக்கின்றன...., இன்னும் அதையே செய்கின்றன. ஆனால் அவைகளிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகும் நாம் இதையே தொடர்ந்தும் கைக்கொண்டு நமக்குள்ளேயே பிளவுபடலாமா?

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இதற்காக நமக்குள்ளேயே நாமே வேரறுத்தக்கொண்டால் யாருக்கு லாபம். நமது பிரச்சினை நீடிக்க நீடிக்க, நமது தமிழ் இனம் இன்னும் தொடர்ந்து நாடோடியாகவே புலம் பெயர்ந்து தானே வாழ்ந்து வரும். இது நம் வருங்கால தமிழினம் முற்றாக அழிந்து போக வாய்ப்பாக அமைந்து விடாதா?, எப்போது நாம் நமக்குள்ளேயே ஒற்றுமையொன்றை எதிர்பார்ப்பது.

பிறகு நமக்கு சுதந்திரம் வந்து என்னத்தை செய்ய? அப்போது அந்த காற்றை சுவாசிக்க ஒரு தமிழன் கூட இருக்கமாட்டானே. நாம் என்ன தொடர்ந்து இப்படியே ஆயிரம் ஆண்டுகள் இருந்து விடுவோமா? தமிழனுக்கு பிறந்த தமிழ் மறந்து போன ஒரு புது கலப்பு சமுகம் அல்லவா தோன்றும் அது நமது தமிழை தமிழ் கலாச்சாரத்தை எந்த மொழி பேசி காப்பாற்றும்? சற்று யோசிக்க வேண்டாமா?

மேற்கு நாடுகளில் 18 வயதை தாண்டிய குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயப்படுத்த முடியாது..., அப்படியே இந்த தலைமுறையை நம் தமிழ் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி தம் கட்டுக்குள் வைத்தாலும் அடுத்த தலைமுறையை எப்படி தமிழுக்குள் கொண்டு வரமுடியும்?

கொஞ்சமாவது எதிர்கால தமிழின் அல்லது தமிழனின் ஒற்றுமை பற்றி யாராவது யோசித்தால் என்ன? என்று எனக்கு படுகிறது.

இவ்வாறு இவர்கள் தங்களுக்குள் உணர்ச்சிவசப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது போல எனக்கு தொன்றுகிறது,

இப்போது வெக்டோன் தொலைக்காட்சி, இலவச ஒளிபரப்பாக இருக்கிற காரணத்தால் அநேகம் பேர் பார்க்க கூடியதாக இருக்கிறது, ( அதுவும் செப்டம்பர் முதலாம் திகதி வரையில் தான்) மற்ற தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாம் கட்டண தொலைக்காட்சிகள்.

ஆக அந்த அந்த தொலைகாட்சிகள் தான் அளிக்கும் கவர்ச்சியான நிகழ்ச்சிகளை பொறுத்தே அதன் ரசிகர் கூட்டம் கவரப்படும், வியாபாரம் ஆகும், கூட்டம் இருக்கும். அப்போது அந்த தொலைகாட்சியின் கொள்கைகளும் ஆதரிப்புகளும் தான் அதன் ரசிகர்களுக்கு நியாயபடுத்தி காட்டப்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது மக்கள் மத்தியில் பரந்த நோக்கம் கொண்ட கருத்துகள் வளரவோ இருக்கவோ வாய்புகள் மிகக்குறைவு.

இதுவும் மக்களை பிரித்தாளும் ஒரு தந்திரம் தான், மேலும் இதுவும் மக்கள் தங்களுக்குள் பிளவு பட வாய்பளிக்கும் என்பதை பார்க்க மறுக்கிறோம்.

நன்றாக உற்று நோக்கினால் ஏறக்குறைய எல்லா தமிழ் தொலைக்காட்சிகளுமே இதை தான் செய்கின்றன, தமிழக தொலைகாட்சிகள் முதற்கொண்டு,

இதே வேலையை இலங்கையின் பெரும்பான்மை சமூக தொலைகாட்சிகளும் செய்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு விடயத்தில் ஒற்றுமை காக்கிறார்கள் தமிழர் குறித்த பிரச்சினையில் எல்லாருமே ஒரு பக்கம் இதனால் தான் பெரும்பான்மை சமூகம் இன்னமும் தமிழன் பிரச்சினையளவில் ஒரே முகத்துடன் இருக்கிறது.


