அவசர காலசட்டமும் தமிழர் படும் பாடும்
என்ற பதிவின் தொடர்ச்சி....
......நான் வெளியில் அமர்ந்திருந்த அந்த தாயிடம் பேச்சு கொடுத்தேன் அவர் சொன்ன தகவல் பெரும் அதிர்ச்சியை தந்தது, அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர், மறுநாள் காலை அவரது இளைய மகளுக்கு ஏதோ தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக போக வேண்டும், அவருக்கு இதயத்தில் ரத்த ஓட்ட பகுதியில் ஏதோ சிகிச்சையாம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவர்கள் அன்று மாலையில் தான் கொழும்பிற்கே வந்திருக்கிறார்கள், "அதற்குள் அவசரகால சட்டம் அதன் வேலையை காட்டிவிட்டது".
அந்த தாய் எங்கள் ஊர் பேர் விபரம் எல்லாம் கேட்டார், மிகவும் அன்பாக பேசினார். பின்னர் சொன்னார் " என்ன தம்பி இப்படி ஜோக் அடித்து கொண்டிருக்கிறீங்கள்..., பேசாம உட்கார்ந்து பிராத்தனை பண்ணுங்கள் கெதியா வீட்டுக்கு அனுப்ப வேணும் என்று. நான் சொன்னேன் கடவுள் வருவதாய் இருந்தால் அவர் கொழும்பில் எத்தனை ஜெயிலுக்கு தான் போவார் என்று...
எனக்கு என் மன நிலையை சொல்ல வார்தையில்லை, மனதில் சோர்வு, ஒரு வித பயம்.... எங்களை 29ம் திகதிக்குள் வெளியில் விடுவார்களா?.... இசை நிகழ்ச்சிக்கு போக முடியுமா? என்ற எண்ணம் வேறு. மேலும் எல்லாரும் நின்ற நிலை, உட்கார முடியாது காரணம் இடம் காணாது, எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும் பிறகு ஒவ்வொருவராக மாறி மாறி அந்த தரையில் அமர்ந்து எழ தொடங்கினோம். விடிய ஒரு ஐந்து மணியிருக்கும் நான் அப்படியே தரையில் அமர்ந்தேன், சுவரில் சாய்ந்து தூங்கிவிட்டேன்.
இரண்டாவது நாள் காலையிலேயே எங்கள் முத்த சகோதரரின் கடையில் இருக்கும் அவரது உதவியாளாகள் விடயம் கேள்விப்பட்டு ஓடி வந்து விட்டார்கள், அவர்கள் போய் அந்த நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில விசரணைகள் இருக்கும் அது முடிந்ததும் அனுப்பிவிடுவோம் என்று.
சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணீர் கிடையாது, அப்படியே உறவினர்கள் எங்களை பார்க்க வருபவர்கள் ஏதாவது வாங்கி வந்தாலும் சாப்பிட முடியாது, அந்த சூழல் அப்படி...., மேலும் வாழ்கையில் முதல் அனுபவம், போலீஸ், கைது, சிறையென்று,
ஆனால் 29ம் திகதி அன்று காலை ஒருவரை கைது செய்து வந்து எங்களுடன் சிறையில் இட்டார்கள், வந்தவர் எங்கள் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார் அப்போது எங்கள் மத்தியில் இருந்த இன்னொரு இளைஞரை அடையாளம் கண்டு கொண்டார்..... இருவரும் சிங்களத்தில் உரையாடிக்கொள்கிறார்கள். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை அந்த இருவரும் மக்களிடம் பணப்பை திருடும் வழக்கத்தை கொண்டவர்கள், (பிக்பொக்கட் என்று தமிழில் சொன்னாதானே விளங்கும் இல்லீங்களா? ).
பிறகு நடந்தது தான் வேடிக்கை, வந்தவர் உரக்க தமிழும் சிங்களமும் கலந்து சொல்கிறார் " மே மினிசு புலி நெவே! எலி!....,
புலி இன்னே கெலே!, மூங் எலி! அப்பராதே பாங், மூவ கெனல்லா தியேன்னே".
