செப்டம்பர் 13, 2005

உலகம் என்னாகும்!

கடந்த சனிக்கிழமையன்று BBC தொலைகாட்சியில் பாஸ்லான் குழந்தைகள் "Children of Baslen" என்ற ஒரு நினைவு நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன்.

கடந்த வருடம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் பாஸ்லான் என்ற சிறிய நகரத்து பாடசாலையொன்றில் விடுதலைக்கான போராட்டம் என்ற பெயரில் வெறிப்பிடித்தாடி ஏறக்குறைய 700 பேரை கொன்று தீர்த்த (அதில் சிறுவர் சிறுமியர் மட்டும் 300 பேர் வரையில் என்று கூறப்படுகிறது) ஒரு அகோர சம்பவத்தை நினைவு கூறும் முகமாக, அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த அந்த பிஞ்சு குழந்தைகளை விட்டு அந்த கோர மணித்தியாலங்களை நினைவுபடுத்தி பார்த்திருந்தது அந்த நிகழ்ச்சி.....

நிகழ்ச்சி என்ன சொன்னது என்பது பின்னால் பார்க்கலாம். ஆனால்...,!

அந்த துயர மணித்தியாலங்களை, கொலைபிசாசு தாண்டவமாடிய அந்த நேரத்தை அந்த பிஞ்சு உள்ளங்கள் மறந்து, மீண்டும் அவர்களின் மனசு தெளிய முனையும் இந்த வேளையில், அதே பிள்ளைகளை விட்டு அந்த வெறியாட்ட நிகழ்ச்சியை அவர்களுக்கு நினைவு படுத்தியது.... சரியா தவறா என்பதில் எல்லாருக்கும் ஒரு பொதுவான கருத்து இருக்குமா? தெரியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தவரை அந்த பிஞ்சு பூக்களுக்கு திரும்பவும் அந்த நிகழ்ச்சியை ஞாபகமூட்டியது தவறு என்றே படுகிறது.... பாவம் அந்த பால்மணம் மாறா சின்னஞ்சிறுசுகள்.... ஒரேயொரு சிறுவனை தவிர மற்றவாகள் எல்லோரும் இன்னமும் பயத்துடனும், சோகத்துடனும் தான் பேசினார்கள். எல்லாரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று மட்டும் சொல்லலாம்.

ஒரு தலைசிறந்த ஊடக நிறுவனமாக கொள்ளப்படும் பிபிசி இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரித்துள்ளது பெறும் வியப்பு.... !!!!

குழந்தைகளின் மனோநிலை என்னவாகும்?, படிப்படியாக பழசை மறக்க தொடங்கும் ஒரு நிலையில், திரும்பவும் அதை கிளறிவிட்டால் அவர்கள் எந்த வகையில் அதை தாங்கிகொள்வார்கள், என்று BBCக்கு கொஞ்சம் கூட நினைக்க தெரியாமல் போனது தான் எப்படி என்று விளங்கவில்லை.

இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்,
அவர்களை அழைத்து அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தியிருக்கலாமே.....! ஏன் இந்த பிஞ்சுகளை அஞ்சலி என்ற பெயரில் கொதி தண்ணீருக்குள் மீண்டும் போட வேண்டும்?

குழந்தைகள் ஒன்றும் திரித்து சொல்லமாட்டார்கள்.... உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள் என்று நினைத்து இருக்கலாம்..., ஆனால் அந்த பிஞ்சு மனங்களை மீண்டும் கீறி காயப்படுத்துவதில் அந்த சிறார்கள் என்ன ஆவார்கள் என்று யோசிக்க முடியவில்லையா...,? அல்லது பயங்கரவாத்திற்கெதிரான போர் என்ற பெயரில் உலக அரங்கில் அனுதாபம் பெற செய்த திட்டமிட்ட கைங்கரியமா?..... யார் என்னவானால் எனக்கென்ன நான் நினைத்தது நடந்தால் சரியென்ற ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சிகளின் தூண்டலா?

உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் மனிதம் தெரிந்த, மனித நேயம் கொண்ட, எந்த மனிதனும் மனித கொலைகளை இனம், மொழி, நாடு, மதம், நிறம், சாதி என்பன துறந்து கண்டிக்க தவறுவதில்லை, அதுவும் அந்த கொலைகளை எந்த சட்டை போர்த்தி யார் செய்தாலும். ( நான் மட்டும் தான் இப்படி ஒரு கோக்கு மாக்கு நெனப்புல இருக்கிறோனோ? தெரியலீங்க!).

மேலும் இந்தமாதிரியான ஒரு நிகழ்ச்சியால் தான் பயங்கரவாத்தை உலகிற்கு வெளிகாட்டனும் என்ற அவசியம் இருந்தால், இந்த உலகம் சீக்கிரம் அழிந்தால் மிகவும் நல்லது என்றுதான் தோன்றுகிறது இந்த கிறுக்கனுக்கு.