மற்றும் ஏதாவது ஒரு ஊடகம் வாயிலாக ஏதாவது ஒரு கருத்து மக்களை போய் சேருகிற போது...., அது ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டு மற்ற தமிழ் ஊடகங்கள் சற்றே யோசிக்கின்றன என்றே படுகிறது. அதற்காகதானோ என்னவோ இவ்வாறான நடவடிக்கைகள்.

இதற்காக கொலை தான் முடிவு என்றானால்?...... உலகம் எங்கு போகும்.? தமிழன் என்ன ஆவான்....,

என் புத்திக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.!

சிந்தை தெளிந்து
வஞ்சம் தவிர்த்து - தமிழன்
ஒன்றுபடும் காலம் வருமா?....

ஆகஸ்ட் 20, 2005

என் புத்திக்குள் வந்த வினா?

என் புத்திக்குள் வந்த வினா?
இலங்கை அரசியலில் கடந்த வாரம் திரும்பவும் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறிய கதையாகி போனதை எல்லாரும் அவதானித்தோம்....
சரி நடந்தது நடந்து விட்டது, இதெல்லாம் இலங்கை அரசியலில் சகஜமப்பா !!!! என்று சொல்லலாம், என்றாலும்....., எதற்கு நடந்தது, இதனால் உச்ச பயன் யாருக்கு? என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து போனதன் விளைவாக இந்த பதிவு.

இது யாரையும் உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ அல்லது மேதாவி தனம் காட்டவோ அல்ல.

விடுதலைப்புலிகள் செய்திருப்பார்களா?...
செய்திருக்கமாட்டார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. ஏனெனில் தற்போது தங்களது போராட்டத்தில் அரசியலையும் இணைத்துக்கொண்ட பின்னர் அவர்களின் சமீபகால செயற்பாடுகளும், எடுத்து வைக்கும் அடிகளும் மிக நிதானமானவை....! அவசரப்படமாட்டார்கள். அப்படி அவர்களுக்கு திரு. கதிர்காமரை கொலை செய்ய வேண்டுமென்றால் இவ்வளவு காலம் அவர்கள் காலம் தாழ்த்தியிருக்க மாட்டார்கள், அவர்களின் இப்போதைய போராட்ட நிலையில் கதிர்காமர் அவசியமேயில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவர் அவர்களுக்கு ஒரு டுபுக்கு அல்லது ஜுஜுபி!

இதை ஏன் ஜேவிபியினர் செய்திருக்க கூடாது என்ற கோணத்தில் பர்ர்த்தால் என்ன?,காரணம்:
1. இந்த ஜேவிபியினர் இலங்கையில் மக்களை உச்சபட்ச மூளைச்சலவை செய்து அரசியல் செய்பவர்கள். அவர்களது பேச்சு வன்மை அந்த அளவிற்கு தன்மை வாய்ந்தது.

உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இப்படி வருகிறது. " Kill him, not let him go".
அவனை கொல் போக விட வேண்டாம். இது தான் அர்த்தம்.
இந்த வசனத்தில் கமா அடையாளத்தை ஒரு சொல் மாற்றி பின்னால் போட்டு பாருங்கள் வாக்கியத்தின் முழு அர்த்தமே மாறிவிடும் எப்படி? "Kill him not, let him go" அதாவது அவனை கொல்ல வேண்டாம் போக விடு.

இப்படி தான் அவர்கள் வார்த்தைகளை மாற்றி பேசுவதில் அசகாய சூரர்கள், இதனால் தான் முன்பு பலிகளுடனான பேச்சு வார்தை ஒப்பந்தங்களின் வார்த்தைகளை இப்படி போடு அப்படி போடு என்று பெரும் குழப்பம் நடந்து ஜானாதிபதி பெரும் விசனப்பட்டு கருத்துகள் சொல்லியிருந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.....

சரி விடயத்திற்கு வருவோம்,
இந்த ஜேவிபியினர் ஆளும் கட்சியில் இருந்து விலகி ஒரு தீடீர் தேர்தலை கொண்டு வந்து குறைந்தபட்சமாக, உண்மை தெரியாத இல்லது தெரியாது போல நடிக்கும் பேரினவாத பெரும்பான்மை ஓட்டுக்களை சுருட்டி பாராளுமன்றத்தில் வார்த்தை ஜாலத்தால் பதவியை பிடிக்கலாம் என்ற அவர்களின் திட்டம் அல்லது கனவு பலிக்கமலே போனதும், மாறாக சுதந்திர கட்சி பெரும்பான்மை பலம் இல்லாவிடினும் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு நடத்திவருவதும் இவர்களுக்கு முதல் தோல்வி.

