கடந்த ஒரு வாரமாக தமிழ் மணம் பக்கமே வரமுடியவில்லை... கொஞ்சம் பிஸியாகி போனதால் தான் இந்த நிலை. ஆனால் இன்று வந்து பர்த்தால் நம்ம வீட்டில் ஒரே களேபரம்....
ஏறக்குறைய எல்லா அறைகளிலும் ( வலைபக்கத்திலும்) ஒரே விசனங்களும், வருத்தங்களும், கேள்விகளும், கோபங்களும்,விமர்சனங்களும், கண்டனங்களுமாக, மனிதனுக்குறிய எல்லா உணர்வுகளும் சிதறி கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது...... அவ்வளவையும் வாசிப்பதற்குள் எனக்கு தலை சுற்றிவிட்டது... பாதி விளங்கியது பாதி இன்னும் விளங்கவே இல்லை... அப்பப்பா,!
இது நாள் வரை தமிழ் மணம் மூலம் எனது கிறுக்கல்களும் திரட்டப்பட்டுள்ளன என்கின்ற வகையில், எனக்குள் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடு தான் இனி...
தமிழ் மணத்தின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள முறைமை அல்லது எடுத்துள்ள முடிவுகள் சரியா தவறா என்பதில் ஏகப்பட்ட கருத்துகள்.
ஆனால் கருத்துகள் சில இடங்களில் முன்வைக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட முறை சற்றும் அழகல்ல என்பது "நாகரீகம்" அறிந்த எல்லாருக்கும் தெரியும். இதற்காக அப்படி எழுதியவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்று அர்த்தமில்லை அவர்கள் கொஞ்சம் விரைவாக உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதை எழுதியவாகள் யாரும் படிக்காதவர்கள் இல்லை, கற்றவர்கள், அறிந்தவர்கள், தான் என்ன செய்கிறோம் என்று உணர்ந்தவர்கள். இந்த அளவிற்கு கொதித்தது நியாமாக இருந்தாலும், (அவர்கள் பார்வையில்) ... உதிர்த்த வார்தைகள் தான் தான் கொஞ்சம் எல்லாரையும் நெருடுகிறது. கொஞ்சம் யோசித்து வார்தைகளை பயன்படுதியிருக்லாமோ என்று எண்ண தோன்றுகிறது. அள்ளி வீசியாச்சு இனி எப்படி அதை சரிப்பண்ணுவது?.
ஐயன்மீர்!
தொடர்ந்து கொஞ்சம் பொறுமை காத்து வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....
இங்கு தமிழ் மணத்தில் இருப்பவர்கள் அல்லது எழுதி வருபவர்கள் போல் நான் அறிவாளியோ, கணனியில் புலியோ, கிடையாது ( சாதாரண கைநாட்டுதான்) ஆனால் தமிழின்பால் எனக்கு கொஞ்சம் பற்று உண்டு, தமிழன் எல்லா இடத்திலும் மதிக்கபடனும் என்ற எண்ணம் உண்டு அம்புடுதான். ( கல்லூரியில் இறுதி தோர்வில் கூட தமிழில் மட்டும் தான் நான் பாஸ்).
இங்கு ஜித்தாவில் உள்ள தமிழக நண்பர்கள் ஒன்று கூடி இணையத்தில் தமிழ் வளாப்போம் என்ற ஒரு கருத்தரங்குக்கு எப்படியோ என்னை அழைக்கப்போய், அழைப்பை பெற்று அங்கு போகும்வரை, தமிழ் மணம் பற்றியே எனக்கு தெரியாது. (ஆனால் அது வரை தமிழில் TISCI முறையில் தட்டச்சு செய்து எனது வீட்டுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதுவது மட்டுமே எனது தொழில்... ஊரில் நண்பர்கள் எல்லாரும் அடடே கம்யூட்டரில் கடிதம் எழுதுகிறானே (1996 களில்) என்று வியப்பார்கள் என்பது வேறு கதை)
கருத்தரங்குக்கு போயாச்சு!...
தொழில் என்று வந்த பின்னர் "தமிழ்" வீட்டிலும் நண்பர்களிடமும் மட்டுமே புழக்கத்தில் இருந்தாலும், இவ்வளவு காலமும் தமிழில் எழுதனும் என்று இருந்த ஆர்வம் மங்கிபோயிருந்த வேளையில் தான் இந்த கருத்தரங்கு எனக்குள் ஒரு புது தெம்பை தந்தது என்றால் தப்பில்லை. அதன்பிறகு தான் எனது கிறுக்கல்களை வலையில் பதிக்க தொடங்கினேன். (சரி சரி சுய புராணம் எதற்கு? என்ன சொல்ல வருகிறாய்? -ஐயா கொஞ்சம் பொருங்கள்)
நான் எழுத வந்த போது திரு.காசி அவர்களே கூட எனக்கு எழுத சொல்லி ஊக்கம் தந்தார்கள்.
இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்போது தமிழ் மணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளும் சரி, முடிவின் விளைவுகளும் சரி நம் எல்லோரையும் சற்று அவசரப்பட வைத்து விட்டதோ என எண்ண தோன்றுகிறது.....
திரு காசியும் மற்றும் நிர்வாகமும் எடுத்த முடிவை சற்று மறு பரிசீலனை செய்தால் நல்லது என்று என் கிறுக்கு புத்தி சொல்கிறது. காரணம் இன்று தழிழ் வலையுலகத்தில் "தமிழ் மணம்" ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதற்காக திரு காசி அவர்களும் அவரது நிர்வாக குழுவினரும் ஆற்றிய பங்கு எந்த விதத்திலும் குறையிட்டு சொல்ல முடியாது.
அதற்காக காசியின் பங்கு மட்டுமே காரணம் என்று சொல்லவும் கூடாது...., இதற்கு தங்கள் பங்களிப்பை செய்த (ஆக்கங்கள் வாயிலாக) எல்லா வலை பதிவாளருக்கும் இதில் ஒரு சிறு துளியாவது சேரவேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டடார்கள் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவில் இருப்பவர்கள் தனது நேரத்தை எப்படியும் காசாக்கதான் பார்ப்பார்கள் என்று எனது சகோதரன் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன்...
அப்படியிருக்க தனது நேரத்தை தமிழுக்காக தமிழில் எழுதும் ஆர்வலர்களுக்காக ஒரு சேவை மனப்பான்மையுடன் தனது பொருளாதாரத்திலும் ஒரு பங்கை செலவிட்டு பங்காற்றியது உண்மையில் போற்றப்பட வேண்டிய விடயம் தான். வார்தையாக இல்லாது தமிழ் சமூகத்துக்கு உண்மையில் உழைத்தது பெரும் செயல்தான். நிச்சயம் அவர்கள் செயல் போற்றுதலுக்குறியது தான்....ஆனால்!
இப்படியாக எல்லாரும் சேர்ந்த ஆற்றிய ஒரு செயலால் தமிழ் கொஞ்சம் தன்னை ஒருபடி அழகு படுத்தியிருக்கிறது. உலகில் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக வலையில் அதிகம் பாவிக்கபடும் மொழி தமிழ் என்று கூட சொல்ல கேட்டிருக்கிறேன்... இன்று எதையும் வலையில் தமிழ் வடிவில் காண்கிறோம், போதாதற்கு தமிழ் மணம் உண்மையில் அநேக வாசகர்களை பதிவர்களை தன்னகத்தே கொண்ட பிரமாதமான ஒரு சேவை தான். ஒரு சிறந்த திரட்டி தான் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க இல்லை.
இது உண்மையில் தழிழுக்கு கிடைத்த வெற்றி தான். ஆனால் இந்த வெற்றி இப்படி பாலாக்கப்படுகிறதே!... யாரும் உணரவில்லையா?
தமிழனுக்கும் தமிழுக்கும் மட்டும் எந்த நல்ல விடயமும் தொடர்ந்து கிடைப்பதில்லை எல்லாத்துக்கும் அற்ப ஆயுசு தான். இது தான் நமக்கு கிடைத்த சாபம் போலும்.
நல்லது கெட்டது நாலையும் பேசி, கண்டு கேட்டு, உணர்ந்து சரியானதை தேர்ந்தெடுத்து வளரும் சமுதாயம் எவ்வளவு நல்லது. அது எந்த நிலையிலும் தன்னை அழியாது காத்துக்கொள்ளும், எந்த இடர்பாடுகளுக்கும் முகம் கொடுக்கும் நிலையில் தன்னை வைத்திருக்கும், உலகுக்கு தன் நிலை குறித்து உணர்த்தவும் தன் தனித்தன்மை குறித்து பெருமைபடவும் செய்யும்.... இந்த இலக்கை நோக்கி ஒரு சமூகத்தை பயணிக்க செய்ய முனையும் ஒரு கால கட்டத்தில்..... "நீக்கப்படும்" அல்லது "தணிக்கை" என்ற பொருள்படும் சட்டங்கள் கொண்டுவரலாமா?..
