ஜூன் 15, 2005

இரண்டாம் நாள்....

முதல் நாள் விழா, அமர்க்களமாகவே நிறைவடைந்த நிலையில்... இரண்டாம் நாளைய நிகழ்ச்சி பற்றி அப்போதே பார்வையாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு தோன்றி விட்டிருந்ததை பார்க்கக்கூடியதாய் இருந்தது.

இரண்டாம் நாள் ஜித்தா நகரின் பிரசித்தி பெற்ற வைத்தியசாலைகளில் ஒன்றாக விளங்கும் (King Fahd Hospital)கிங் பஹாத் வைத்தியசாலை ஆராய்ச்சிமைய கேட்போர் கூடத்தில் மாலை 6.00 மணிக்கு என்று இருந்தது..,ஆனாலும் நிகழ்ச்சி ஒரு 7.30 மணியளவில் தான் தொடங்கியது.

இன்றும் கூட முதல் நாள் வருகை தந்திருந்த,மேதகு இந்திய தூதர்,இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் விருந்தினர்கள்,வந்திருந்தார்கள்.

அன்றைய நிகழ்ச்சியிலும் விருந்தினர் இருவருக்கும் சங்கத்தின் சார்பில்,தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகர் மூலமாக நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவிற்கு அநேகர் வந்திருந்தார்கள்..., அதாவது மண்டபம் நிறைய ரசிகர்கள், ஆனாலும் முதல் நாள் விழாவிற்கு வந்தவர்களில் அநேகம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதை காணக்கூடியதாகவும், நிகழ்ச்சி மக்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்பதான ஒரு கதம்ப நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தொகுக்கபட்டிருந்தது,....

வேடிக்ககை வினோத நிகழ்ச்சி என்றதான "பாட்டுக்கு பாட்டு" "வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்" ஒரு வானொலி நாடகம்,கேள்வி நேரம் போன்றவை தான் நிகழ்ச்சி அம்சங்கள்.

இவற்றில் வானொலி நாடகம்,திரு.அப்துல் ஜப்பார்
திரு.அப்துல் ஹமீட்அவர்களும்,இணைந்து பங்கு பற்றி இலங்கை வானொலியில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால் ஒளிபரப்பான ஒரு நாடகம்.

உண்மையில் இந்த நாடகம் பார்வையாளர்களை கட்டி போட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும், ஆடை,அல்லது மேடை அலங்காரம் இல்லை,மின் விளக்குகள் வர்ணஜாலங்கள்..,மேடையில் அங்கும் இங்கும் நடைபயின்று வசனம் பேசும் இத்யாதி போன்ற எந்த ஒரு நாடக அம்சமோ அல்லது அமைப்போ கிடையாது. ஆனால் இரண்டே இரண்டு இல்லை சரியாக சொன்னால் மூன்று "ஒலிவாங்கிகள்"(Mikes)மட்டுமே பயன்படுத்தப்பட்டன...,

ஆச்சர்யம்!! ஆனால் உண்மை!. நாடகம் இது தான்.....

"அனார்கலியை உயிரோடு சமாதி வைத்தாகி விட்டது,சலீம் கோபம் கொப்பளிக்க தன் தந்தை அக்பர் சக்கரவர்திக்கெதிராக கிளர்ந்து அவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு பிரதேசத்தை தானே சுயமாக ஒரு நாடாக அறிவித்து விடுகிறான், தந்தைகெதிராக போர் தொடுக்கவும் ஆயத்தம்...,அவனது தாயார் வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்,பலன் இல்லை, கடைசியாக போர் மூள்கிறது.
போரிலே சலீம் தோல்வியை தழுவி,சிறைபடுத்தபபடுகிறான்...

பிறகு தந்தை நோயினால் படுக்கையில் வீழ்கிறார்....,தன் மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க ஆசை படுகிறார்,தூது போகிறது....,மகன் மறுக்கிறான்,தாயும் வந்து கெஞ்சுகிறார்,... மறுபடியும் மறுக்கிறான். பிறகு மனது மாறி தந்தையை பார்க்க போகிறான்..., அங்கே தந்தை இறந்து போகிறார்".....