மேலும் திரு.கதிர்காமர் தான் அம்மையாருக்கு எல்லாவிடயங்களிலும் ஆலோசனை மந்திரியாக இருப்பவர் என்பதும் இவர்களுக்கு பெரிய தலைவலி மட்டுமல்ல ஒரு அரசியல் எதிரியும் கூட.

ஆக இவர்களுக்கு ஒரு காயை அடிக்கவேண்டும் ஆனால் இரண்டு பெரிய காய்கள் விழவேண்டும். அதற்காக திரு.கதிர் பயன் படுத்தப்பட்டிருக்கலாம். காரணம் விழப்போகும் கொலையினால் அரசாங்கமும், மக்களும், சர்வதேச நாடுகளும் உடனே புலிகளை தான் சந்தேகிக்கும் இது முதல், மற்றது தங்களை யாரும் பின் தொடரமாட்டார்கள் இது இரண்டு.

மேலும் இதனால் சமாதான முன்னெடுப்புகள் உடனே தடைபெறும். இப்படி நடந்து எல்லாரும் புலிகளை விமர்சித்து... ஏதாவது ஏடாகூடமாக போய் மீண்டும் ஒரு யுத்தத்தை கொண்டு வந்து விட்டால் போதும் இது கும்பிடபோன தெய்வம் குறுக்க வந்த மாதிரி.

மற்றது கொலையில் தங்களை யாரும் கண்டுகொள்வே மாட்டார்கள். ஏனென்றால் திரு. கதிர்காமர் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும், முன்னெடுப்புகளுக்கும் முதல் எதிரி என்பது சர்வதேச சமூகம் உட்பட உலகம் அறிந்த ஒரு விடயம். ஆகவே இந்த பழி வெகு சுலபமாக புலிகளை சேர்ந்து விடும் இதற்காக பெரிதாக பிரயத்தனபடத்தேலையில்லை.

இது மெய்ப்பட்டுப்போனது எப்படியெனில் எனது இந்த அனுபவம் ஒரு சிறு உதாரணம்.

எனது சிங்கள மொழி நண்பர்கள் (கொஞ்சம் படித்தவர்கள் இங்கு நல்ல பதிவியில் இருக்கக்கூடியவர்கள்) என்னிடம் இது பற்றி பேசும் போது உடனே சொன்னது ஐயோ பாவம் கதிர்காமர் படித்த மனிதர், அறிவாளி, நம் நாட்டுக்கு இப்போதைய அரசியலுக்கு தேவையான மனிதர், இதை புலிகள் தான் செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக சொன்னார்கள்.
எப்படி என்று கேட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விடயம் உலகிலேயே புலிகள் மட்டும் தானாம் பயங்கரவாத குழுக்களிலேயே தொலைதூரம் குறி பார்த்து தவறாது சுடுவதில் கெட்டிக்காரர்களாம். அதுவும் ஸ்னைப்பர் துப்பாக்கி சுடுவதில் அவர்கள் தான் வல்லவர்களாம். இவர்களை விட்டால் இலங்கையில் இந்த வேலையை செய்ய யாரும் இல்லியாம்.

அவர்களே இப்படியென்றால் இலங்கையில் இருக்க கூடிய மேற்சொன்ன உண்மை தெரியாத மற்றும் தெரியாது போல நடிக்கும் பேரினவாத பெரும்பான்மை மற்றும் சிந்திக்காத மக்கள் நிலை எப்படி இருக்கும் என்று இங்கு சொல்ல தேவையில்லை. ஆக இந்த அளவில் இதை செய்தவர்களுக்கு வெற்றி.