அதாவது "ஏய் இவர்கள் எல்லாம் புலி இல்லை சாதாரண எலி, புலியெல்லாம் காட்டுக்குள்ளே இருக்கு அநியாயமா போய் எலியை பிடித்து வந்திருக்கிறீர்களே" என்று கிண்டலாக சொன்னார். கிண்டலில் கூட உண்மை இருக்க தான் செய்தது.
கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் கையில் ஒரு குழந்தையுடன் ஓடி வந்தார்... வந்தவரின் மனைவி என்று பிறகு புரிந்தது. வந்தவர் கம்பிகளுக்கருகில் நின்று அழுதார், அதற்கு அந்த நபர் சொன்னார், இதை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறேன் சிங்களம் வேண்டாம்!
" இந்தா இங்க ஒன்னும் அழுவ வேணாம், நான் இன்னும் ஐந்து நாட்களில் வந்து விடுவேன், என்ன சரியா? இந்தா அதுவரை செலவுக்கு பணம் என்று ஏதோ கொஞ்சம் பண நோட்டுகளை சுருட்டி அவர் கையில் திணித்தார், பிறகு அந்த பெண் குளிர் பானமும், ஏதோ சாப்பிட சிற்றுண்டியையும் ஒரு 3 சிகரெட்டையும், ஒரு சாரமும் ஒரு பையில் வைத்திருந்து கொடுத்தார், அதை வாங்கிக்கொண்ட நபர், சரி சரி போயிட்டு வா, ஒன்னுக்கும் யோசிக்காதே ! நான் வந்து விடுவேன் என்றார்.... எனக்குள் ஆச்சர்யம் என்ன ஒரு உறுதியான நம்பிக்கை.
இவரை கற்பனை செய்து கொள்ள நமது தமிழ் திரைப்படங்களில் தலைவாசல் விஜய் சேரி பாத்திரம் ஏற்று நடிக்கும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை நினைத்து கொண்டால் போதும். கன கச்சிதமாக பொருந்தும். மகளிர் மட்டும் படத்தில் வரும் பாத்திரம் அப்படியே.
பிறகு அவர் என்ன செய்தார் தெரியுமா?... உடனே உள்ளே இருக்கும் கழிப்பழறைக்கு போய் தான் கட்டியிருந்த சாரத்தை (லுங்கியை) அவிழ்த்தார். நிலத்திலிருந்து இரண்டடி உயரம் மட்டுமே கொண்ட தண்ணீர் குழாயை திறந்து சாவகாசமாக குளித்தார்.... திரும்பி வந்தார் மனைவி தந்திருந்த லுங்கியை எடுத்து தலையை துவட்டிக்ககொண்டு அதையே கட்டிக்கொண்டார்.
பிறகு எங்கள் எல்லாரையும் முன்னால் இருக்கும் சிறைக்கதவை மறைத்து நிற்கும் படி சொல்லவே நாங்களும் நின்றோம், உடனே அவரும் அவர் கூட்டாளியும் ஒன்றாக உட்கார்ந்தார்கள், அவர் ஒரு சிகரெட்டை எடுத்தார், மற்றவர் தனது இடுப்பில் இருந்து ஏதோ ஒரு மிகச்சிறிய பொட்டலம் ஒன்றை எடுத்தார், முதலாமவர் சிகரெட்டை பற்றவைத்தார், மற்றவர் பொட்டலத்தை விரிததார்............,
என்ன நடக்கிறது என்று பர்க்க வேண்டும் என்ற ஆவலில் நான் லேசாக திரும்பி அவர்களை பர்ர்த்தேன் உடனே முதலாமவர், என்னை தன் பக்கம் பார்க்க வேண்டாம் என்று ஓரு அதட்டல் விட்டார், எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது. எல்லாரும் என்னை பார்த்த பார்வையில் நான் அசடு வழிந்து நின்றேன். பிறகு இருவரும் எழுந்தார்கள், திண்ணையில் ஏறினார்கள் நன்றாக தூங்கிப்போனார்கள். ஆகா! கவலையில்லாத மனிதர்கள் போலும் என்று என் சகோதரனிடம் சொன்னேன்.
