ஆகஸ்ட் 25, 2005

அவசரகால சட்டமும் - தமிழர் படும் பாடும்

உலகத்தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு.
யாரோ ஏதோ செய்தார்கள், அது வெற்றியா தோல்வியா? அல்லது அவர்கள் நினைத்தது நடந்ததா தெரியவில்லை... ஆனால் இலங்கை பேரினவாத அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

இதனால் மீண்டும் தமிழர் நிலை திண்டாட்டமாகி போனது தான் பெரும் சோகம்!

ஆம், கடந்த வார கதிர்காமர் கொலையின் பின்னர் இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.... !
இதன் தொடர்ச்சியாய், குறிப்பாக கொழும்பில் வரையறையற்ற கைதுகள் இடம்பெறுவதை காணக்கூடிய தாக இருக்கிறது... தினம் தினம் ஊடகங்களி்ன் தலைப்பு செய்திகளை இவை மாத்திரமே அடைத்து நிற்பதை எல்லாரும் அறிவோம்.

அதுவும் தமிழர் மட்டுமே இப்படி கைது செய்யப்படுகிறார்கள்....
சிறையில் விடப்படுகிறார்கள் என்று மட்டும் தெரியும். ஆனால் அப்படி கைது செய்யப்பட்டவர்கள் யார் பின்னர் அவர்களின் நிலையென்ன திரும்பவும் விடுதலை செய்யப்பட்டார்களா? யாருக்காவது தெரியுமா? அரசாங்கம் யாருக்காவது தெரியப்படுத்துகிறதா?, எந்த ஊடகத்துக்காவது தெரியுமா?

நேற்று சுடரொளி பத்திரிகையின் நிருபர் புகைப்படபிடிப்பாளர் இலங்கை பொலீஸ் அல்லது ராணுவம் அல்லாத ஜேவிபியின் ஆயுதம் தாங்கிய அங்கத்தவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவரது புகைப்பட கருவிகள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன.... உடமைகள் களவாடப்பட்டிருக்கின்றன, காரணம் சுடொரொளி பத்திரிகை விடுதலைப்புலிகளின் பத்திரிகை என்ற கண்ணோட்டத்துடன்.

கொழும்பிலே வைத்து இலங்கையின் எதிர்கட்சி தலைவரின் வீட்டுப்பகுதியில் வைத்து ஒரு தமிழர் கைது செய்யப்படடிருக்கிறார். அதுவும் இவர் நாட்டிலிருந்து ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னாலேயே புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் வசிப்பவர், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர், தற்போது விடுமுறையில் இலங்கைக்கு வந்து அவர் கல்வி பயின்ற ரோயல் கல்லூரியையும் அதன் விளையாட்டு மைதானத்தையும் தனது புகைப்பட கருவியில் பதிவுசெய்த வேளை, எதிர்கட்சி தலைவரின் வீட்டை படம் பிடித்தார் என்று கைது செய்யபட்டிருக்கிறார். ( அதாரம் வெக்டோன் செய்திக்குறிப்பு)

இப்படி வெளிவந்தவை கொஞ்சம் வராதவை ஏராளம் எழுதினால் எழுதலாம் எழுதிக்கொண்டேயிருக்கலாம்.

ஐயோ பாவம் தமிழர்கள்!
அதுவும் குறிப்பாக கொழும்பை நாடிவரும் தமிழர்கள்.

ஏன் வருகிறார்கள்?
கீழே நான் சொல்ல போவது இலங்கையில் இருக்கும் அல்லது அங்கிருந்து புலம் பெயர்ந்த தழிழர்களுக்கு தெரியும், ஆனால் இலங்கையை பற்றி அறியாத தமிழர்களுக்காக சற்று விளக்கமாக சொன்னால் தான் அவர்களுக்கு தமிழரின் பாடு புரியும் என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.

சாதாரணமாக நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பிற்கு தான் வரவேண்டும் என்பது கட்டாயம், இது எல்லாருக்கும் தெரியும்.

குறிப்பாக பார்ப்போமானால் ஏதாவது பெரிய நோய் அல்லது அது குறித்த சிகிச்சைக்காக, பெரிய வைத்தியசாலைகள் தேவையென்றால் அதற்கும் கொழும்புதான்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடி வரவேண்டுமென்றால் அதற்கும் கொழும்பு தான்....

அரசாங்க காரியங்கள் ஆகவேண்டுமென்றாலும், குறிப்பாக குடிவரவு குடியகல்வு ஆவணங்கள், பத்திரங்கள் அத்தாட்சிபடுத்தல் எல்லாம் கொழும்பு தான்...

அரசாங்க அமைச்சக அலுவல்கள் அதாவது இடமாற்றம், அல்லது பதவி நியமன கடிதம், சம்பள மாற்றத்தை உறுதிபடுத்த, அல்லது ஏதாவது ஆவணம் பெற, குறிப்பாக கல்வி திணைக்களம், சுகாதார திணைக்களம் சம்பந்தமானவை என்றாலும் கொழும்பு தான்.
இது குறிப்பாக தமிழருக்கு மாத்திரம் அதிகம் எனலாம்.

வாகனம், மற்றும் போக்குவரத்து திணைக்கள சம்பந்தமான அரசு சம்பந்தபட்ட வேலைகளுக்கும் கொழும்பு தான்....

யாராவது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க, அல்லது மனுக்களை தர அல்லது தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும் கொழும்புதான்.

மற்றது வெளிநாட்டில் வேலை செய்து வீடு திரும்பும் போதும் அவர்களை வரவேற்று எதிர்கொள்ளவும், அல்லது திரும்ப வழியனுப்பிவைக்கவும் கொழும்புதான்.

வெளிநாட்டு பொருட்களை கொண்டு சென்றால் அதை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கவும் கொழும்புதான் ( இது நாட்டின் ஏனைய ஒரு சில இடங்களில் இருந்தாலும் தழிழர்களுக்கு கொழும்புதான்)

இதில் இன்னோர் முக்கிய விடயம் வடக்கு கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் அல்லது அனுப்பிய பணத்தை பெற்றுக்கொள்ளவும், அல்லது அவர்களோடு தொலைபேசி தொடர்புகொள்வதற்கும் கொழும்பிற்கு தான் வரவேண்டும் என்ற கட்டாய நிலையிருந்தது, யுத்த காலங்களில் வடக்கு கிழக்கிற்கு அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்து இருந்த வேளையில்... இப்போது எப்டியோ தெரியாது.

அடுத்தது முக்கியமாக பெரும்பாலான தழிழ் இளைஞர்கள், யுவதிகள் தொழில் நிமித்தம் வருவதும் கொழும்பு தான். கொழும்பிலே தங்கம், மற்றும் ஆடை ஆபரண தொழில் மற்றும் வியாபாரம் அல்லது மற்ற வியாபாரத்தில் அநேகம் பேர் தமிழர்கள் தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும்.

மற்றது கலை துறை சார்ந்த வேலைகள், அதாவது தொலைகாட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டுமென்றாலும், ஏதாவது பிரத்தியேக ஒலி அல்லது ஒளிபதிவுகளுக்கும் கொழும்பு தான்.

இப்படி எதற்கெடுத்தாலும் கொழும்பு! கொழும்பு! கொழும்புதான்!,

ஆக இப்படி இருக்கும் நிலையில் கொழும்பு என்பது மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதது, தினம் தினம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகர் தேடி வரும்போது அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதது.

தலைநகரில் இரவு தங்குவது என்பது நிச்சயமற்ற ஒன்று, உறவினர், நண்பர் வீடோ? அல்லது விடுதிகளோ?, ஹோட்டல்களோ? எல்லாமே பயம் தான் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

ஆகவே தூர இடங்களிலிருந்து வருபவர்கள் அநேகர் இரவோடு இரவாக தான் தலைநகரை நோக்கி புறப்படுவார்கள் காரணம் காலையில் தலைநகருக்குள் வந்து தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலையில் தலைநகரைவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

மாலை ஆறு மணிக்கு பின்னர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்தை சென்று பார்த்தவர்க்கு தெரியும். வவுனியா, மட்டகளப்பு, மற்றும் பதுளை நோக்கி (முற்றிலுமான தமிழ் பிரதேசங்கள்) போகும் இரவு கடுகதி புகையிரதத்திற்கு எவ்வளவு சனங்கள் இருப்பாகள் என்பதை.
ஏன் தெரியுமா? இரவு தங்கி சிலநேரம் தாமும் சந்தேகத்தில் கைது செய்யப்படலாம் என்ற பயமும் அதனால் வரும் சிக்கல்களக்கு ஆளாக முடியாத பயமும் தான்.