2. இனி ஒரு சரியான ஆலோசகர் இல்லாது சந்திரிகா அம்மையார் தான் அரசாங்கத்திற்குள் அல்லது கட்சிக்குள் எடுக்க போகும் முடிவுகளில் தடுமாறுவார், ஆக இது உட்கட்சி பூசலுக்கும் குழப்பத்துக்கும் இலகுவாக வழிசமைக்கலாம், இப்படி ஆகும் பட்சத்தில் அந்த கட்சியிலிருந்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினாகளை மற்றும் கட்சி அங்கத்தவர்களை இழகுவாக தம் பக்கம் கொண்டு வந்து தம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். ஆக அடுத்த தேர்தலில் நாற்காலி நிச்சயம், அப்படியே ஆட்சி போனாலும் எதிர்கட்சியாக நிச்சயம் வரலாம் என்ற கணக்கும் காரணமாக இருக்கலாம், இறந்த கால மற்றும் நிகழ்கால இலங்கை அரசியல் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுகிறது.

சரி எப்படி செய்திருக்கலாம் அல்லது எப்படி சாத்தியம்?
அரசு படைகளுக்குள் இருக்கும் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு நடத்தியிருக்கலாம்.
காரணம் கொலையாளி அங்கு எப்படி வந்தான் என்பது ஓருபுறம் இருக்க, அவ்வளவு பாதுகாப்பு இருக்கும் போது எப்படி தப்பியிருக்க முடியும் என்பது தான் பிரதான கேள்வி?. கொலை நடந்தது இருப்பது வீட்டிற்கு வெளியே.

ஆக பாதுகாப்பு படையினர் முன்னால் தான் கொலைசெய்யப்பட்டவர் சரிந்திருப்பார், உடனே படையினர் உஷாராகி அந்த ஏரியாவையே சுற்றி வளைத்து மூடியிருப்பார்கள்.
அப்படியானால் யாராவது அகப்பட்டிருக்க வேண்டும்.... அதுவும் இல்லை.

சரி புலிகள் செய்தால் அவர்கள் தப்பிக்க முயற்சிப்பார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள். அது தான் புலிகள் செய்த தாக்குதல் வரலாறுகள் வெளிப்படுத்தியிருப்பவை. அப்படியானால் ஒரு சடலமாவது கிடைத்திருக்க வேண்டும் கிடைக்கவில்லை. ஆக இந்த இடத்திலிருந்தும் புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிற எண்ணத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பது தெரிகிறது.

ஆக படையினரின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கலாம். தேடுதல் நடவடிக்கைகள், கைதுகள் என்பன கூட முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எங்கு எங்கு நடத்தப்படவேண்டும் எப்படி எப்படி கைதுகள் இருக்க வேண்டும் என்று ஆலோசித்து நடத்தப்பட்டிருக்கலாம். அப்படி இல்லையென்றால் அரசாங்கமே இதனை செய்திருக்கலாமோ என்னமோ? யார் கண்டார்கள்....!

அதையும் ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் மிகவும் துள்ளியமாக எப்படி பார்க்கபட்டு்ள்ளது என்பதை இங்கே சொடுக்கினால் தெரியும்.

ஆகஸ்ட் 17, 2005

எனக்குள் ஓரு வருத்தம்

ஏன் இந்த நிலை?

இப்போதெல்லாம் இணைய வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் தமிழ் வலைபதிவுகள் வந்துவிட்ட இந்த நேரங்களில் அதுவும் தமிழ்மணம் வந்தபின்..., ஏராளமான எழுத்தாளர்கள், எழுதும் ஆர்வலர்கள் எல்லாரும் இங்கே கடைவிரித்து சகலதையும் தருகிறார்கள் அல்லது தரவிளைகிறார்கள்.
இதில் சமூக அக்கரை, நாட்டுப்பற்று, காலாச்சார சீர்கேடுகள், காலமாற்றத்திற்கான காலாச்சார ஒவ்வாமைகள், அரசியல், பொருளாதார விழிப்புணர்வு, பெண் விடுதலை, அறிவியல், ஆன்மீகம், பற்றியெல்லாம் புதுப்புது வடிவங்களில் பதிய எண்ணக்கருத்துகளுடன், புதிய சிந்தனைகள் வீரியத்துடன் எழும்பி வந்து வாசிப்போரை சற்றே நிலைகுழைய வைக்கின்றன...., (நிலைகுழைய என்ற வார்த்தை எனது எண்ணத்தை அப்படியே சொல்கிறதா தெரியவில்லை). வாசகர், எழுதுவோர் மத்தியில் பெரும் சண்டைகளையும், சர்ச்சைகளையும், கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன.

