ஜூன் 15, 2005

இரண்டாம் நாள்....

முதல் நாள் விழா, அமர்க்களமாகவே நிறைவடைந்த நிலையில்... இரண்டாம் நாளைய நிகழ்ச்சி பற்றி அப்போதே பார்வையாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு தோன்றி விட்டிருந்ததை பார்க்கக்கூடியதாய் இருந்தது.

இரண்டாம் நாள் ஜித்தா நகரின் பிரசித்தி பெற்ற வைத்தியசாலைகளில் ஒன்றாக விளங்கும் (King Fahd Hospital)கிங் பஹாத் வைத்தியசாலை ஆராய்ச்சிமைய கேட்போர் கூடத்தில் மாலை 6.00 மணிக்கு என்று இருந்தது..,ஆனாலும் நிகழ்ச்சி ஒரு 7.30 மணியளவில் தான் தொடங்கியது.

இன்றும் கூட முதல் நாள் வருகை தந்திருந்த,மேதகு இந்திய தூதர்,இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் விருந்தினர்கள்,வந்திருந்தார்கள்.

அன்றைய நிகழ்ச்சியிலும் விருந்தினர் இருவருக்கும் சங்கத்தின் சார்பில்,தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகர் மூலமாக நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவிற்கு அநேகர் வந்திருந்தார்கள்..., அதாவது மண்டபம் நிறைய ரசிகர்கள், ஆனாலும் முதல் நாள் விழாவிற்கு வந்தவர்களில் அநேகம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதை காணக்கூடியதாகவும், நிகழ்ச்சி மக்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்பதான ஒரு கதம்ப நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தொகுக்கபட்டிருந்தது,....

வேடிக்ககை வினோத நிகழ்ச்சி என்றதான "பாட்டுக்கு பாட்டு" "வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்" ஒரு வானொலி நாடகம்,கேள்வி நேரம் போன்றவை தான் நிகழ்ச்சி அம்சங்கள்.

இவற்றில் வானொலி நாடகம்,திரு.அப்துல் ஜப்பார்
திரு.அப்துல் ஹமீட்அவர்களும்,இணைந்து பங்கு பற்றி இலங்கை வானொலியில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால் ஒளிபரப்பான ஒரு நாடகம்.

உண்மையில் இந்த நாடகம் பார்வையாளர்களை கட்டி போட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும், ஆடை,அல்லது மேடை அலங்காரம் இல்லை,மின் விளக்குகள் வர்ணஜாலங்கள்..,மேடையில் அங்கும் இங்கும் நடைபயின்று வசனம் பேசும் இத்யாதி போன்ற எந்த ஒரு நாடக அம்சமோ அல்லது அமைப்போ கிடையாது. ஆனால் இரண்டே இரண்டு இல்லை சரியாக சொன்னால் மூன்று "ஒலிவாங்கிகள்"(Mikes)மட்டுமே பயன்படுத்தப்பட்டன...,

ஆச்சர்யம்!! ஆனால் உண்மை!. நாடகம் இது தான்.....

"அனார்கலியை உயிரோடு சமாதி வைத்தாகி விட்டது,சலீம் கோபம் கொப்பளிக்க தன் தந்தை அக்பர் சக்கரவர்திக்கெதிராக கிளர்ந்து அவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு பிரதேசத்தை தானே சுயமாக ஒரு நாடாக அறிவித்து விடுகிறான், தந்தைகெதிராக போர் தொடுக்கவும் ஆயத்தம்...,அவனது தாயார் வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்,பலன் இல்லை, கடைசியாக போர் மூள்கிறது.
போரிலே சலீம் தோல்வியை தழுவி,சிறைபடுத்தபபடுகிறான்...

பிறகு தந்தை நோயினால் படுக்கையில் வீழ்கிறார்....,தன் மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க ஆசை படுகிறார்,தூது போகிறது....,மகன் மறுக்கிறான்,தாயும் வந்து கெஞ்சுகிறார்,... மறுபடியும் மறுக்கிறான். பிறகு மனது மாறி தந்தையை பார்க்க போகிறான்..., அங்கே தந்தை இறந்து போகிறார்".....

சலீமின் நண்பனாக, அக்பரின் மந்திரியாக, அக்பரின் மனைவியாக மூன்று இதர ஜித்தா வாழ் கலைஞர்கள் பங்கு கொள்ள, அக்பராக திரு.அப்துல் ஜபாரும் , சலீமாக திரு.அப்துல் ஹமீட் அவர்களும், மிகவும் அற்புதமாக அருமையாக நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

ஒலி வாங்கிக்குள் தங்கள் குரலால் இந்த இருவரும் மாறி மாறி...."கோபம்","ஏக்கம்","பாசம்",
"அதிகாரம்","வேதனை","கர்வம்","வியப்பு" இப்படி இவ்வளவு பாவங்களையும்,வெளிபடுத்தி சபையோரை மெய் மறக்க செய்து விட்டார்கள் என்றால் மிகையில்லை.

நாடகம் முடிந்தது சபையில் கைதட்டல் ஓசை ஆரம்பமானது....,
ஏறக்குறைய ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தொடர்ந்து அது அரங்கத்துக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.