மீண்டும் மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணியளவில், இதே கோட்டை ரயில் நிலையத்துக்கு சென்றால் தெரியும், மேற்சொன்ன இடங்களிலிருந்து புறப்பட்டு காலையில் கொழும்பை அடையும் இரவு கடுகதி புகையிரதத்தில் எவ்வளவு சனம் வரும் என்று.....

தங்களின் தேவைகளை சுமந்து கொண்டு, தூக்கம் தொலைத்து, களைத்து போய், தைரியத்தை கைவிடாது, ஒரு நிமிஷமும் வீணாகி போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பில் எல்லாரும் பிரதான வெளிவாயிலை நோக்கி ஓடுவதை..... பார்க்க பரிதாபமாக இருக்கும்.

ஐயா!, அந்த இடத்தில் இருந்தால் தெரியும் அதன் வேதனையும் வலியும்.
இதை நானும் அனுபவித்தவன் என்ற அளவில் எனக்கு அந்த வலி வேதனை, களைப்பு, பயம், எல்லாம் தெரியும்.

ராணுவத்தினரோ, அல்லது போலீசோ நீங்கள் புகையிரத நிலையத்திலிருந்து அல்லது வெளியில் வரும் போதோ பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது உங்களை மறித்து நிறுத்தி உங்களை சோதனையிடும் போது உயிர் போய் வரும், காரணம் நீங்கள் தமிழனாய் இருப்பது தான், ராணுவ அதிகாரியோ போலீஸோ உங்களை அந்த இடத்திலே கைது செய்யலாம், யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் அவசரகாலசட்டம்,

கொழும்பு வருபவர்களில் அநேகம் பேர் ஓரே நாளில் தங்களது வேலைகள் பூர்த்தியடையாமல் மறுநாளும் இருக்க வேண்டிய ஒரு சூழல் வந்து, எங்காவது தங்கியிருக்கும் போது சோதனை என்று வந்தால் போச்சு, போலீசில் பதிவு செய்யவில்லையா, உடனே கைது.

அந்த ஒரு நாளுக்காக எங்கு போய் என்னத்தை பதிவது,

ஏனென்றால் பதிவு செய்வது என்பது இன்னும் சிக்லான விடயம். ஏனென்றால் கொழும்பில் போலீசில் பதிவு செய்வதாய் இருந்தால், ஒரு நபர் தான் நிரந்தரமாக வதியும் முகவரி அப்பகுதி கிராம சேவகரால் உறுதிசெய்யப்பட்டு அது அப்பகுதிக்குறிய போலீஸ் நிலையத்தில் அத்தாட்ச்சிபடுத்தபட்டிருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் கொழும்பில் பதிவு செய்யலாம். அதிலும் நிறைய சிக்கல் உண்டு அதையெல்லாம் சொல்லி முடியாது.

ஆக வந்த வேலை பாதியில் நிற்க நாம் தீடிரென தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் சந்தேகம் என்று அழைத்து செல்லப்பட்டு விட்டால், ஒன்னு கிடக்க ஒன்னாகிவிடும் அதாவது வந்த வேலையை முடிக்கவும் முடியாது, தொடரவும் முடியாது, அதிலிருந்து வெளிவர ஆகக்குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும், ஆனால் தமிழர் விடயத்தில் இரண்டு நாட்கள் எல்லாம் வெறும் பொய்.

அப்போது அந்த தமிழரின் உணர்வு எப்படியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். அவரின் காலம், நேரம் வீண், பட்ட சிரமம் வீண், பணம் வீண், எல்லாமே பாழ்பட்டுபோயிருக்கும். பிறகு வெளியில் வந்து திரும்ப முதலில் இருந்து தனது காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். இதில் பாதிக்கபடுகிற மொத்த அப்பாவித்தமிழர்களின் உணர்வை இழப்பை யாராவது கணக்கிட்டு இருக்கிறார்களா?, இல்லை.

இதில் கைது செய்யப்படும் பெண்கள் பாடு பெரும் பாடு,
பாருங்கள் இலங்கையில் தமிழனாய் பிறந்ததின் பலனை!

குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, அதற்காக அப்பாவி தமிழர்கள் எவ்வளவு பேர் பாதிக்க படுகிறார்கள் என்று யாருக்காவது அக்கரையிருக்கா?