எனக்கு என்று நான் வைத்திருக்கும் சேவையில் யாரும் வந்து எனது விருப்புகளுக்கு இசையாத பட்சத்தில் நான் தணிக்கை செய்வேன் அல்லது நீக்குவேன் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர் கண்களுக்கு சர்வாதிகாரமாக தெரிந்தாலும்..., அது அவர் அவர் இஷ்டம் என்று தான் சொல்லலாம், இருந்தாலும் ஆனால் நமக்கு பிடித்தால் போவோம் இல்லை என்றால் விடுவோம் என்று மறுப்பதும் வருபவர்களின் உரிமை என்பதை மனதில் கொள்ளுதலும் அவசியமாகிறது.
இன்றைய நவீன எழுத்துலகில் ஒருவரின் சட்டங்களுக்கு
கட்டுபடவேண்டும், அல்லது கட்டுபட்டு தான் எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஒவ்வாமையை தோற்றுவிக்கிறது.
ஆனால் தமிழ் மணம் அப்படியல்ல ஒரு சேவை மனப்பான்மையோடு தொடங்கப்பட்டது ( அப்படிதான் நான் நேற்று வாசித்த ஏறக்குறைய எல்லா ஆக்கங்களிலும் இருந்து தெரிந்து கொண்டது), ஆக அங்கு யாவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருப்பது தான் நல்லது. அவரவர் கருத்து கண்ணோட்டம் அவரவர் சார்ந்தது.., இதில் மற்றவர் அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம்.
பொதுவாக ஒருவரது சிந்தனை, அறிவு, பெற்ற அனுபவம், கல்வி என்பவற்றை பொறுத்துதான் அவரது சமுகத்தின் மீதான பார்வை அல்லது உலக அளவிலான கண்ணோட்டம் இருக்கும். அது சிலருக்கு சரியாகவும் சிலருக்கு தவறாகவும் படலாம்... இதன்படி அவரவர் தன் மனவோட்டங்களை, எழுதலாம் அல்லது மேலும் சிலரின் மனவோட்டங்கள் நமக்கு புதிதாக இதுவரை நமது சமூகத்தில் இல்லாத ஒரு கருத்தாக ஒவ்வாமையாக இருக்கலாம்.
அதற்காக எதிர்மறையான கருத்துகள் அல்லது சிந்தனைகள் வரவே கூடாது என்று எதிர்பார்ப்பதும், தடுக்க நினைப்பதும் இயலாத காரியம் என்றே எனக்கு படுகிறது.
ஒரு சமூகத்தில் எல்லாரும் ஒத்த கருத்துகளையே கொண்டிருந்தால், அது அடிமைச்சமூகம் என்று தான் பொருள்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் யாருக்காவது கட்டுபடல் என்ற மனநிலையில் தான் அது சாத்தியப்படும்.
ஆனால் நிச்சயம் எதிர்மறையான கருத்துகளும், சிந்தனைகளும், தொடர்ந்து வெளிவரவேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் ஏன்? எப்படி? என்ன? என்ற கேள்விகள் வரும், ஆக இப்படியாக கேள்விகள் மற்றும் பதில்கள் என்று தேடல் இருக்கும் போது தான், ஒரு சமூகம் அடிமைதனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் பாம்பு சட்டை உரிப்பது போல் உரித்து வெளியில் வரும்.
ஆக இப்படியான கட்டுப்பாடுகள் சுய சிந்தனைகளை (அவை நம் நம் அளவுகோலின் படி நல்லதோ கெட்டதோ) கெடுக்கும் என்ற அடிப்படையில் தணிக்கை அல்லது நீக்கம் என்ற செயல்திட்டங்களை அமுல் படுத்துவதை சற்று மீள் பரிசீலனை செய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம்.
மேலும் அதிகரித்து வரும் பதிவுகளின் எண்ணிக்கையாலும், மூன்று மாதங்களுக்கு மேல் புதுப்பிக்கபடாத பதிவுகளை நீக்குவது என்பதையும் சற்று மீள் பரிசீலனை செய்தால் நல்லது என்று எனக்குப்படுகிறது.