வலைபதிவர்கள் தங்களுக்குள் நாகரீகமற்ற (தார்மீகமற்ற) தாக்குதல்களையும், வசைகளையும் பரிமாறிக்கொள்வதில்... இதில் என்னத்துக்கு ஒரு மரியாதை பச்சையாக சொன்னால் தங்களுக்குள் அடித்துக்கொள்வதும், மற்றும் தான் சொல்வது மட்டுமே சரியென்ற பிடிவாதமும் தான் மலிந்து கிடக்கின்றன...

இது அநேக நேரங்களில் வருத்தம் தருவாதாக இருந்தாலும் ஒன்றை மட்டும் தெளிவாக படம் பிடித்து காட்டுவது தெரிகிறது. அதாவது நமது சமுதாயத்திற்குள் அதுவும் தமிழ் சமூகத்துக்குள் அநேக மாறுதல்கள் மாற்றங்கள் வரவேண்டும் என்பதையும் அநேக கோளாறுகளும் குளறுபடிகளையும் கொண்டுள்ளன என்பதையும். அதனால் தான் யாராவது ஏதாவது உண்மையான ஒரு புதிய மாறுதலுக்கான நோக்கோடு ஒரு பதிய கருத்தை, புதிய சிந்தனைகளை எழுதவோ,அல்லது பகிர்ந்து கொள்ள முற்பட்டாலோ அது பலமான எதிர்ப்புகளுக்கும் தூற்றுதலுக்கும் ஆளாகிறது... இது இயற்கை தான், உண்மையும் கூடதான்.

ஏனெனில் உலகில் எந்த மாறுதலும் அல்லது எந்த ஒரு விளிப்புணர்வும் ஒரே இரவிற்குள் நடந்தேறியதாக சரித்திரமே இல்லை எனலாம். கால ஓட்டத்தில் எல்லாம் சரிபடுத்தப்படும் என நம்பிக்கை கொள்வோம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் எழுத வந்தது என்னவென்றால்.... கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி முதல் 14ம் திகதி வரை பின்லாந்து நாட்டில் ஹெல்சிங்கி நகரில் உலக சாம்பியன் பட்டத்திற்கான தடகள விளையாட்டுபோட்டிகள் இடம்பெற்று முடிந்தன.... உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வீர வீராங்கனைகள் கலந்துகொண்டு தன் திறைமைகளுக்கு முகவரி தேடிகொண்டார்கள். இதில் ஒரு சில பழைய உலகசாதனைகள் முறியடிக்கபட்டு புதியவை நிலைநாட்டப்பட்டன... குறிப்பாக பெண்களுக்கான ஈட்டி எறிதல், பெண்களுக்கான தடியூண்டி பாய்தல் (Pole volt) போன்றவற்றில் புதிய உலக சாதனைகள் நிலைநாட்டப்பட்டன..., ஆண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியின் தகுதிகாண் சுற்றில், தொடர்ந்தும் முதல் நிலையில் இருந்த அமெரிக்கா கோட்டை விட்டதும், குறிப்பிடும் சம்பவங்கள்.

முழு அளவிலான அனைத்து போட்டிகளும் கடந்த 14ம் திகதி முடிந்து நாடுகள் பெற்ற நிலைகள் என்று பார்த்தால் அமெரிக்கா முதலாம் இடம், ரஷ்யா இரண்டாம் இடம், எத்தியோப்பியா மூன்றாம் இடம்..... இப்படி பட்டியல் நீள்கிறது.

ஆனால் உலகத்தில் வல்லரசாக கனவு காண்பதிலும், உலகில் அதிகூடிய சனத்தொகை என்ற பட்த்திற்கும், கணணி மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சர்வதேச புகழையும் அங்கீகாரத்தையும் பெற்ற அல்லது பெற முனையும் இந்தியாவை ஒரு இடத்தில் கூட காண முடியவில்லை என்பது பெரும் வேதைனைக்குறிய விடயம் மட்டுமல்லாது நூறு கோடி பேரை கொண்ட நாடு ஆகக்குறைந்து 5 இடத்திற்குள்ளாவது இடம்பெற முடியாத நிலையில் உள்ளது என்பது வெட்கம் என்று கூட சொல்லலாம்.

வறுமையின் கோட்டிற்குள்ளே உள்ளதாக கணிக்கபட்டிருக்கும் எத்தியோப்பியா மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறது, மிகவும் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்தியாவிற்கு ??????....

