டிசம்பர் 16, 2018

சம்பளம்! சம்பளம்! சம்பளம்!


நமக்கு மட்டும் தான் ஒவ்வொரு முறையும் இந்த போராட்டம் தேவையாக இருக்கு..... ஏன்?😪
பொதுவாக எங்குமே அதாவது எல்லா வேலை தளங்களிலும், நிறுவனங்களிலும் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் தன் வியாபாரத்தின் வரவு செலவு கணக்குகளை சோதித்து பார்த்து அதை தொழில்முறையாக சட்டவரைவுக்குட்பட்ட கணக்காய்வு செய்து (Internal and external Audit) தன் லாப நட்டங்களை மதிப்பீடு செய்வது என்பது எல்லாரும் அறிந்த விடயம்.
ஒவ்வொரு நிதியாண்டும் (Financial Year) அது முடியும் தருவாயிலோ இல்லை ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாவவோ அடுத்த நிதியாண்டிற்கான ஒரு வரவு செலவு திட்டத்தை (Budget) உருவாக்கி கடந்த ஆண்டு கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்புகளை சீர்செய்வார்கள், தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வார்கள். அதன் மூலம் தான் அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரித்தல், ஊழியர்களின் வேதன உயர்வு, போனஸ் கொடுப்பனவுகள், பதவியுயர்வுகள் என்று அத்தனை அனைத்து அம்சமும் தீர்மானிக்கபடுகின்றன கட்டமைக்கபடுகின்றன. ஆக இந்த பெருந்தோட்ட கம்பனிகளில் நிச்சயமாக இந்த நடைமுறை இருக்கும்.
தற்போது அரச அதிகாரம் பெற்று தோட்டங்களை நிர்வகிக்கும் 23 கம்பனிகள் இந்த நடைமுறையை நிச்சயம் பின்பற்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இப்படியிருக்கும் சந்தர்பத்தில் நட்டத்தில் இயங்கும் கம்பனிகள் என்றால் ஏன் தொடர்ந்து தோட்டங்களை நிர்வகிக்க வேண்டும்? அரசிடம் கொடுத்து விட்டு போக வேண்டியது தானே!...
நீங்கள் யாராவது தொடர்ந்து கடன் பட்டுகொண்டே நட்டத்தில் வியாபாரம் செய்விர்களா?... எந்த முட்டாளும் செய்யமாட்டான். ஆக லாபம் இருக்கத்தான் செய்யும்.....
அவ்வாறாயின் அதன் முதுகெலும்பாக இருக்கும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தில் ஏன் இந்த பாராமுகம். நமது தோட்ட தொழிலாளர்களுக்கு இவ்வளவு நாளைக்கு என்றாவது போராட்டம் என்ற ஒன்று இல்லாமல் ஒரு ரூபா சம்பளம் கூடியிருக்கிறதா?..... இந்த 100 அல்லது 150 கால வரலாற்றில் எனக்கு தெரிய ஒரு நாள் ஊதியம் 24 ரூபாவாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஒவ்வோர் கட்டத்திலும் போராடி தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது.

வேதனையாக இல்லையா?.... யோசிக்க நாதியில்லையா?.
இந்த லட்சணத்தில் மலையகத்தில் இப்போ கல்வியறிவு வீதம் ஒப்பீட்டளவில் அதிகம். அநேக கணக்காளர்கள், கணக்காய்வாளர்கள், வழக்குறைஞ்சர்கள் நீதிமான்கள் என இப்படியாக இந்த தோட்டத்தின் தேயிலை வேர்களில் இருந்து வந்திருக்கிறார்கள் ஆனா என்னா புண்ணாக்குக்கு..... நம்ம மக்களை தெளிவு படுத்தவோ?.... வழிநடத்தவோ ஒரு நாதியில்லை.

நாதியற்ற சமூகமாக.... அநாதைகளாக்கபட்டவர்களாக இருக்கிறோம்.
வருபவர் கண்களுக்கும் 
காண்பவர் மனசுக்கும்
பசுமை படைத்து நிற்கிறோம்

உடலுக்கும் உள்ளத்திற்கும்
இதமான தேநீர் தந்து நிற்கிறோம்

காலங்காலமாய் வாழ்வும் வளமும் வேண்டி
போராடி நிற்கிறோம்
இப்போ ஒரு ஆயிரம் ரூபாவிற்க்கு வீதியில் 
நிற்கிறோம்......