...., மாலை 3 மணிக்கு பின்னர் தான் ஒவ்வொருவரையாக வெளியில் கூப்பிட்டு வைத்து விசாரிக்க தொடங்கினார்கள். என்னையும் என் சகோதரனையும் கூப்பிட்ட போது 2வது (29ம் திகதி) நாள், நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டேன்.
நாங்கள் நினைத்திருந்தோம் ஒரு நாளையில் அனுப்பிவிடுவார்கள் என்று. அப்படியில்லை என்றானபோது ஒருவித பயம் வந்து விட்டது. ஒவ்வொருவரையும் விசரித்து அதனை அவரவர் ஊரில் உள்ள போலீஸ் நிலையத்துடன் ஓப்பீடு செய்து அறிக்கை வந்தால் தான் வெளியில் விடுவார்கள் என்று. உள்ளே எங்களுடன் இருந்த ஒருவர் சொன்னார். அப்படி ஒப்பீடு செய்யும் போது நமது தகவல்களில் ஏதாவது முரணபட்ட பதில்கள் தகவல்கள் இருந்தால் அந்த நபரின் விடுலை தள்ளிப்போடப்படும்..... அப்படி தள்ளிப்போடப்பட்டால், அந்த நபரை இந்த பொலீஸ் நியைத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி விடுவார்கள் என்றும் மேலதிக தகவலாக சொன்னார்... உண்மையிலேயே எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த மாதிரி தான் இருந்தது.
ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன, நாலைந்து போலீஸார் ஒவ்வொருவரையாக தனித்தனியாக அழைத்து விசரிப்புகளை செய்தார்கள்.
என்னை அழைத்து விசாரித்த உத்தியோகத்தர் மலாய் சமூகத்தை சேர்ந்தவர்
நான் இது வரை அடக்கி வைத்திருந்ததை அப்படியே சற்று உணர்ச்சி பொங்க கொட்டிவிட்டேன், அனால் அவர் எல்லாம் பொறுமையாக கேட்டார்...., கேட்டுவிட்டு சொன்னார் எங்களுக்கு எல்லாம் தெரியும், ஆனாலும் என்ன செய்ய சட்டம் அப்படி..... நாங்கள் எங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுகிறோம் அவ்வளவு தான். என்றார்.
இந்த இடத்தில் நான் விளங்கிக்கொண்டது என்னவெனில் இலங்கையில் அதிகார மட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் எல்லா விபரமும் தெரியும், ஆனால் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.... ஆனால் இந்த நடிப்பை அரங்கேற்ற அப்பாவி தமிழர்கள் தான் கிடைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு.
பின்னர் அவராகவே பொலீஸ் நிலைய அதிகாரிகளுக்கென உள்ள சிற்றுண்டிச்சாலையில் எனக்கு தேநீர் வாங்கி தந்து, என்னை அங்கேயே அவர்களின் உபயோகத்திற்காக உள்ள கழிப்பறையில் பல் துலக்கி முகம் கழுவ செய்து...., மிகவும் நன்றாக உபசரித்து கண்ணியமாக நடந்து கொண்டார்.... எனக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.
பிறகு விசாரணை ஆரம்பம்....., பிறந்தது எங்கே வாழ்ந்தது அல்லது இப்போது வசிக்கும் இடம். கல்வி பயின்ற பாடசாலை...., நெருங்கிய பாடசாலை நண்பர்கள்..., ஆசிரியர்கள், பிறகு எங்கு வேலை செய்தீர்கள்..., இப்போது என்ன செய்கிறீர்கள்..... தாய் தந்தை யார்?, என்ன தொழில் செய்கிறார்கள்?, சகோதர சகோதரிகள்..., யார்? யார்? என்ன என்ன செய்கிறார்கள்?.... கொழும்புக்கு வந்த நோக்கம்?, தங்கியுள்ள வீட்டின் நிலவரம்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவு முறை.... அப்பப்பா!... பாதி கேள்விகள் எனக்கு மறந்தும் போய் விட்டது.....
அதற்குள் எங்கள் விடயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து எங்கள் வீட்டிலிருந்து எங்கள் பிரதேச போலீஸுக்கு போய் விபரங்களை கொடுத்து எங்களை வெளியில் கொண்டு வர முயற்சிகளை எனது தந்தையார் செய்து கொண்டு இருக்கிறார் என்று எங்களுக்கு தகவல் வந்தது.... கடவுளே ஒரு சிறிய ஆறுதல்.
ஆனாலும் ஏப்பிரல் மாதம் 31ம் திகதி ஆகிவிட்டது, அன்று காலையில் தான் முதன் முதலில் ஒருவரை வெளியில் செல்ல அனுமத்தித்தார்கள். அவர் ஒரு வர்த்தகர் கொழும்பில் பல வருடங்களாக இருப்பவர், வெளிக்கடை சிறை இப்படி இப்படியென எங்கள் வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான்.
மற்ற யாரையும் விடுவிக்கவில்லை, இப்போது ஒரு புதிய சிக்கல் அடுத்த நாள் மே முதலாம் திகதி. மே தினம்.! ஆகவே எல்லா பொலீஸாரும் வெளியில் கடமைக்கு போகப்போவதாயும் அதனால் எங்கள் எல்லாரையும் அங்கு பொலீஸ் நிலையங்களில் வைக்க மாட்டார்கள் என்றும் அன்று மாலை எல்லாரையும் வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றிவிடுவார்கள் என்று முதல் நாள் வந்திருந்த அந்த திருடன் சொன்னான்.
எனக்கு வாழ்கை முற்றுமாக வெறுத்து விட்டது. ஏனென்றால் மத்திய சிறைச்சாலையென்பது, முற்றிலுமாக வித்தியசமான போக்குகளையும் சூழலையும் கொண்டது. அதற்குள் போனால் பிறகு சுலபமாக வெளியில் வர முடியாது, அதன் பிறகு வக்கீல் வைத்து நீதிமன்றம் போய்... அதை செய்து இதை செய்து தான் வெளியில் வரவேண்டும். எப்படியும் 15 அல்லது 20 நாட்கள் போகும்.
ஆனால் தெயவாதீனமாக எனது தந்தையின் உடனடி நடவடிக்கையால் எங்கள் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் வழியாக எங்கள் பிரதேச போலீஸ் பொறுப்பதிகாரியே எங்களை தடுத்து வைத்திருந்த மோதரை பொலீஸுக்கு எங்களை பற்றி தகவல் சொல்லி எங்களை வெளியில் அனுப்ப சொல்லிவிட்டார்....,
நேரம் மாலை 5.00 மணியிருக்கும் எல்லாரும் அடுத்து வரபோகும் பெரிய சிக்கலை பயத்துடன் எதிர்பார்த்து இருக்கும் போது, எங்கள் இருவர் பெயரை கூப்பிட்டு திறந்து விட்டதும் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை....,
எங்களுடன் கூட இருந்த யாரிடம் என்ன பேசுவது...., நாங்கள் போகிறோம் என்று கூட சொல்ல முடியாத நிலை. ஏனென்றால் வெளியில் போகும் போது எங்களை உள்ளே இருக்கிறவர்களிடம் பேச விடமாட்டார்கள். நான் எல்லாரிடமும் கண்களாலே சைகை செய்து போகிறோம் என்று சொல்லி வெளியேறினேன். ஆனால் எல்லார் கண்களிலும் தாங்கள் எப்போது விடுவிக்கபடுவோம் என்ற ஒரு ஏக்கம் மட்டும் தான் தெரிந்தது....