இதற்கு யார் பொறுப்பு?.... இதை பற்றி யாராவது எழுதினால் என்ன?.... ஏன் வரமுடியவில்லை?.., யார் காரணம்? கிரிகெட் கிரிகெட் என்று அது மட்டுமே ஒரு விளையாட்டு என்று பித்து பிடித்து கோடி கோடியாக கொட்டியும் எல்லாத்தையும் கோட்டை விட்டு வரும் இந்திய அணிக்கு விரயமாக்கும் பணத்தில் மற்ற விளையாட்டு போட்டி வீரர்களை உருவாக்க முடியாதா?.... ஏன்? ஏன்?.... இந்த அவல நிலை இந்தியாவிற்கு.....

ஓரு பி.டி உஷாவிற்கு பிறகு யாராவது உலகம் பேசப்பட்ட அளவில் வந்தார்களா தெரியவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஓரிரு இந்தியர்களை தகுதிகாண் சுற்றுகளில் காணமுடிந்தது, ஆனால் இந்த போட்டிகளில் யாருமே என் கண்ணிற்கு படவேயில்லை. சில நேரம் மேற்கு நாடுகளின் தொலைகாட்சிகள் நமது வீரர்களை இருட்டடிப்பு செய்து விட்டதா? யாம் அறியோம்.

இந்தியா இதைப்பற்றி சற்று சிரத்தையுடன் சிந்தித்தால் நல்லது என்று எனக்கு படுகிறது. சும்மா கிரிக்கட் வீரர்களை மட்டும் கோடீஸ்வரரர்களாக்கிவிட்டு, வெற்றி கோப்பைகளை கோட்டைவிட்டுகொண்டிருக்கிறோம். நான் கிரிகெட்டுக்கு எதிரி கிடையாது. ஆனால் விளைச்சல் தராத பயிருக்கு ஏன் சும்மா பணத்தை முதலீடு செய்யவேண்டும். மாற்று பயிரை உற்பத்தி செய்யலாமே என்ற எண்ணம் தான்.

இதைபற்றி நமது தமிழ்மண மேதைகள், அறிவுஜீவிகள், மாற்றம் வேண்டி சீற்றம் கொள்ளும் சிந்தையாளர்கள், சற்று எண்ணி எழுதினால் ஏதாவது ஒரு மாற்றம் எங்காவது பூக்கமலா போகும்.

வரும் காலங்களில் இந்தியர்களையும் இந்திய கொடிகளையும் நாம் இந்த விளையாட்டரங்கங்களில் பார்க்கலாமா?...
கனவு காணலாமா?.... கனவு பலிக்குமா?

நன்றி!

ஜூன் 15, 2005

இரண்டாம் நாள்....

முதல் நாள் விழா, அமர்க்களமாகவே நிறைவடைந்த நிலையில்... இரண்டாம் நாளைய நிகழ்ச்சி பற்றி அப்போதே பார்வையாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு தோன்றி விட்டிருந்ததை பார்க்கக்கூடியதாய் இருந்தது.

இரண்டாம் நாள் ஜித்தா நகரின் பிரசித்தி பெற்ற வைத்தியசாலைகளில் ஒன்றாக விளங்கும் (King Fahd Hospital)கிங் பஹாத் வைத்தியசாலை ஆராய்ச்சிமைய கேட்போர் கூடத்தில் மாலை 6.00 மணிக்கு என்று இருந்தது..,ஆனாலும் நிகழ்ச்சி ஒரு 7.30 மணியளவில் தான் தொடங்கியது.

இன்றும் கூட முதல் நாள் வருகை தந்திருந்த,மேதகு இந்திய தூதர்,இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் விருந்தினர்கள்,வந்திருந்தார்கள்.

அன்றைய நிகழ்ச்சியிலும் விருந்தினர் இருவருக்கும் சங்கத்தின் சார்பில்,தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகர் மூலமாக நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவிற்கு அநேகர் வந்திருந்தார்கள்..., அதாவது மண்டபம் நிறைய ரசிகர்கள், ஆனாலும் முதல் நாள் விழாவிற்கு வந்தவர்களில் அநேகம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதை காணக்கூடியதாகவும், நிகழ்ச்சி மக்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்பதான ஒரு கதம்ப நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தொகுக்கபட்டிருந்தது,....

வேடிக்ககை வினோத நிகழ்ச்சி என்றதான "பாட்டுக்கு பாட்டு" "வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்" ஒரு வானொலி நாடகம்,கேள்வி நேரம் போன்றவை தான் நிகழ்ச்சி அம்சங்கள்.

இவற்றில் வானொலி நாடகம்,திரு.அப்துல் ஜப்பார்
திரு.அப்துல் ஹமீட்அவர்களும்,இணைந்து பங்கு பற்றி இலங்கை வானொலியில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால் ஒளிபரப்பான ஒரு நாடகம்.

உண்மையில் இந்த நாடகம் பார்வையாளர்களை கட்டி போட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும், ஆடை,அல்லது மேடை அலங்காரம் இல்லை,மின் விளக்குகள் வர்ணஜாலங்கள்..,மேடையில் அங்கும் இங்கும் நடைபயின்று வசனம் பேசும் இத்யாதி போன்ற எந்த ஒரு நாடக அம்சமோ அல்லது அமைப்போ கிடையாது. ஆனால் இரண்டே இரண்டு இல்லை சரியாக சொன்னால் மூன்று "ஒலிவாங்கிகள்"(Mikes)மட்டுமே பயன்படுத்தப்பட்டன...,

ஆச்சர்யம்!! ஆனால் உண்மை!. நாடகம் இது தான்.....

"அனார்கலியை உயிரோடு சமாதி வைத்தாகி விட்டது,சலீம் கோபம் கொப்பளிக்க தன் தந்தை அக்பர் சக்கரவர்திக்கெதிராக கிளர்ந்து அவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு பிரதேசத்தை தானே சுயமாக ஒரு நாடாக அறிவித்து விடுகிறான், தந்தைகெதிராக போர் தொடுக்கவும் ஆயத்தம்...,அவனது தாயார் வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்,பலன் இல்லை, கடைசியாக போர் மூள்கிறது.
போரிலே சலீம் தோல்வியை தழுவி,சிறைபடுத்தபபடுகிறான்...

பிறகு தந்தை நோயினால் படுக்கையில் வீழ்கிறார்....,தன் மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க ஆசை படுகிறார்,தூது போகிறது....,மகன் மறுக்கிறான்,தாயும் வந்து கெஞ்சுகிறார்,... மறுபடியும் மறுக்கிறான். பிறகு மனது மாறி தந்தையை பார்க்க போகிறான்..., அங்கே தந்தை இறந்து போகிறார்".....

சலீமின் நண்பனாக, அக்பரின் மந்திரியாக, அக்பரின் மனைவியாக மூன்று இதர ஜித்தா வாழ் கலைஞர்கள் பங்கு கொள்ள, அக்பராக திரு.அப்துல் ஜபாரும் , சலீமாக திரு.அப்துல் ஹமீட் அவர்களும், மிகவும் அற்புதமாக அருமையாக நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

ஒலி வாங்கிக்குள் தங்கள் குரலால் இந்த இருவரும் மாறி மாறி...."கோபம்","ஏக்கம்","பாசம்",
"அதிகாரம்","வேதனை","கர்வம்","வியப்பு" இப்படி இவ்வளவு பாவங்களையும்,வெளிபடுத்தி சபையோரை மெய் மறக்க செய்து விட்டார்கள் என்றால் மிகையில்லை.

நாடகம் முடிந்தது சபையில் கைதட்டல் ஓசை ஆரம்பமானது....,
ஏறக்குறைய ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தொடர்ந்து அது அரங்கத்துக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.

நான் பார்த்த வரையில் இப்படியான கைதட்டல், வெளிநாட்டுகளில் நடக்கும் விருது வழங்கும் வைபவங்களில் குறிப்பாக "கிராம்மி அவார்ட்ஸ்" "ஆஸ்கார் அவார்ட்ஸ்" என்று தொலைக்காட்சியில்
பார்த்த நிகழ்ச்சிகளில் யாருக்காவது ஒருவருக்கு ஏதாவது சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டு அவர் மேடைக்கு வரும் போது ரசிகர்கள், விருந்தினர்கள், பார்வையளர்கள் என்று அனைவரும்
கரகோஷம் செய்வார்களே அது போலதான் இருந்தது.

அந்த கரகோஷமே பார்வையாளர்களின் மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும், ஒன்றாக வெளிப்படுத்தியது என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இந்த நாடகத்தை நான் முதன் முதல் கேட்ட போது எனக்கு அப்போது 11 அல்லத 12 வயது தான் இருந்திருக்கும், அன்றும் கூட அதே மாதிரி, அதே உணர்வுகளுடன் அதே தன்மை மாறாது நான் கேட்ட போது எனக்குள் பெரும் வியப்பு.

எனது நண்பர்கள் எல்லாரிடமும் சொல்லி சொல்லி நான் ஆச்சர்யப்பட்டுபோனேன். ஓ! என்னவொரு அற்புதமான கலைஞர்கள்.

பிறகு "கேள்வி நேரம்" இதில் கேள்விகளை மிக அழகாக, நேர்த்தியாக தொகுத்து கேட்ட நண்பர் ஆசாத் அவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். காரணம் விருந்தினர் இருவரும் ஒரே துறைதான் என்றாலும் இருவரிடமும் இரு வேறு மாதிரியான வெளிப்பாடுகள்,பங்களிப்புகள், ஆக அவற்றுக்கு ஏற்றாற்போல் கேள்விகளை தயாரித்து கேட்டது சிறப்பாக இருந்தது.

திரு.அப்துல் ஜப்பார் அவர்கள் மிகவும் நகைச்சுவையாகவே எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தார்..., பதில் முடிந்து அடுத்த கேள்வி வருவதற்கான நேர இடைவெளி கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது, சபையில் இருந்து எழுந்து வந்த சிரிப்பும் மகிழ்ச்சி ஆரவாரமும் அடங்கதான் அந்த இடைவெளி என்பதை சொல்ல தேவையில்லை.

வாழ்கையை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டால் வாழ்கையில் அலுப்பும் தட்டாது, வயதும் தெரியாது என்பதற்கு இனி நான் யாருக்கும்
திரு.அப்துல் ஜப்பார்
அவர்களை தாரளமாக உதாரணம் காட்டலாம் போலிருக்கு....

திரு.அப்துல் ஹமீட் அவர்கள் தனது பதிலிலே அவரது மனது மறக்காத (இந்த சொல் அவரால் மட்டுமே பெரும்பாலும் உபயோகிக்கபடும்) அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

பதிலிலே நகைச்சுவை கலந்திருந்தாலும் சமூக பொறுப்பு தெரிந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கடைசியாக இருவரும் நன்றியுரையாற்றினார்கள். இருவரும் ஆளுக்கொரு குட்டிக் கதையோடு நன்றி சொல்லி விடைபெற்றார்கள்.

அதில் திரு.ஹமீட் அவர்கள் பேசும் போது,.... உண்மையில் விஞ்ஞானமும்,அறிவியலும் வளர்ந்துவிட்ட இந்த நூற்றாண்டில் மனிதம் தொலைந்து பிளவும்,பிரிவும்,ரணமும் பட்டு,தப்பான வழி நடத்தலில் தவறிப்போன மனங்களை களிம்பிட்டு பரிவு காட்டி,பிணைக்கும் ஒரு முற்போக்கான சிந்தனையோடு முடித்து கொண்டார் என்றால் அது மிகையில்லை.

இது அவரது கடல் கடந்த பயணங்களும்,சந்தித்த மனிதர்களும், பெற்ற அனுபவங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக தன் சமூகத்தின் பால் தான் கொண்டிருக்கும் பற்றையும்,தன் சமூக பொறுப்பையும் தான் காட்டி நிற்கிறது என்று சொன்னால் தப்பில்லை என்றே கருதுகிறேன்.

இவர்கள் இருவம் நீடித்த ஆயுளோடு மனித நேயத்திற்கான வழிகாட்டிகளாக,பாலமாக,தூதுவர்களாக பணிபுரிய வேண்டுமென்று வாழ்த்துவோம்....

நிகழ்ச்சி இரவு 11.00 மணியளவில் இராபோசனத்துடன் இனிதே நிறைவேறியது.

இந்த இடத்தில் ஜித்தா தமிழ் சங்கத்திடம் நன்றியுடன் ஒரு அன்பு வேண்டகோள்.....!

மீண்டும் இன்னுமொரு முறை திரு.ஜப்பார், திரு.ஹமீட் இருவரையும் மீண்டும் இங்கு அழைத்து..., இருவருக்கும் அவர்களை, அவர்களது துறையை, சேவையை கெளவரப்படுத்தும் வகையில், ஒரு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தால் என்ன?....

இதனால் ஜித்தா தமிழ்ச்சங்கம் ஒரு பெருமை கொள்ளட்டுமே!...