பெரியவர்கள் நடத்தும்
பலப்பரீட்சையின் காலடியில்
பாவம் அந்த
பிஞ்சு மலர்கள்!


சரி..., நடந்தது நடந்து போச்சி...

இனி அந்த கோர சம்பவம் எப்படி இருந்தது என்று பார்த்தால்..... ஏன் மனிதன் இப்படி ஆகிவிட்டான் என்று ரொம்பவும் வியப்பாகவும் பயமாகவும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும், எதை பார்த்தாலும் கொலை அல்லது கொல்!.... ச்சே!...... என்ன உலகமோ தெரியவில்லை. நான் அப்படியே நிகழ்சியை பார்த்துகொண்டிருக்கிற போது அழுது விட்டேன்.

இனிமேல் எனக்குள் இருக்கும் கொஞ்ச கடவுள் நம்பிக்கையும் அப்படியே அற்றுவிடும் போலிருக்கிறது.... எல்லா கடவுள்களும் பொய்... கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படி? நடக்குமா?... அந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தன?....

அந்த வெறித்தனம், அந்த காட்டுமிராண்டிதனத்தை ( இதை எந்த சொல் கொண்டு சொன்னால் அது மொத்த அர்த்தப்படும் என்று தெரியவில்லை), எல்லாரும் அறிந்தார்களா தெரியவில்லை..... எதிர்கால உலகம் என்னவாகும் என்று உண்மையிலேயே கவலை கொள்ளும் ஒரு சில அன்பர்களாவது தெரிந்து கொள்ளட்டும் என்று தான் கீழே வருபவற்றை எழுத விழைகிறேன்.

அந்த பிஞ்சுகள் பேசிய.... பாதி அழுகையும்... பாதி பயமும்... கலந்த வார்தைகளில் சில...

"எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை, எங்களால் தாங்க முடியாத நேரத்தில் மற்றவரின் சிறுநீரை அருந்த தொடங்கினோம்"... என்கிறாள் ஒரு சிறுமி.

"அதிலும் ஒரு பெண்மணி தனது சிறு நீரை தந்த போது அதை குடிக்க கூட எனக்கு உனக்கு என்று அதிக போட்டிகள்"..... என்று இன்னொறு சிறுமி.

"அந்த பயங்கரவாத கூட்டத்திற்குள் ஒரு பெண் இருந்தாள்.... அவள் ஒரு போத்தல் தண்ணீரை எடுத்து பக்கத்தில் தண்ணீர் கேட்ட சிறுமிக்கு கொடுத்திருக்கிறாள்... அதை அந்த கூட்டத்து தலைவன் பார்த்து விட்டானாம், உடனே அவனது கையிலிருந்த ரிமோடடை இயக்கி அந்த பெண்ணை அந்த இடத்திலேயே வெடிக்க செய்து விட்டானாம், அவள் தற்கொலை குண்டுதாரியாக இருந்தாளாம் "... என்று இன்னுமோர் சிறுமி.

"தன்னிடம் 15 ரூபிள் பணம் இருந்ததாகவும், அதை தான் தருவதாகவும் தன் தாய் சுகமில்லாது இருப்பதால் அவரை விடுதலை செய்யும்படி தீவிரவாதியிடம் வேண்டிதாகவும்"... ஒரு சிறுவன் சொன்னான்.

"கடும் சண்டையின் நடுவே இன்னோர் தாய் தன் மகளை தப்பியோடும்படி சொல்லி உதவிடும் நேரத்தில் சுடப்படுகிறார்".... அந்த நேரத்திலும் அவர் மகளே ஓடு ஓடு என்று தான் கத்தினாராம்... அதை அந்த மகளே சொல்கிறாள்...

இன்னோர் சிறுமி "தான் தப்பி வெளியில் வந்து விட்டாராம்..., ஆனால் தனது தாயை தேட வேண்டும் என்று மீண்டும் ஜன்னல் ஏறி உள்ளே போக முயற்சித்தாராம், அப்போது ஒரு குண்டு வெடிக்க வெளியில் தூக்கி எறியப்பட்டுவிட்டாளாம்"....

இப்படியாக கோரப்பேய்கள் ஆடிய தாண்டவ கதைகள் ஏராளம், வேண்டாம் என்னால் சொல்லவும் முடியாது, எழுதவும் முடியாது....

இனி, பாருங்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எப்படி குரூரம் விதைக்கபட்டுவிட்டது என்று.....

...... ஒரு சிறுவன் "நான் எதிர்காலத்தில் ஒரு ஜனாதிபதியாக வருவேன்... அப்படி வந்தால் தீவிரவாதிகளை கொல்வது தான் என் வேலை என்கிறான்.

நான் தீவிரவாதிகளை படமாக வரைந்து அவற்றை தாறுமாறாக கிழித்து தீவைத்து திருப்திபடுகிறேன்... ஆனால் எனக்கு இது போதாது... இன்னும் ஏதாவது அதிகம் செய்து அவர்களை பழிதீர்க்க வேண்டும்..... என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.

எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை, எனக்கு ரஷ்யா மீதும் அதன் ராணுவத்தின் மீதும் தான் நம்பிக்கை அதிகம்.... என்று இன்னொறு சிறுவன் சொல்கிறான்.

நான் பெரிய ஆளாக ஆனதும் செச்னியாவிற்கு போய் அந்த தீவிரவாதிகளை பழிதீர்ப்பேன் என்கிறான் இன்னொறு சிறுவன்.

இன்னொறுவன் சொல்கிறான்... "அவர்கள் உள்ளே வந்ததும் மேலே வானத்தை நோக்கி சுட்டார்கள்... நான் பயப்படவில்லை மாறாக சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் அவர்களது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்துவிடுமே என்று".....

பாருங்கள் எதிர்கால சந்ததி, சமுதாய தலைவர்கள், என்று உலகம் எதிர்பார்க்கிற இந்த சின்னஞ்சிறார்கள்.... எப்படியான சூழலில் வளர்கிறார்கள்... அல்லது வளர்க்கப்படுகிறார்கள் என்று. இதற்கு தான் நான் மேலேயே சொன்னேன், இந்த உலகம் சீக்கிரம் அழிந்தால் நல்லது என்று.

இதில் நான் அந்த பாஸ்லான் குழந்தைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன், ஆனாலும் வெளியில் தெரியாமல் அல்லது யாராலும் வெளி உலகுக்கு காட்டப்படாமல் நமக்கு தெரியாமல் இந்த பூமியில் எத்தனை ஆயிரம் பிஞ்சு மணங்கள்... எத்தனையாயிரம் துயரங்களை கொண்டு வாழ்கின்றன... எத்தனை நூறு பேர்கள் மடிந்து போகிறார்கள்..., அல்லது மடிந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது தெரிகிறதா?

எத்தனை எத்தனை விடுதலை போராட்ட கூட்டங்கள், எத்தனை பணக்கார அரசியல் ஆட்சிகள், வல்லாதிக்க அரசியல்கள், நாடுகள், நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள்... மதம் பேசித்திரியும் கூட்டங்கள், ஆனால் யாராவது இதைப்பற்றி யோசிக்கிறார்களா?

அறிவியல் என்கிறோம், விஞ்ஞானம் என்கிறோம், தொழில் நுட்பம் என்கிறோம் பூமியை விட்டு வெளியே என்ன இருக்கு என்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.... கம்பூட்டர் என்கிறோம், அரசியல் புதுமையென்கிறோம், புரட்சியென்கிறோம்.

ஆனால் எதிர்காலம் என்பது பூமிக்கு கானல் நீராகிவிடுமோ? என்று தான் எண்ணவைக்கிறது.....!

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

vanakkam Mr.Joseph
no your view is wrong. world should know this barberic incident. chechan terorits are very fanatic and barbaric. remember what happend in russian residnetal flats, theatre and this beslam. they are not humans.

world should know about their curel face.

this type of documentries will awake world againg this barberic

பெயரில்லா சொன்னது…

vanakkam Mr.Joseph
no your view is wrong. world should know this barberic incident. chechan terorits are very fanatic and barbaric. remember what happend in russian residnetal flats, theatre and this beslam. they are not humans.

world should know about their curel face.

this type of documentries will awake world againg this barberic

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

வணக்கம்!
ஜேக்கப் அவர்களுக்கு,

எனக்கும் தீவீரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாறுப்போ மாறுபாடோ இல்லை....

எனக்கு மனசு உறுத்தியது ஏனென்றால்.. அந்த பச்சிளம் பாலகர்களின் மனசு மீண்டும் காயப்படுகிறதே என்று தான்.

தருமி சொன்னது…

அறிவியல் என்கிறோம், விஞ்ஞானம் என்கிறோம், தொழில் நுட்பம் என்கிறோம் பூமியை விட்டு வெளியே என்ன இருக்கு என்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.... கம்பூட்டர் என்கிறோம், அரசியல் புதுமையென்கிறோம், புரட்சியென்கிறோம்.//

ஆனால் மனித மனங்களின் அழுக்கு நீக்க என்ன கண்டுபிடித்திருக்கிறோம்??

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

ஆகா !

வராதவுங்க வந்துட்டு போயிருக்கீங்க!
வந்து ஒரு கமெண்டும் வுட்ருக்கீங்க..

சூப்பராதான் இருக்கு!

ரொம்ப நன்றி