நான் பார்த்த வரையில் இப்படியான கைதட்டல், வெளிநாட்டுகளில் நடக்கும் விருது வழங்கும் வைபவங்களில் குறிப்பாக "கிராம்மி அவார்ட்ஸ்" "ஆஸ்கார் அவார்ட்ஸ்" என்று தொலைக்காட்சியில்
பார்த்த நிகழ்ச்சிகளில் யாருக்காவது ஒருவருக்கு ஏதாவது சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டு அவர் மேடைக்கு வரும் போது ரசிகர்கள், விருந்தினர்கள், பார்வையளர்கள் என்று அனைவரும்
கரகோஷம் செய்வார்களே அது போலதான் இருந்தது.

அந்த கரகோஷமே பார்வையாளர்களின் மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும், ஒன்றாக வெளிப்படுத்தியது என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இந்த நாடகத்தை நான் முதன் முதல் கேட்ட போது எனக்கு அப்போது 11 அல்லத 12 வயது தான் இருந்திருக்கும், அன்றும் கூட அதே மாதிரி, அதே உணர்வுகளுடன் அதே தன்மை மாறாது நான் கேட்ட போது எனக்குள் பெரும் வியப்பு.

எனது நண்பர்கள் எல்லாரிடமும் சொல்லி சொல்லி நான் ஆச்சர்யப்பட்டுபோனேன். ஓ! என்னவொரு அற்புதமான கலைஞர்கள்.

பிறகு "கேள்வி நேரம்" இதில் கேள்விகளை மிக அழகாக, நேர்த்தியாக தொகுத்து கேட்ட நண்பர் ஆசாத் அவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். காரணம் விருந்தினர் இருவரும் ஒரே துறைதான் என்றாலும் இருவரிடமும் இரு வேறு மாதிரியான வெளிப்பாடுகள்,பங்களிப்புகள், ஆக அவற்றுக்கு ஏற்றாற்போல் கேள்விகளை தயாரித்து கேட்டது சிறப்பாக இருந்தது.

திரு.அப்துல் ஜப்பார் அவர்கள் மிகவும் நகைச்சுவையாகவே எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தார்..., பதில் முடிந்து அடுத்த கேள்வி வருவதற்கான நேர இடைவெளி கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது, சபையில் இருந்து எழுந்து வந்த சிரிப்பும் மகிழ்ச்சி ஆரவாரமும் அடங்கதான் அந்த இடைவெளி என்பதை சொல்ல தேவையில்லை.

வாழ்கையை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டால் வாழ்கையில் அலுப்பும் தட்டாது, வயதும் தெரியாது என்பதற்கு இனி நான் யாருக்கும்
திரு.அப்துல் ஜப்பார்
அவர்களை தாரளமாக உதாரணம் காட்டலாம் போலிருக்கு....

திரு.அப்துல் ஹமீட் அவர்கள் தனது பதிலிலே அவரது மனது மறக்காத (இந்த சொல் அவரால் மட்டுமே பெரும்பாலும் உபயோகிக்கபடும்) அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

பதிலிலே நகைச்சுவை கலந்திருந்தாலும் சமூக பொறுப்பு தெரிந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கடைசியாக இருவரும் நன்றியுரையாற்றினார்கள். இருவரும் ஆளுக்கொரு குட்டிக் கதையோடு நன்றி சொல்லி விடைபெற்றார்கள்.

அதில் திரு.ஹமீட் அவர்கள் பேசும் போது,.... உண்மையில் விஞ்ஞானமும்,அறிவியலும் வளர்ந்துவிட்ட இந்த நூற்றாண்டில் மனிதம் தொலைந்து பிளவும்,பிரிவும்,ரணமும் பட்டு,தப்பான வழி நடத்தலில் தவறிப்போன மனங்களை களிம்பிட்டு பரிவு காட்டி,பிணைக்கும் ஒரு முற்போக்கான சிந்தனையோடு முடித்து கொண்டார் என்றால் அது மிகையில்லை.

இது அவரது கடல் கடந்த பயணங்களும்,சந்தித்த மனிதர்களும், பெற்ற அனுபவங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக தன் சமூகத்தின் பால் தான் கொண்டிருக்கும் பற்றையும்,தன் சமூக பொறுப்பையும் தான் காட்டி நிற்கிறது என்று சொன்னால் தப்பில்லை என்றே கருதுகிறேன்.

இவர்கள் இருவம் நீடித்த ஆயுளோடு மனித நேயத்திற்கான வழிகாட்டிகளாக,பாலமாக,தூதுவர்களாக பணிபுரிய வேண்டுமென்று வாழ்த்துவோம்....

நிகழ்ச்சி இரவு 11.00 மணியளவில் இராபோசனத்துடன் இனிதே நிறைவேறியது.

இந்த இடத்தில் ஜித்தா தமிழ் சங்கத்திடம் நன்றியுடன் ஒரு அன்பு வேண்டகோள்.....!

மீண்டும் இன்னுமொரு முறை திரு.ஜப்பார், திரு.ஹமீட் இருவரையும் மீண்டும் இங்கு அழைத்து..., இருவருக்கும் அவர்களை, அவர்களது துறையை, சேவையை கெளவரப்படுத்தும் வகையில், ஒரு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தால் என்ன?....

இதனால் ஜித்தா தமிழ்ச்சங்கம் ஒரு பெருமை கொள்ளட்டுமே!...

1 கருத்து:

மரிய குமாரன் சொன்னது…

இவ்வளவு வெவரமா எழுதுறீங்க, வாக்களிப்பு வசதி செய்ய மறந்துட்டீங்களே!

அப்பதான் உங்கள் பதிவுகள் தமிழ்மனத்தில் சில நாட்கள் பட்டியலிடப்படும். நன்றி.