வெளியில் வந்தால் உள்ளே இருப்பவாகளின் மனைவி மார்கள், சுகோதரர்கள் உறவினாகள், என்று ஏகப்பட்டவர்கள் உள்ளே உள்ளவர்களை அழைத்து போக வந்து காத்து நிற்கிறார்கள்.... எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு போட்டதை போட்டடபடி அப்படியே போட்டுவிட்டு வந்து காத்து நிற்கும் பரிதாபமான காட்சி...
எங்களை கண்டதும் மற்றவர்கள் என்ன ஆனார்கள் எப்போது வருவார்கள்?.. என்ற கேள்விகள் மட்டும் தான் எல்லாரிடமும் இருந்து வந்தன. இன்றைக்கு விடுவார்கள் என்று எல்லாருக்கும் ஒரு பொய்யான பதிலையே சொல்லிக்கொண்டு வந்தோம்.... எங்களால் வேறு என்ன செய் முடியும்.
இதன் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது... எத்தனை நாட்கள் உள்ளே இருந்தார்கள், வைத்தியத்திற்காக தன் பிள்ளைகளுடன் வந்திருந்த தாய், தனது எதிர்காலத்திற்காய் கனடா செல்ல வந்த அந்த இளைஞன்..... என்ன ஆனார்கள் எனபது யாருக்கு தெரியும்.
அன்று நான் வீடு திரும்பியதும் எனக்குள் இனி நமக்கு இலங்கை வேண்டாம், எங்காவது போய்விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அன்று இரவே எங்கள் ஊருக்கு திரும்பிவிட்டேன். ஒரு மூன்று மதங்கள் வரையில் நான் வீட்டை விட்டு எங்குமே வெளியில் கூட போகவில்லை..... அந்த அதிர்ச்சி தந்த பயத்தில்.
அதன் பிறகு சரியாக இரண்டு மாதங்களில் மிகுந்த முயற்சி செய்து இப்போது நான் செய்யும் தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்கு வந்த விட்டேன்.....
நண்பர்களே!...
இதில் நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை, சில வேளை உங்களுக்கு இது சுவராசியம் அற்று இருக்கலாம்.... அல்லது உங்களில் யாருக்காவது ஒருவருக்கு இதை விட கொடுமையான சம்பவங்கள் நடந்திருக்கலாம்.
இந்த பதிவின் நோக்கம்
இலங்கையின் அவசரகால சட்டம் ஒரு சாதாராண தமிழனை, என் போன்ற பல்லாயிரக்கணக்காண தமிழர்கள் வாழ்வை எப்படி பாதிக்கிறது எனபதை காட்டவே!
இந்த சட்டம் நீடிக்கவேண்டுமா?..... இந்த சட்டம் யாருக்காக?.... மக்களை பாதுகாக்க என்ற போர்வையில் மக்களையே பலிகொள்ளும் பெரும்பான்மை அரசியல் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு வருமா?
3 கருத்துகள்:
வெளிக்கடை அல்ல. 'வெலிக்கடை'
ஐயா !
அனானிமஸ்,நன்றி !
வந்து பார்த்து
திருத்தியதற்கு.
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பின்னூட்டங்கள் வராவிட்டாலும் அருமையான பதிவு.
இதைப்போல, இதைவிடவும் கொடுமையான அனுபவங்கள் பலருக்குண்டு.
காசு தேவையென்றால் ஒருவனைக் கைது செய்வது முன்பு வழக்கமாக இருந்தது.
கைது செய்து கொண்டு செல்லும் வழியில் அவர்களிடமிருப்பவற்றைப் பிடுங்கிக்கொண்டு விட்டுவிடுவது நாளாந்தம் நடந்துவந்தது.
கைது செய்யப்படும் பெண்கள் பாடுதான் பரிதாபம்.
கருத்துரையிடுக