சலீமின் நண்பனாக, அக்பரின் மந்திரியாக, அக்பரின் மனைவியாக மூன்று இதர ஜித்தா வாழ் கலைஞர்கள் பங்கு கொள்ள, அக்பராக திரு.அப்துல் ஜபாரும் , சலீமாக திரு.அப்துல் ஹமீட் அவர்களும், மிகவும் அற்புதமாக அருமையாக நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

ஒலி வாங்கிக்குள் தங்கள் குரலால் இந்த இருவரும் மாறி மாறி...."கோபம்","ஏக்கம்","பாசம்",
"அதிகாரம்","வேதனை","கர்வம்","வியப்பு" இப்படி இவ்வளவு பாவங்களையும்,வெளிபடுத்தி சபையோரை மெய் மறக்க செய்து விட்டார்கள் என்றால் மிகையில்லை.

நாடகம் முடிந்தது சபையில் கைதட்டல் ஓசை ஆரம்பமானது....,
ஏறக்குறைய ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தொடர்ந்து அது அரங்கத்துக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.

நான் பார்த்த வரையில் இப்படியான கைதட்டல், வெளிநாட்டுகளில் நடக்கும் விருது வழங்கும் வைபவங்களில் குறிப்பாக "கிராம்மி அவார்ட்ஸ்" "ஆஸ்கார் அவார்ட்ஸ்" என்று தொலைக்காட்சியில்
பார்த்த நிகழ்ச்சிகளில் யாருக்காவது ஒருவருக்கு ஏதாவது சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டு அவர் மேடைக்கு வரும் போது ரசிகர்கள், விருந்தினர்கள், பார்வையளர்கள் என்று அனைவரும்
கரகோஷம் செய்வார்களே அது போலதான் இருந்தது.

அந்த கரகோஷமே பார்வையாளர்களின் மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும், ஒன்றாக வெளிப்படுத்தியது என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இந்த நாடகத்தை நான் முதன் முதல் கேட்ட போது எனக்கு அப்போது 11 அல்லத 12 வயது தான் இருந்திருக்கும், அன்றும் கூட அதே மாதிரி, அதே உணர்வுகளுடன் அதே தன்மை மாறாது நான் கேட்ட போது எனக்குள் பெரும் வியப்பு.

எனது நண்பர்கள் எல்லாரிடமும் சொல்லி சொல்லி நான் ஆச்சர்யப்பட்டுபோனேன். ஓ! என்னவொரு அற்புதமான கலைஞர்கள்.

பிறகு "கேள்வி நேரம்" இதில் கேள்விகளை மிக அழகாக, நேர்த்தியாக தொகுத்து கேட்ட நண்பர் ஆசாத் அவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். காரணம் விருந்தினர் இருவரும் ஒரே துறைதான் என்றாலும் இருவரிடமும் இரு வேறு மாதிரியான வெளிப்பாடுகள்,பங்களிப்புகள், ஆக அவற்றுக்கு ஏற்றாற்போல் கேள்விகளை தயாரித்து கேட்டது சிறப்பாக இருந்தது.

திரு.அப்துல் ஜப்பார் அவர்கள் மிகவும் நகைச்சுவையாகவே எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தார்..., பதில் முடிந்து அடுத்த கேள்வி வருவதற்கான நேர இடைவெளி கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது, சபையில் இருந்து எழுந்து வந்த சிரிப்பும் மகிழ்ச்சி ஆரவாரமும் அடங்கதான் அந்த இடைவெளி என்பதை சொல்ல தேவையில்லை.

வாழ்கையை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டால் வாழ்கையில் அலுப்பும் தட்டாது, வயதும் தெரியாது என்பதற்கு இனி நான் யாருக்கும்
திரு.அப்துல் ஜப்பார்
அவர்களை தாரளமாக உதாரணம் காட்டலாம் போலிருக்கு....

திரு.அப்துல் ஹமீட் அவர்கள் தனது பதிலிலே அவரது மனது மறக்காத (இந்த சொல் அவரால் மட்டுமே பெரும்பாலும் உபயோகிக்கபடும்) அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

பதிலிலே நகைச்சுவை கலந்திருந்தாலும் சமூக பொறுப்பு தெரிந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கடைசியாக இருவரும் நன்றியுரையாற்றினார்கள். இருவரும் ஆளுக்கொரு குட்டிக் கதையோடு நன்றி சொல்லி விடைபெற்றார்கள்.

அதில் திரு.ஹமீட் அவர்கள் பேசும் போது,.... உண்மையில் விஞ்ஞானமும்,அறிவியலும் வளர்ந்துவிட்ட இந்த நூற்றாண்டில் மனிதம் தொலைந்து பிளவும்,பிரிவும்,ரணமும் பட்டு,தப்பான வழி நடத்தலில் தவறிப்போன மனங்களை களிம்பிட்டு பரிவு காட்டி,பிணைக்கும் ஒரு முற்போக்கான சிந்தனையோடு முடித்து கொண்டார் என்றால் அது மிகையில்லை.

இது அவரது கடல் கடந்த பயணங்களும்,சந்தித்த மனிதர்களும், பெற்ற அனுபவங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக தன் சமூகத்தின் பால் தான் கொண்டிருக்கும் பற்றையும்,தன் சமூக பொறுப்பையும் தான் காட்டி நிற்கிறது என்று சொன்னால் தப்பில்லை என்றே கருதுகிறேன்.

இவர்கள் இருவம் நீடித்த ஆயுளோடு மனித நேயத்திற்கான வழிகாட்டிகளாக,பாலமாக,தூதுவர்களாக பணிபுரிய வேண்டுமென்று வாழ்த்துவோம்....

நிகழ்ச்சி இரவு 11.00 மணியளவில் இராபோசனத்துடன் இனிதே நிறைவேறியது.

இந்த இடத்தில் ஜித்தா தமிழ் சங்கத்திடம் நன்றியுடன் ஒரு அன்பு வேண்டகோள்.....!

மீண்டும் இன்னுமொரு முறை திரு.ஜப்பார், திரு.ஹமீட் இருவரையும் மீண்டும் இங்கு அழைத்து..., இருவருக்கும் அவர்களை, அவர்களது துறையை, சேவையை கெளவரப்படுத்தும் வகையில், ஒரு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தால் என்ன?....

இதனால் ஜித்தா தமிழ்ச்சங்கம் ஒரு பெருமை கொள்ளட்டுமே!...

ஜூன் 04, 2005

ஜித்தா தமிழ் சங்கத்தில் இரண்டு நாட்கள்!..

வாழ்கையில் வளம் வேண்டும் என்பதன் பொருட்டு எம்மில் பலர் தம் சொந்த மண்ணை விட்டு ஊரை விட்டு உறவுகளை விட்டு எங்கெங்கொ வேற்று ஊர்களில் எம்மை தொலைத்து... வாழ வேண்டிய கட்டாயத்திலும், காலகட்டதிலும் இருந்தாலும், இன்னும் கலையின் பக்கம் இன்னும் தன் வேர்களை தொடர்ந்து வைத்திருக்கும் ஓருசில கலை ஆர்வலர்கள், கலைஞர்கள் தாம் வாழும் அந்தந்த நாடுகளில் அவ்வப்போது தங்கள் கலையார்வத்தால் ஏதாவது ஒரு ஒன்று கூடல், அல்லது கலை நிகழ்ச்சிகள் அல்லது விழாக்கள் நடத்துவது வழக்கம் ......

இந்த வகையில் சவுதி அரேபியா நாட்டின் புராதான நகரங்களின் ஒன்றும் பண்டைய தலைநகருமான ஜித்தாவில் உள்ள தமிழர்கள் ஒன்றினைந்து நடத்தி வரும் " ஜித்தா தமிழ் சங்கத்தில்" கடந்த வாரத்தில் இரண்டு விழா ஏற்பாடாகி இருந்தது... அதில் எனக்கும் கலந்துக்கொள்ளவதற்கு என் நண்பர் S.N. ராஜா அவர்கள் முலமாக ஒரு அழைப்பு கிடைத்து போயிருந்தேன்.(அவருக்கு என் நன்றிகள்)

விழா தமிழ் பற்றியும் அதன் தற்போதைய நிலையென்ன, ஏன்? என்ற கருபொருளே முன்னின்றது என்பதில் மனதிற்கு கொஞ்சம் சுகமாக இருந்தது என்றால் இம்மியளவும் பிசகில்லை.

விழாவிற்கு வந்த விருந்தினர்கள் இருவரும் வானொலியினாலும் தற்போது தொலைகாட்சியினாலும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் வீட்டின் நடுவில் வந்தமர்ந்து உள்ளங்களில் ஐக்கியமாகி போய் வி்ட்டவர்கள்...ஒருவர் "உங்கள் அன்பு அறிவிப்பாளன்" என்ற அடைமொழியுடன் கொண்ட
திரு B.H.அப்துல் ஹமீட் அவர்கள், மற்றவர் இதே மேற்சொன்ன ஊடகத்துறையிலேயே ஊறியும் தன் ஊருக்கு விலாசம் காட்டிய " திரு.சாத்தான் குளத்து S.M.அப்துல் ஜபார்" அவர்கள்.

மூத்த கலைஞர்கள், சிறந்த அறிவாளிகள், தான் சார்ந்த துறையிலே இருக்கக்கூடிய சமூக பொறுப்புகளை சற்றே அதிகம் உணர்ந்தவர்கள்., கணீர் குரலுக்கு சொந்தகாரர்கள் மனங்களை வசப்படுத்தும் ஆற்றல் ஊடையவர்கள், மொத்தத்தில் மனிதம் தெரிந்த மனிதர்கள்.

விழாவிற்கு சவதியரேபியாவிற்கான இந்திய தூதுவர் வந்து வாழ்த்தி சிறப்பித்ததும், இதே விழாவிற்கு சவதியரேபியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் வந்திருந்ததும், விழாவிற்கு சற்றே காம்பீரத்தை சேர்த்து விட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. அதனுடன் சற்றே நெஞ்சத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்ன வென்றால் இலங்கை இந்திய தமிழ் நெஞ்சங்களின் நெறுக்கம் என்றால் மிகையில்லை...

முதல்நாள் விழா மாலையில் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்திலேயே நடந்தது.., விழாவில் விருந்தினர்களின் உரையும், அவர்களை கெளரவிக்கும் வைபவமும் இடம்பெற்றது, இந்திய தூதுவர் திரு.அப்துல் ஹமீட் அவர்களுக்கும், இலங்கை உயர்ஸ்தானிகர் திரு. அப்துல் ஜபார் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். விருந்தினர் இருவரும் விழா நடைபெற அனுசரனையாக இருந்தவர்களை வாழ்தினார்கள்.

விழாவில் நான்கைந்து பேர் பேசினார்கள்... வரவேற்புரை, அறிமுகஉரை என்று இருந்தது, இதில் நண்பர் ஆசாத் அவர்கள் திரு அப்துல் ஹமீட் அவர்களை வரவேற்று அறிமுகப்படுத்தி பேசும் போது, திரு ஹமீட்டை பற்றி நிறைய தகவல்களை வந்திருந்தவர்களுக்கு அழகாக பேசினார், அவரது உரையை அவரிடம் பெற்று விரைவில் வெளியிடுவேன், இருந்தாலும் நான் இங்கு விழாவிற்கு அழைக்கபட்டிருந்த இருவரை பற்றி மட்டும் எழுதுகிறேன்.....

திரு.அப்துல் ஜபாரை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், மிக மிக எளிமையான மனிதர்...,அவ்வளவு ஒரு பணிவும் பரிவும் ஒருங்கே இணைந்தவர். யாரோடும் இலகுவில் பழகும் தன்மைக்குரியவர்..., அவரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது, ஆனாலும் செய்மதி ஒளி(லி)பரப்பூடாக வரும் "வெக்டோன்" தொலைகாட்சியூடாக தான் எனக்கு அவரை அறிமுகம். அதன்பிறகு தான் தெரியவந்தது, தீபம், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும் பங்காற்றுபவர் என்று. தமிழகத்திலிருந்து இலங்கை வந்து பின்னர் இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வந்து வாழ்ந்து வருபவர், வின் டிவி என்ற தொலைகாட்சி யில் செய்திபிரிவிற்கு தலைமை வகிப்பவர்...

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல் முக்கால்வாசி இலங்கை, இந்திய, பாக்கிஸ்தானிய மக்களை பைத்தியமாக்கிய கிரிகெட் விளையாட்டு நிகழ்ச்சியை தமிழில் நேரடி வர்ணணை செய்தவர்.

பெரிய காரியம், காரணம் வெள்ளைகாரன் அறிமுகப்படுத்திய விளையாட்டு, அதன் அனைத்து விளையாட்டு விதிகள், அந்த விளையாட்டு கலைச்சொற்கள், குறியீட்டு சொற்கள் எல்லாமே ஆங்கிலத்தில் தான் உள்ளன, ஆக தமிழில் பேசுகிறேன் பேர்வழியென்று... பிள்ளையார் பிடிக்க குரங்காகிய கதையாகமல் சிறப்பாக செய்தவர்...

இதன் பின்னர் தான் அதிகமான அறிமுக வெளிச்ச ரேகைகள் அவர் மீது விழுந்தது என்றால் கூட தவறில்லை என்று நினைக்கிறேன்.

அவர் பேசும் போது மிகவும் நகைச்சுவையுடன் பேசினார், கூட்டத்தில் அவ்வப்போது எழுந்த சிரிப்பலைகள் அதற்கு சாட்சி சொல்லிக்கொண்டிருந்தன... இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலை, அதன் எதிர்காலம், என்றிருந்தது அவரது பேச்சு. அவையை மிகவும் கலகலப்பக்கி, மக்களை தன்வசப்படுத்திக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

அடுத்து திரு.அப்துல் ஹமீட்டை பற்றி சொல்ல வேண்டுமென்றால்...., இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது அநேக தமிழர்களுக்கு திரு. அப்துல் ஹமீட் அவர்களை பாட்டுக்கு பாட்டு முலம் தான் தெரியும் அல்லது ராஜகீதம் மூலம் தெரியும். ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு தெளிந்த திறமையான படைப்பாளர், வானொலி மற்றும் மேடை நடிகர், நெறியாளர், சிறந்த வானொலி அறிவிப்பாளர்,மொத்ததில் சிறந்த கலைஞன்.

அவருடன் நெருக்கம் அல்லது எனக்கு அவர் பழக்கம் அல்லது அவருடன் நான் இருந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு ஒரு சற்று மேலிட்ட பெருமிதம், அந்த அளவுக்கு புகழ் மிக்க கலைஞன், தமிழை இப்படியும் அழகாக வசப்படுத்தி பேசமுடியும் என்பதற்கு நாம் வாழும் காலத்து சாட்சி.

1983ம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் இலங்கை வானொலியை கேட்டவர்களுக்கு தெரியும்,அதன் வீச்சும்,அதன் கீர்தியும்,அது வகித்த பொறுப்புகளும்.அறிவார்ந்த அல்லது அறிவுடன் எப்படி பொழுதை கழிக்கலாம் என்பதான அதன் செயற்பாடுகளும்.

காலை 6.00 மணி என்று நினைக்கிறேன் (பிறகு 5.30 மணிக்கு ஆரம்பித்தார்கள்) தொடங்கி இரவு 11.00 மணி வரை சேவை ஒன்றும் சேவை இரண்டும் தொடர்ந்து மாறி மாறி மக்கள் மனதில் ஒரு தனியிடம் பெற்றிருந்தது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் இப்போது ????? ...........

என் நினைவுக்கு எட்டிய வரையில் நான் ரொம்ப சிறுவனாக இருந்த காலத்திலேயே எனக்கு தமிழ் மீது ஆர்வம் வரப்பண்ணியது இந்த வானொலி தான் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு கொஞ்சம் கர்வம்.

அந்த காலகட்டங்களில் என் நினைவுக்கு எட்டியவர்கள் என்று பார்த்தால் திருவாளர்கள் அப்துல் ஹமீட், எஸ் கே. பரராஜசிங்கம், ஜோக்கிம் பெர்ணாண்டோ, ஜோர்ஜ் சந்திரசேகரன், நடராஜசிவம், சந்திரமோகன், எழில்வேந்தன், அருணா செல்லதுரை, எஸ். விஸ்வநாதன், ஜி. போல் என்டனி, பல்கலை வேந்தர் செல்லையூர் செல்வராஜன். அப்போது பகுதி நேர அறிவிப்பாளராக வந்த மஹதியாசன் இப்றாகிம், சேவை ஒன்றிலே வந்த ராவுத்தர் நயினா முகமத். விளம்பரத்திற்கென்றே இருந்து தனி முத்திரை பதித்த திரு.கே.எஸ் ராஜா.

திருமதிகள். சற்சுரூபவதி, புவனலோஜினி, விசாலாட்சி ஹமீட், மனோகரி சதாசிவம்,ராஜேஸ்வரி சண்முகம், இப்படி பட்டியல் நீள்கிறது, தமிழை அளவாக, அழகாக, பேசி தழிழுக்கு இலக்கணம் சேர்த்தவர்கள்.

இதில் திரு. ஹமீட் அவர்களின் நிகழ்ச்சிகளை நான் தவறுவதேயில்லை, அவரது நாடகங்கள், அல்லது அவர் பங்கேற்ற நாடகங்கள், அவர் தயாரித்த இசையும் கதையும், இசைக்கோலங்கள், இசைக்களஞ்சியம், வாலிபர் வட்டம், மெட்டொன்று, அந்தாதி, இன்பமும் துன்பமும், இலக்கியச்சோலை, இசைவெள்ளம், வானவில் மற்றும் விளம்பரதாரர் நிகழ்ச்சியான,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இசைச்செல்வம்,.. இலங்கை வங்கி மற்றும் ஜெபர்ஜீஸ் நிறுவனம் வழங்கிய நிகழ்ச்சி,இப்படி ஏராளம் (காலத்தின் ஒட்டத்தில் மனிதனுக்கே உரிய இந்த மறதியினால் அநேகமானவை மறந்தும் வி்ட்டது.)

இசையும் கதையும் நிகழ்ச்சியில் அவர் கதையை வாசித்துக்கொண்டு போகும் போது பாத்திரங்கள் உரையாடுவதாகவோ அல்லது நினைப்பதாகவோ, வரும் இடங்களிலே...
அந்த பாத்திரங்கள் படைக்கபட்ட அல்லது உலாவுகிற மண்ணிற்கேயுரிய மணத்தோடு பால் பிரித்து அவரே பேசும் கட்டங்கள் அருமையிலும் அருமை, அந்த பாத்திரங்களின் மனவோட்டங்கள், அதன் பிரதிபலிப்புகள், அதன் நிறங்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் நம் கண்முண் அப்படியே வந்து நிற்கும்.

எனது பாடசாலை நாட்களில் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது மாலை 4.30 மணிக்கு தான் இந்நிகழ்சிச்சி ஒளிபரப்பாகும், எனக்கும் அப்போது தான் எங்கள் ஊருக்கு பஸ் புறப்படும் நான் அன்று மட்டும் அந்த பஸ்ஸை விட்டுவிடுவேன், அந்த நகரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ஓட்டல் வாசலில் நின்று நிகழ்சிசியை கேட்டுவிட்டு தான் வீட்டிற்கு பஸ் ஏறுவேன், அந்த அளவிற்கு என்னை கட்டிப்போட்டவர்.

இவர் தயாரித்து தரும் நிகழ்சிகள் எல்லாம் எப்படி என்பது தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டவர்களுக்கு நன்கு தெரியும்,

மிகவும் ஜனரஞ்சகமாக அதே வேளை கேட்பவருக்கு பலனலிப்பதாயும், மீண்டும் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்கத்தூண்டவதாயும் இருந்தது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.