காரணம் எல்லா வலைபதிவர்களும் தொடர்ந்து எழுதிகொண்டிருப்பவர்கள் அல்லர், தங்களது வாழ்வியல் வேலைகளுக்கூடே அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாங்கள் கண்ட கேட்ட உணர்ந்த விடயங்களை பதிப்பவர்கள் தான் அதிகம் இப்படி உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் பதிப்பது என்பது ஒரு சிலருக்கு முடியாத காரியம் அதுவும் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்து இருப்பவர்கள் என்றால் கொஞ்சம் கஷ்டம், அதுவும் மத்திய கிழக்கில் பணிபுரிபவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்..., ஏனென்றால் இங்கெல்லாம் மற்ற நாடுகளை போல் விடுமுறை நாட்கள் என்பது கிடையவே கிடையாது. வாரத்தில் ஒரு நாள் தான், அதுவும் சிலருக்கு கிடையாது,
மற்றும் விடுமுறை என்று ஊருக்கு போய் திரும்பி வரும் சமயங்களில் அப்படியே தமிழ் மணத்துடனான சொந்தம் கொஞ்சம் விடுப்பு எடுத்துக்கொள்ளும். ஆக இப்படியான சந்தர்ப்பங்கள் அநேகம் ஆகவே பதிவர்கள் எப்போது வந்து பதிந்தாலும் அப்போது அது தானாகவே Activate ஆக ( தமிழ் தெரிலீங்க) ஆவண செய்தால் நன்று.
சரி அறிவிப்பை செய்தார்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்கள், உடனே பலர் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒரு சிலர் அதை சரி என்று வாதிட்டார்கள்... ஆனாலும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள், சற்று காரமாகவே எழுதி விட்டார்கள். ( எழுதி வருகிறார்கள்) சரி என்று வாதிட்டவர்களை, சற்று இளக்காரமாகவே பின்னூட்டமிட்டார்கள்... இந்த இடத்தில் தமிழர்கள் நாம் எல்லோரும் நம்மை மறந்து செயற்பட்டு விட்டோமோ என்று நினைக்கிறேன்.
தமிழ் மணத்தில் உள்ள பதிவர்கள் எல்லாரும் மதிப்பிற்குறியவாகள் தான் (அவர்கள் வயதில் சிறியவரானாலும் பெரியவரானாலும் ). ஆனால் யாராவது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நம் ஒருவருக்கொருவர் செயல்படுகிறோமா?...வேற்று மொழிகாரனுக்கொன்றால் விட்டு கொடுத்துவிடுவோம் தமிழருக்குள் விட்டுக்கொடுத்தால் அது மான பிரச்சினையாகிறது.
உனக்கு எந்த விதத்தில் நான் குறைந்தவன் என்ற ஒரு இருமாப்பில் எழுதுவது போல் எல்லாரும் ரொம்பவே அவசரம் காட்டிவிட்டோம். இது வேண்டாம். என்னை பொறுத்தவரை அவசரமுடிவுகள் இருபக்கமும் உள்ளதாகவே நினைக்கிறேன். இதை பெரிது படுத்தவேண்டாம்,
நான் என்ன சொன்னேன்?, அதற்கு நீ என்ன சொன்னாய் என்றெல்லாம் தாக்குதலகள் தொடர்கிறது. தவறுகள் எங்கு இல்லை? எவரிடத்தில் இல்லை? எல்லாருமே ஏதோ வகையில் தவறுகிறவர்கள் தான் அது தான் மனித இயல்பு என்று தவறுக்கு பிறகு தன்னை திருத்திகொள்வது தானே படித்தவர்க்கு அழகு,
எல்லா மதிப்பிற்குறிய எழுத்தாளர்களும், வலைபதிவர்களும், அறிஞர்களும், நாம எதையாவது பதிக்கும் போது ஏதாவது ஒரு நோக்கத்துடன் தான் எழுதுகிறோம். தற்கால உலகத்தில் தமிழன் நிலையும் தமிழும் எப்படி இருக்கு என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நம் இனத்தின் பெரும் பகுதி இன்னமும் கால்வயித்து கஞ்சிக்கு வழியின்றி தான் இருக்கு, அநேகம் பேர் அடிப்படை கல்வி அறிவு இல்லாது கண்ட கண்ட பினாத்தல் பேர்வழிகள் பின்னால் போய் அவர்களை அண்ணாந்து பாத்து கையேந்தி தான் நிற்கிறார்கள். இன்னமும் அடிமைகளும் அடிமைதனமும் அப்படியே தான் கையாளப்படுகிறது.