அண்மையில் லண்டன் குண்டு வெடிப்பு இடம் பெற்றது, தேடுதல் நடத்தப்பட்டது கைதுகள் இடம்பெற்றன.... இதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயம் கைது செய்யப்பட்டதா?...,

ஆனால் இலங்கையில் நடப்பது என்ன? சந்தேகம் என்றால் அது ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் மீது மட்டும் தான் விழுகிறது.
இது ஏன்? இந்த விடயத்தில் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்களும் ஸ்தாபனங்களுகம் ஏன் இதை பார்க்க மறுக்கின்றன. சாதாரண ஒரு பிரஜையை சும்மா கைது செய்து கொண்டு போய் சிறைப்படுத்தி பின்னர் விடுதலையாகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரது உள உணர்வுகள் எப்படியிருக்கும்?

யாராவது யோசிக்கிறார்களா?... தமிழன் தானே அவனுக்கென்ன உளமாவது, உணர்வாவது என்ற எண்ணம் தானே.

பிறகு எப்படி சமாதானம், சம உரிமை சகோதரத்துவம் எல்லாம் வரும் எல்லாம் வார்தைகளாக மட்டுமே தான் இருக்கும்.

தமிழ் மணத்தில் இருக்க கூடிய அறிஞர்கள், தமிழர் சமூக நலவிரும்பிகள், தமிழுக்காக குரல் கொடுப்பவாகள், எழுச்சிமிக்க சிந்தனைவாதிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்து, சர்வதேச சமூகத்தை மனித உரிமைகள் ஸ்தாபனங்களை, இந்த பிரச்சினையை சற்று உற்று நோக்க வைக்க முடியாதா?

இலங்கை பேரினவாத அரசுக்கு சற்று அழுத்தம் கொடுக்க வைக்க முடியாதா?.....

நான் இந்த பதிவை ஏன் இடுகிறேன் என்றால், எனது சொந்த அனுபவம் தான் காரணம். மீண்டும் இலங்கையில் அவசரகால சட்டம் என்றதும் எனக்குள் மறந்து போயிருந்த அந்த கசப்பான நினைவுகள் மீண்டும் விழித்து கொண்டதன் விளைவு தான்.

மற்ற நாடுகளில் அவசரகால சட்டம் எப்படியென்று எனக்கு தெரியாது, ஆனால் இலங்கையில் அந்த சட்டம் ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது என்றால் மிகையில்லை.

முடிந்தால் எனது அடுத்த பதிவில் அச்சட்டத்தால் 90களின் கடைசிப்பகுதியில் தலைநகரில் நான் பெற்ற இன்பத்தை?????????

உங்களோடு பகிர்ந்துகொள்ள பார்க்கிறேன்.

ஆனால் அதற்கு முன் ஏதாவது செய்ய முடிந்தால் நலமென்று
இந்த கிறுக்கனுக்கு தோன்றியது!

6 கருத்துகள்:

கரிகாலன்-karikaalan சொன்னது…

நல்லதொரு பதிவு.நீங்கள் பெற்ற இன்பத்தை அறிய ஆவலாய் உள்ளோம்.இதே சட்டத்தின் கொடூரங்களை நேரடியாக கண்டவர்கள்தான் நாம்.அனால் மனித
உரிமை கூட தமிழன் என்றால் எட்டி
நிற்கும்.

Jananayagam சொன்னது…

இருதயராஜ், நீங்கள் மிகவும் அசாதரணமாக எழுதுகிறீர்கள்.நிகழ்வுகள் சார்ந்து எழுதுவதில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது.தொடருங்கள்.எமக்கொரு நல்ல விமர்சகர் உருவாகிறார்.முயற்சியுடன் நிறைய எழுதுங்கள்.
அன்புடன்
ஜனநாயகம்

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

கரிகாலன்,& ஜனநாயகம்
இருவருக்கும்
நன்றிகள்!

பெயரில்லா சொன்னது…

Great Blog! If you have time see my ##business opportunities## related site. enjoy!

பெயரில்லா சொன்னது…

Don't Give Up!

To reach success, you have to persevere. Even Thomas Edison had to learn this. When he was creating the incandescent light bulb, it took him more than 10,000 times to get it right. Keep striving even when it becomes challenging.

For more information about need money ,
go to need money . It pretty much covers
need money related stuff.

பெயரில்லா சொன்னது…

Cool blogg. Thanks for letting me visit and leave a comment. mp3 file