இலங்கையில் அநேக கலைஞர்களின் கலைப்பாதைக்கு வழி செய்தவர், அவர்களின் வளர்ச்சிக்கு அவர்களோடு துணைபோனவர், உள்ளுர் பாடல்களை ஒரு வீச்சோடு வெளிக்கொணர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர், வானொலியில் அவரது நிகழ்சிசகளில் ஏதாவது ஒரு ஈழத்து பாடலை அவர் சேர்த்துகொள்ள தவறிய தேயில்லை என்றே கூறலாம். இப்படி இன்னும் சொல்லிகொண்டே போகலாம்......

பின்னர் திரு. அப்துல் ஹமீட் அவர்கள்..., தமிழ்த்திரையிசை தழிழ் வளர்க்கிறதா? இல்லையா என்று பேசினார்..,உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது.

"ஒரு மனிதனின் தாய் மொழியை எப்படி தீர்மானிக்க முடியும்",என்று சற்று வித்தியாசமாக கூறினார்..., யோசித்து பார்த்தால் அது தான் உண்மை. ஆனால் எத்தனை பேருக்கு இந்த உண்மை புரிய போகிறது.... மொத்ததில் கசக்கும் என்பது மட்டும் திண்ணம்.

"ஒருவன் எந்த மொழி பேசினாலும், அவன் எந்த மொழியிலே சிந்திக்கிறானோ?...,அந்த அந்த மொழி தான் அவனது தாய்மொழியாகும்" என்றார். முற்றிலும் உண்மை தானே...,

"தழிழ் வளர்க்கிறோம் என்ற போலிப்பெயரில் உலகத்தில் உள்ள அறிவியல் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் பெயர் கண்டுபிடிப்பதிலேயே தமிழன் தன் காலத்தை வீணடித்திருக்கிறான் " என்றார்... யோசிக்கதக்க ஒன்று.

மேலும் அவர் " பிரான்ஸ் நாட்டில் எல்லாரும் பிரான்ஸ் மொழி தான் பேசுவார்கள், அதற்காக அறிவியல் கண்டுபிடிப்பான டெலிவிஷன், டெலிபோன், போன்றவற்றை அதன் பெயரிலேயே தான் குறிக்கிறார்கள், ஆனால் நம் கதை இப்படியா இருக்கிறது".என்று ஆதங்கப்பட்டார்," நாம் ஏதாவது கண்டுபிடித்து அதற்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும்".என்று கேட்டுக்கொண்டார்.

"ஜப்பான் நாட்டு பொருட்களை இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் யாரும் வங்குவதில்லை ஆகவே வியாபாரத்திற்காவது... தங்கள் பொருட்களின் பெயரை ஆங்கிலத்தில் வைத்தார்களா?.இல்லையே, எல்லாம் அவர்கள் டோயோட்டா, மிட்சுபிசி, பெனசோனிக், ஹொண்டா, இப்படி எல்லாமே அவர்கள் மொழியில் தானே வைத்தார்கள்"... என்று எல்லாரையும் சற்று சிந்திக்க வைத்தார்.

தொடர்ந்து அவர் " தமிழை ஏன் நாம் முழுவீச்சாக பயன் படுத்துவதில்லை" என்று ஒரு கேள்வியையும் வைத்து, ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார் " தமிழகத்திலே ஒரு முறை ஆரம்ப பள்ளிகளில் ஆண்டு ஐந்து வரை தமிழிலேயே தான் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்ற ஒரு சட்டம் அமுல்படுத்த பட்டபோது.. எல்லா தமிழ் பெற்றோர்களும் எதிர்ப்பு ஊர்வலம் போய் அதை எதிர்த்தார்கள். அப்போது அவர்களை அணுகி " ஏன் நீங்களே இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது, எல்லாரும் சொன்னார்களாம் தமிழ்க்கல்வி எங்கள் பிள்ளைகளுக்கு சோறு போடாது, என்றார்களாம்"

நிதர்சனமான உண்மை !...

"நம் தமிழ் அறிஞர்கள், ஏன் ஒரு முழுமையான கல்வி திட்டத்தை முழுவதும் தமிலிலேயே உருவாக்க கூடாது...?, அது அறிவியல் ஆகட்டும், வைத்தியத்துறை ஆகட்டும், பொறியியல் ஆகட்டும், விஞ்ஞானம் ஆகட்டும். அப்போது நமது மொழியிலேயே கற்று நம்மொழியும் நமக்கு சோறு போடும் மொழியாக்கலாமே!.