இன்னமும் படித்தவர்கள் நாமே கூட நம் மக்களுக்கு துரோகம் செய்கிறோம்... நாம நாம சும்மா நமக்குள்ள சண்டை போட்டு பிரிந்து போவதில் யாருக்கு லாபம் என்று யோசித்து பாருங்கள்.. நமக்குள் நீ பெரியவனா? நான் பெரியவனா? அல்லது நான் இன்ன சாதி அல்லது நீ இன்ன மதம், நீ ஒழுங்கா? நான் ஒழுங்கா? என்று இப்படியே நாமே பேசிப்பேசி நம் மக்களை பிரித்து எதிரிக்கு வழிசமைத்து கொடுக்கிறோம்...
தமிழன் எங்கெல்லாம் செரிந்து வாழுகிறானோ? அல்லது எங்கெல்லாம் கூடி வாழ முற்படுகிறானோ? அங்கெல்லாம் இந்த சமூகம் பிளவு பட்டுதான் வாழுகிறது, அதனால் தான் இன்னமும் கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றிய தமிழும் தமிழ் இனமும், இன்னமும் அடுத்தவருக்கு சேவகம் செய்கிறது என்பது வேதனையான விடயம்.
ஐயா பெரியவுங்க நீங்க எல்லாம் சேர்ந்து நட்ட ஒரு ஆலமரம் வளர்ந்து விழுது விட தொடங்கும் போது அப்படியே வெட்டி சாய்கிறது சரிதானா? எல்லாரும் தனித்தனியே போய் தனிமரமா தான் நிற்பேன் என்று போனால், அது தோப்பாகுங்களா? இன்றைய காலகட்டத்தில் நிறைய தோப்புகள் உருவாகலாம், ஆனால் ஒரு தோப்பை அழித்து விட்டு தான் இன்னொன்னு உருவாக்கனுமா? நம்ம சமுகத்துக்கு இது தான் நீங்கல்லாம் கத்துகுடுக்கிற பாடமுங்களா? இப்ப புதிதாக வருகிற பதிவர்களுக்கும் இந்த நோய் தானே தொற்றும்.... அப்ப எப்படீங்க...?........
அதனால இந்த கிறுக்கன் முளைக்கு பட்டத சொல்றேன்... எல்லாரும் எல்லாதையும் மறப்போம், மன்னிப்போம், ஒரு முறை செய்தது தவறு அல்லது அவசரப்பட்டுவிட்டோம் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வோம், இதில் சுய கெளரவம் வேணாம்.., ஏதோ தப்பு நடந்து போச்சு போனது போகட்டும். இனி இப்படி நடக்காம பார்த்துக்குவோம்... எல்லாரும் எல்லாத்திலயும் சுதந்திரத்த அனுபவிப்போம், ஆனா நாம அனுபவிக்க முனைகிற சுதந்திரம், நாம செய்யப்போற காரியம் நம்ம இனம் தழைக்கவும் தலைநிமிரவும் பயன்படட்டும்.....,
ஆழக்கடலில் போய் மீன் பிடிப்பவர்கள் வலையில் எல்லா விதமான மீன்களும் தான் சிக்குது, அதுக்காக அவங்க எல்லாதையுமா? கரைக்கு கொண்டு வாராங்க..., அல்லது நமக்கு தேவையில்லாததும் கிடைக்குதுன்னு சொல்லி மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு போகாமலா இருக்காங்க...
"தமிழ் மணமும்" அந்த மாதிரி பரந்த நோக்கோடு இருக்கட்டும். யாரும் வந்து எழுதட்டும், நாம நாம நமது தேவைக்கு ஏற்ப மாதிரி Selective ஆக இருப்போமே. தமிழ் மணம் திரட்டிக்கு வரும் வாசகர்கள் தெரிந்து எடுத்து வாசிக்கட்டும், நமக்கு தேவையில்லாதது புறக்கணிக்கபடும் போது அதை தருபவாகள் தங்களை மாற்றிக்கொள்ள ஏதுவாகும்.
நாம எல்லாரும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழே வந்து.. மீண்டும் வீறு நடை போடுவோம்.
வீட்டை விட்டு போனவுங்க எல்லாரும் மீண்டும் வரட்டும் பழைய மாதிரி தமிழ் மணம் களை கட்டடுங்க.
நடக்குங்களா?... என்னமோ போங்க என் மனசுல பட்டத சுருக்குன்னு சொல்லிப்புட்டேன்.... இத பாத்துட்டு யாரும் நானும் ரொம்ப வெவரங்கெட்டதனமா? அவசரப்பட்டுட்டேன்னு எழுதிராதீங்க! நமக்கு தான் புத்தி பத்தாதுங்களே!
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக