பிப்ரவரி 09, 2005

கண்டதையும் கேட்டதையும் சொல்கிறேன்

தமிழினிச்சாகுமா? -
தமிங்கிலம் காலத்தின் கட்டாயமா?
கடந்த வாரத்தில் ஒருநாள் தீபம் தொலைக்காட்சியின் பேட்டி நிகழ்ச்சியொன்றில் எழுத்தாளர் திரு.காசிஆனந்தனின் உரையாடலை காண நேர்ந்ததது. அதில் அவர் பாரதி சொன்ன மெல்லத்தழினிச்சாகும் என்ற வாக்கு பலிக்கதான் போகிறது என்று மிகவும் கவலையுடன் சொன்னார். அதிலிருந்து ஒரு சில.......

ஆங்கிலேயர் இந்தியாவை (தமிழ் நாட்டை) ஆண்ட காலங்களில், விடுதலைப்போராட்டம் நடந்தபோதும் தமிழ் மொழிக்கு எந்த ஒரு ஆபத்தும் இருந்ததில்லை, ஆனால் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெயேறிய பின்னர் தான் ஆபத்து வந்திருக்கிறது, எப்டியென்றால் இப்போது தான் தழிழ்படங்கள் ஆங்கிலப்பெயர் கொண்டு வருகின்றன..., மேலும் பாடல்கள் கூட ஆங்கில வார்த்தைகள் கலந்து வருகின்றன, கேட்டால் காலத்தின் தேவை என்று சொல்லப்படுகிறது, அது என்ன அப்படியொரு தேவை?. தமிழன் தமிழ் தானே பேச வேண்டும் அது என்ன மற்ற மொழிகளில் போய் கலப்பது?.

எங்கள் ஊரில் (இலங்கையின் கிழக்குக்கரையில் உள்ள மட்டகளப்பில்) ஏறத்தாள 500 வருடங்களுக்கு முன் வந்து குடியேறிய போர்த்துகீச இனத்து மக்கள் வாழ்கிறார்கள். இன்றும் அவர்கள் தங்கள் வீடுகளிலும் தங்கள் மக்களோடும் பேசும் போது தங்களது மொழியிலேயே பேசுகிறார்கள், அதாவது எறத்தாழ 500 ஆண்டுகள் தமிழர் மத்தியில் வாழ்ந்தும் ஒரு சமுகம் இன்னமும் தனது மொழியை இழக்கவில்லை, ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து மொரீஸீயஸ் போன தமிழனுக்கு இன்று தமிழ் தெரியாது..... என்று அவர் சொல்லும் போது, உண்மையில் இது ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாக தான் இருக்கிறது, அதே போலத்தான் தென்னாபிரிக்காவி்ல் வாழும் தமிழர்களின் நிலையும். ஆகவே இப்படி பார்க்கும் போது பாரதியின் வாக்கு மெய்படுமோ? என்ற பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் அவர் "ஒருவர் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வருகிறார், அவரிடம் அவரது நண்பர் ஹீரோ யார்? பைட் எல்லாம் எப்படி?, சோங்ஸ் எப்படி? என்று தான் கேட்கிறார். காதல் என்ற வார்தையை கூட லவ் யூ என்று தான் சொல்கிறார்கள், போதாகுறைக்கு இப்போது "லவ் யூ டா" என்று வேறு என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து ஒரு அவர் "தமிழா நீ பேசுவது தமிழா?" என்ற ஒரு பாடலை எழுதி இருப்பதாகவும், அதை தமிழகத்தின் ஒருசில முன்னனி பாடகர்கள் அதை பாடுவதாகவும் சொன்னார் (அவர் சொன்னவர்களில் இருவர் மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கிறது.. அதில் ஒருவர் திரு சீர்காழி சிவ சிதம்பரம் மற்றவர் புஸ்பவனம் குப்புசாமி). அந்த பாடலின் ஓரிரு வரிகளைக்கூட படித்துக்காட்டினார்.(யாராவது இந்த பாடலை தெரிந்தவர்கள் இருந்தால் வலையில் பதித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என
நம்புகிறேன்).

ஒரு நாள் ஒருவர் அவரிடத்தில் வந்து ஐயா! எனக்கு உங்கள் பாடலின் வரிகளை கொஞ்சம் பாடிகாட்டுங்கள் என்று கேட்டாராம், இவரும் பாடிகாட்டியிருக்கிறார்.. வந்தவரும் கேட்டுவிட்டு "சூப்பர்!!!" என்றாராராம். இதை சொல்லி காட்டி, அவர் மேலும் அழிக்க வரும் மொழிக்கு எப்போதுமே ஊடுருவும் சக்தியும், ஆக்கரமிக்கும் சக்தியும் மிகவும் அதிகம் என்றார்.

இன்னுமோர் உதாரணம் சொன்னார் "தமிழகத்தில் திரைப்பட துறையை சார்ந்த ஒருவர் தமிழ் உணர்வுடன் தனது நிறுவனத்திற்கு "தமிழ்த்தாய்" என்று பெயர் வைத்திருக்கிறார் ஆனாலும் கீழே
"சினி கிரியேஷன்ஸ்" என்று போட்டதில் தமிழ்தாயை கொலை செய்தது போலாகிவிட்டது, இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழ் வளர்க்க பாடுபடுகிறவர்களின் மத்தியில் தான் இந்த அழிக்கும் மொழி சற்று அதிகமாகவே ஊடுறுவி விடுகிறது அது தான் சொன்னேன் அழிக்க வரும் மொழிக்கு எப்போதுமே சக்தி அதிகம் என்று. ஆகவே நாம் இந்த இடத்தில் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்தது அவரது உரையாடல்.

தமிங்கிலம் ஏன்? யார் காரணம்?
இப்போது நாம் நம் அன்றாட வாழ்வில் தமிழாகிப்போன ஆங்கிலத்தை அதிகமாகவே பார்க்கிறோம், அதிலும் தமிங்கிலம் பேசும் தமிழர்கள் ஏறக்குறைய முக்கால் வாசிப்பேர், அதுவும் படித்தவர் மத்தியில் இது நூற்றுக்கு நூறு என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் நன்றி - தேங்ஸ் ஆனதும், நேரம்-டைம் ஆனதும், காலை- மோர்னிங்கானதும், மாலை நேரம்-ஈவினிங்கானதும், இப்படி ஏராளம் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே! ஆகவே தமிழ் வளர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு நம்மையறியாமலே நாம் தொலைந்து போகக்கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளது என்றால் பிழையில்லை.

இதற்கு யார் காரணம்?
பதில்: தமிழராகிய நாமே தான்.
ஒரு மொழியை இருவகைப்படுத்தலாம், ஒன்று எழுத்தது வழக்கு மற்றது பேச்சு வழக்கு, என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். பேச்சு வழக்கு எனும் போது ஒரே மொழிபேசும் மக்கள் கூட்டம் வெவ்வேறு இடங்களில் ஒன்றாக வாழும் போது காலம் போக போக அந்த அந்த இடத்திற்குறிய பண்புகளுடனும், அவ்விடத்தில் வாழும் மற்ற இனத்தாருடனும் இசைந்து அல்லது மருவி, ஒலியமைப்புக்ள், ஓசையமைப்புகள் மாறி வாழுவது கண்கூடு. இதானல் அந்த மக்களின் வார்தை பிரயோகங்கள் வித்தியாசப்படுகின்றன என்பதும் எல்லாரும் அறிந்ததே!.

இப்படி இருக்க தமிழன் மட்டுமே நான் பேசுவது சரியா நீ பேசுவது சரியா என்ற விதண்டா வாதத்திற்குள் வீழ்ந்து வாழ்ந்து கொண்டிசுக்கிறான். இதில் எனது சொந்த அனுபவம் நிறையவே இருக்கிறது

உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏறக்குறைய நான்கு வகையான ஓசையமைப்புகளை உடையதும் வார்தை பிரயோகங்களை உடையதுமான தமிழையே பேசுகிறார்கள். வடக்கில் உள்ளவர்கள் ஒருமாதிரியும், கிழக்கில் உள்ளவர்கள் ஒரு மாதிரியும், மத்திய மாகாணத்தில் உள்ளவர்கள் ஒருமாதிரியும் (இவர்கள் பேசுவது தமிழகத்தின் பேச்சு வழக்கு), தலைநகரிலும் அதையொட்டிய கரையோரபிரதேசங்களில் உள்ளவர்கள் ஒருமாதிரியும், பேசுவார்கள். தமிழகத்தில் கூட ஒவ்வொரு ஊருக்கு ஒரு வழக்கு இருப்பது தெரியும். மேலும் மலேசியா தமிழர்கள் வேறுமாதிரியாக பேசுவார்கள். ஆனால் அடிப்படையில் எல்லாரும் தமிழர்கள். (இதில் இலங்கை தமிழர்கள் வரிசையில் வரும் இஸ்லாமிய சகோதரர்களின் பேச்சு வழக்கு என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை, காரணம் இவர்களது தலைவர்களின் குறுகிய நோக்கம் கொண்ட தவரான ஒரு பாதையில் நடத்தப்பட்டதால் இவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை, இதில் விதிவிலக்கான சில கல்விமான்கள், அறிஞர்பெருமக்கள் இருக்கிறார்கள். இதில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் உலக அறிவிப்பாளர் திரு.அப்துல் ஹமீட் அவர்களை நிச்சயம் குறிப்பிட வேண்டும். இது தொகையில் மிகவும் குறைவு. அதெல்லாம் இங்கு வேண்டாம். )

இது இவ்வாறு இருக்க இலங்கையின் மத்திய மாகாணப்பகுதியில் இருந்து ஓருவர் வந்து வடக்கு மாகாண தமிழ் பேசும் ஒரு நான்கைந்து பேருடன் உரையாட நேர்கையில்..., அந்த இடத்தில் உள்ள அதிக நபர்கள் பேசும் வழக்கு தான் எடுபடுகிறது.., வந்தவரின் ஒரு சில வார்தைபிரயோகங்கள் கேலி செய்யப்படுகிறது, இந்த நிலையில் அந்த தனித்த நபரின் மன நிலை மிகவும் சங்கடப்படுகிறது. இதை மற்ற மாதிரியும் எடுத்துகொள்ளலாம் வடக்கில் இருந்து வரும் தனி நபர் வேறு பாணியில் பேசும் நான்கைந்து பேருடன் பேசும் போது அவரும் விமர்சிக்கபடுகிறார். ஆக இந்த இடத்தில் தமிழருக்குள்ளே நீ பேசுவது சரியா நான் பேசுவது சரியா என்று விவாதம் தொடங்கிவிடுகிறது. இதை தவிர்க்தான் தமிழர்கள் தாம் போது விமர்சிக்கபடுவோம் அல்லது கேலிசெய்யப்படுவோம் என்று நினைக்கிற வார்தைகளை ஆங்கில வார்தைகளால் நிரப்ப எத்தனித்ததின் விளைவு தான் இன்றைய தமிழுக்குள் வந்து விழுந்த ஆங்கில வார்தைகள். இந்த ஆங்கில வார்தை பிரயோகங்கள் மிக அண்மையில் அதுவும் 70களின் கடைசிப்பகுதியில் இருந்து தான் இந்த ஆக்கிரமிப்பு தொடங்கியது என்று நினைக்கிறேன், சரியா தவறா தெரியவில்லை.

உதாரணமாக மாலைவேளை என்ற வார்தையை மத்திய மாகாணத்தில் உள்ள ஒருவர் "அந்திக்கு" என்கிறார்... ஆனால் வடக்க்கில் உள்ள ஒருவர் எப்படி பேசுகிறார் என்றால் "சாயந்திரம்" என்கிறார். ஆக இப்படி பேசும் போது வரக்கூடிய கிண்டல் விமர்சனங்களை தவிர்க்க உடனே அந்த இடத்தில் "ஈவினிங்" என்ற வார்தையை யாராவது ஒருவர் பிரயோகிக்க அதையே மற்றவரும் தொடர, இந்த மாலை நேரத்தைகுறிகும் இரண்டு தழிழ்வார்தைகளையும் ஆங்கிலம் உள்வாங்கி ஏப்பம் விட்டுவிகிறது. ஆக இரண்டு தமிழ் வார்தைகள் கொலைசெய்யப்பட்டு விட்டன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச்சிறிய உதாரணம். ஆனால் இது சத்தியமான உதாரணம். இது போல் தான் மற்ற மற்ற தமிழ் வார்தைகள் கூட தன் முகவரியை தொலைத்து விட்டு நிற்கின்றன. யாராவது அறிஞர் பெருமக்கள் எப்படி ஆங்கில வார்தைகள் புகுந்தன என்று ஆராய்ந்தால் நிச்சயம் நான் சொன்ன நிலை புரியவரும்.

இது போல தற்காலிகமாக தப்பிக்க ஆங்கில வார்தைகளை செருகப்போக நாளடைவில் தமிழ் மருவி தமிழ் வார்தைகள் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே சொன்னால் புரிந்து கொள்ள கூடிய அளவில் வளர்ந்து விட்டது.

மேலும் கொஞ்சம் படித்த தமிழர்கள், மற்றவர் மத்தியில் தன்னை உயர்வாக காட்டவேண்டும் என்ற குறுகிய நோக்கில் ஆங்கிலம் கலந்து பேசுவதை பார்கிறோம். இதை பார்த்த மற்றவர்களும் தானும் நான்கு பேருக்கு மத்தியில் சற்று பிரகாசமாக தெரியவேண்டும் என்பதற்காக இப்படி பேச பழகிக்கொள்கிறார்கள். இப்படி பேசப்போக தான் இன்று தமிழ் சோபையிழந்து தொலைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன செய்யலாம்?.
முதலில் தகவல் தொடர்பு சாதனங்களில் முன்னனியில் விளங்கும் தொலைகாட்சி ஊடாக தமிழை தமிழாக பேசவைக்க முயற்சிக்கலாம். அதிலும் ஒரு சில போட்டி நிகழ்ச்சிகளுக்கு வரும் நீதிபதிகளை கட்டாயமாக தமிழ் மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுககொள்வது மிகவும் அவசியம். மேலும் நிகழ்ச்சி வழங்கும் அறிவிப்பாளர்கள் கட்டாயம் இதை கடைபிடித்தல் அவசியம் அப்போது தான் பார்ப்பவர்கள் திருந்த வாய்பு வரும். பூனைக்கு யார் மணி கட்டுவது.

தமிழக தொலைக்காட்சியான "சன் டிவி" ?????? யில் (பாருங்கள் எப்படி பெயர் என்று) இந்த நிலையத்தில் சந்திப்போமா? என்ற ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது இப்போது எப்படியோ தெரியாது. அதில் வரும் அறிவிப்பாளர் ஒரு இலகு தமிழில் ஆங்கிலம் கலக்காது விருந்தினரை பேட்டி எடுப்பார், அழகாக இருக்கும். ஆகவே கட்டாயம் இதை மற்றவர்கள் பார்த்தால் நல்லது.

எல்லாவற்றையும் விட நாம் ஒவ்வொருவரும் மற்றவர் பேசும் போது அவரை ஊக்குவித்தல் அவசியம், அதைவிடுத்து என்னா சார் நீங்க வேற மாதிரி தமிழ் பேசுறீங்க என்றால் அது மற்றவர் மனதை நிச்சயம் காயப்படுத்தும், அப்படி காய்படுத்தும் போது நிச்சயம் அதற்கு ஆங்கில சொற்கள் அவர்களுக்கு மருந்தாக தோன்றி தமிழுக்கு நஞ்சாக மாறும்.

மொத்ததில் தமிழை உடனடியாக அதன் உண்மை வடிவத்திற்கு கொண்டு போக முடியாது. எப்படி சிறிது சிறிதாக ஆங்கிலம் உள்ளே வந்ததோ?, அது போலதான் அதை முற்றாக வெளியேற்றுவதற்கும், கொஞ்சம் காலம் எடுக்கலாம். அதற்காக தமிழர்களாகிய நாம் எல்லாருமே ஒன்று திரண்டால் வெற்றி நிச்சயம்!

மெல்லத் தமிழினித் தழைக்கட்டும்!
புதுப்பொழிவு பெறட்டும்.பிகு:
கண்டதையும் கேட்டதையும் கொண்டு தமிழ் பால் உள்ள பற்றுதலால், என் எண்ணங்களை கிறுக்கல் ஆக்கியிருக்கிறேன். தவறுகள் நேர்ந்திருப்பின் தமிழ் உலகின் அறிஞர் பெருமக்கள் தயவு செய்து அடியேனை பொறுத்துக்கொள்ள வேண்டி நிற்கிறேன்.


பிப்ரவரி 07, 2005

தமிழகத்தின் காந்தி

17-01-2005,

தொலைகாட்சி ஒன்றில், "காமராஜர்" என்ற ஒரு திரைபடத்தை பார்க்க வாய்பு கிடைத்தது,
திரு.காமராஜரை பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்.... அவ்வளவாக தெரிந்து கொள்ள எனக்கு வழிகாட்டியும், அறிவும், வாய்பும்கிட்டியதில்லை.

என்ன ஒரு இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தமிழகம் இருந்திருக்கிறது..., பின்னாளில் எப்படி ஒரு நல்ல நிலையை அடைய பாதை போடப்படுகிறது என்றெல்லாம் பார்த்த போது,நாம் எவ்வளவு அதிஷ்டம் அற்றவர்கள் என்று மனது சங்கடப்பட்டுபோகிறது.

தமிழன் எப்போதுமே துரதிர்ஷ்டகாரன் தானே....! அவனுக்கு எது தான் தொடர்ந்து கிடைத்தது? அவரது ஆட்சியின் கீழ் வாழ தமிழ் நாட்டுக்கு கொடுத்துவைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
என்ன ஒரு அடக்கம், என்னவொரு மிடுக்கு, கம்பீரம், பேசும் போது என்ன ஒரு சிக்கனமான தெளிவான வார்த்தை பிரயோகம்...,அப்பப்பா!

காங்கிரசில் இருந்த அத்தனை பேரும் அவருக்கு தந்த மரியாதை. தான் வாழ்ந்த முறை இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது தமிழன் தான் உண்மையான அரசியலுக்கும், தலைமைத்துவத்துக்கும் முன்னோடி என்றால் மிகையாகாது. உலகில் எவ்வளவோ அரசியல் சித்தாந்தங்கள், கொள்கைகள், உருவாக்கியுள்ளன,இதை உருவாக்கியவர்கள் கூட இப்படி வாழ்ந்தார்களா எனபது சந்தேகமே!.

இந்த படத்தை தயாரித்தவர் உண்மையில் பாராட்டுக்குறியவர், இந்த மாதிரியான படங்களை அடிக்கடி எல்லா தமிழரும் பார்க்கும் படி செய்ய வேண்டும். எல்லா தமிழ் தொலைகாட்சி நிலையங்களும் இந்த படத்தை காட்ட முனையவேண்டும். அப்போது தான் வரும் எதிர்கால சமுதாயத்தில் முளைக்க கூடிய அரசியல் தலைகள் தரமுள்ளதாக அமையும்.

அப்போது தான் மீண்டும் தமிழன் தலைநிமிர்வான்.