நம்மவர்கள் தன் துறைசார்ந்த உயர் கல்விக்காக, ஜேர்மன், ரஷ்யா, என்று போகிறார்களே, அங்கெல்லாம் கல்வி ஆங்கிலத்திலா கற்பிக்கப்படுகிறது? இல்லையே அவர்கள் மொழியில் தான் கற்றுக்கொடுக்கபடுகிறது, அந்த அந்த நாடுகளின் வர்ச்சியும் உலகத்தில் அவைகளின் பங்கும் நாம் அறியாதது இல்லை.

ஆக இங்குள்ளவர்களுக்கு ஏன் இப்படி ஒரு கல்வித்திட்டதை உருவாக்க முடியவில்லை அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் தழிழ் மொழி நிச்சயம் எல்லாருக்கும் சோறு போடும் மொழியாக மாறும்",

இதை அவரே ஓரிரு தமிழறிஞர்களிடமும், தமிழ் ஒன்றுகூடல்களிலும் முன்வைத்ததாகவும், சொன்னார்.
நல்ல உதாரணம், நல்ல தொலைநோக்கு சிந்தனைதான் ஆனால் யார் செய்யப்போகிறார்கள்?,

தொடர்ந்து அவர் தனது உரையின் இறுதியில் " ஆக எல்லாரும் தமிழ் வளர்க்கவிட்டாலும் பரவாயில்லை இருப்பதையாவது காப்பாறு்றுவோம், அதை பலவீனப்படுத்தி அழித்து விடவேண்டாம்"... என்று கேட்டுக்கொண்டார்.

உரை முடிந்ந்தது. பலத்த கரகோஷம் அவையில்..., எல்லாருக்கும் விழிப்பு வந்த மாதிரி இருந்தது. காரணம் என்ன தெரியுமா? என்னை பொறுத்தவரை தமிழன் மட்டுமே இன்னொரு தமிழனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கம் கொண்டவர்கள்.

இது படிக்காதவர்கள் மத்தியில் மிகவும் குறைவு, மற்ற முக்கால் வாசிப்பேர் இப்படித்தான், அதிலும் புலம் பெயர்ந்து வாழும் கொஞ்சம் படித்த அல்லது தங்களை படித்ததாக காட்டிக்கொள்கிற தமிழ் மக்கள் மத்தியில் நூற்றுக்கு நூறும் அப்படிதான். அது தான் எல்லாருக்கும் விழிப்பு வந்த மாதிரி என்று குறிப்பிட்டேன்.

ஏனென்றால் தமிழ் மொழி கலைக்கு மட்டும் தான், அதாவது கதை, கவிதை பாட்டு, நாடகம், திரைப்படம் போன்றவற்றுக்கு மட்டும் என்ற ஒரு நிலையில் அல்லது எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.....

இதை படிப்பவர்கள் யாரும் நான் மொழி வெறியன் மற்ற மொழிகளை வெறுப்பவன் என்று மட்டும் யாரும் நினைத்து விடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எனது வலைப்பதிவில் இது வரை தழிழ் பற்றி மட்டுமே ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பதால் யாராவது நினைக்ககூடும்... நான் மொழித்துவேஷம் கொண்டவன் என்று.

அப்படி இம்மியளவும் கிடையாது, எனக்கு ஒரே ஆசை தமிழன் மத்தியில் தமிழ் தமிழாகவே பேசப்படவேண்டும், தொடர்ந்து தமிழ் வாழ வேண்டும், அதை விடுத்து அந்த மொழி எதிர்காலத்தில் நூதன சாலை கட்சிக்கூடங்களில் கண்ணாடிப்பெட்டியில் ஓலை வடிவில் ஒரு வரலாற்று காலப்பகுதியை, சொல்வதாக இருக்க கூடாது. அவ்வளவு தான்.

இரண்டாம் நாள் விழா பற்றி தொடர்ந்து எழுதுவேன்....