அக்டோபர் 02, 2005

போங்க போங்க புண்ணாக்குகளா!

இது கொஞ்சம் கொ(ப)ச்சையாக தெரியும் ஆகவே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்,

என்னமோ தெரியவில்லை நெய்வேலியின் இரண்டு பதிவுகளை
பார்த்ததும் எனக்கும் இத பத்தி ஏதாவது கிறுக்கனும்முன்னு தோணிச்சு ஆனாலும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

முதலாம், மற்றும் இரண்டாம் பதிவுகளை பார்க்க...

இது முழுக்க முழுக்க எனது கருத்து இது நான் யோசித்து பார்த்ததில் கிடைத்தவை. பயங்கரமான பின்னூட்டங்கள், வசைகள் மற்றும் துற்றுதல், ஏச்சுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன், ஆனால் என்ன செய்ய உண்மை இப்படியாக இருக்குமானால் என்ன செய்வது?

போன வாரம் Talk of the town என்னன்னா? குஷ்பு குஷ்பு குஷ்பு.... எங்கும் குஷ்பு! எதிலும் குஷ்பு!

அது சரி குஷ்பு கூறிய அல்லது சொன்னதின் உள்கருத்து என்ன?....
விச்சு அவர்களின் பதிவின் படி.....

1 // ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்//.

2 //கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்.//

3 //...ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.//

இப்ப இது தான் பிரச்சினை நமது பெண்களின் கற்பு என்பதும், தமிழனின் கலாச்சாரம் என்பதும் பெண்களின் பிறப்பு உறுப்பிலா நிச்சயிக்கபட்டுள்ளது?. பார்த்தால் எல்லாரும் அப்படி தான் பேசுகிறமாதிரி தெரியுது.

1. பெண்ணின் கற்பு என்பது அவளது பிறப்பபு உறுப்பில் இருக்கும் மெல்லிய சவ்வான கன்னித்திரையில் தான் தங்கியுள்ளது, என்று கலாச்சாரம் என்ற பெயரில் நமக்கு ஊட்டப்பட்டிருக்கிறது போலும்.

தற்கால நிலையில் ஒரு பெண் தனது கன்னிதன்மையை இலகுவில் இழந்து விடகூடிய அநேக சந்தர்ப்பங்கள் உண்டு..... அதற்கு உடலுறவு தான் அவசியம் என்று இல்லை.

விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றல், அதற்கான கடும் பயிற்சியில் ஈடுபடல், சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், உடற்பயிற்சி.... இப்படியாக தற்கால வாழ்வியலில் அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.... ( இது நான் சொல்லவில்லை மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது) அப்படியே இல்லையென்றாலும்.... சுய இன்பம் அப்படின்னு ஒன்னு இருக்கிறதே!... அதில் ஈடுபடும் பெண்களுக்கும் அது கிழிந்து தான் போகும் என்று மருத்துவ ரீதியாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.....

ஆகவே இம்மாதிரியான சந்தர்பங்களினால் அவளது கன்னத்திரை கிழிந்திருந்தால்.... அப்போது அவள் கற்பு இல்லாதவள் என்று ஆகிவிடுமா?

இதற்காககூட குஷ்பு " ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்......." என்று சொல்லியிருக்கலாம்.


2. அடுத்ததை கொஞ்சம் விபரமாக பார்ப்போமானால், இந்த செக்ஸ் (அதாவது உடலுறவு) என்பது உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் மனித இனத்திடம் மட்டுமே இவ்வளவிற்கு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. மற்ற உயிரினங்களிடத்தில் அந்த செயற்பாடு ஒரு இனபெருக்க செய்றபாடே ஒழிய வேறில்லை. ஆனால் மனிதனிடத்தில் அப்படியில்லை அது தான் வாழ்கையின் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும் மிகையில்லை. காரணம் மனித மனங்களின் நிறைவு காணாத ஒரு செயற்பாடு. அதனால் தானே இத்தனை மருந்துகள், மாத்திரைகள்...விளம்பரங்கள்... இத்தியாதி இத்தியாதி எல்லாம்.

செக்ஸில் திருப்தி அல்லது நிறைவு என்று ஒரு வார்தை வருகிறது, இதில் ஆண் பெண் இருபாலாருக்கும் அநேக முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.
காரணம் செக்ஸ் பற்றிய அறிவார்ந்த கல்வியும், கண்ணோட்டமும் ஆண் பெண் பரஸ்பர கருத்து பரிமாரல் இல்லாதது தான். மற்றது உடலுறவு காலஎல்லை என்பதும் ஆண் பெண் இருபாலாருக்கும் இடையில் அநேக இடைவெளி உள்ளது என்று வைத்திய ஆராய்ச்சிகளே கூறுகின்றன. ஆக இந்த செக்ஸ் விவகாரம் தான் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்க நினைகிறது என்று எண்ண தோன்றுகிறது...

மேலும் இன்றைய உலகில் ஆண் பெண் திருமன வயது என்பது எத்தனை என்பதை சற்று யோசிக்க வேண்டும், அது வரை இருபாலாரும் எப்படி தனக்குறிய உடல் மாற்றத்தால் வரும் உணர்ச்சிகளை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியும்?... ஏனெனில் இப்போதைய உலகம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சொல்லிகொடுக்க முனைவதில்லை, மாறாக உசுப்பிவிடுகின்றன... இதற்கு நம் தமிழ் சினிமா ஒன்று போதும் வேறு தேவையில்லை, இருந்தாலும் உலகம் இப்போது எல்லாவற்றிலும் மிக வேகமாக வளாந்து விட்ட நிலையில், பலஆயிரம் மைலுக்கப்பால் உள்ள அடுத்தவரின் வாழ்கை முறை கூட நமது நடுவீட்டில் வந்து உட்கார்ந்து விவாதம் பண்ணகூடிய கால வேகத்தில் ஊடகங்கள் இருக்கும் போது,

ஆண்கள்... வெளியில் தெரியாமல் தமது காரியத்தை கன கச்சிதமாக முடித்துக்கொள்வார்கள் ... (அதாவது வடிகால் தேடிக்கொள்வார்கள்) பெண்கள்... அவர்களும் மனிதர்கள் தானே!... அவர்கள் உடலிலும் ஓடுவது நமது குருதிக்கொப்பான குருதி தானே! அவர்களுக்கு உணாச்சிகள் இருக்காதா?... ஆசைகள் இருக்காதா?... ஒரு வேளை தனது சுயகட்டுப்பாடுகளிலிருந்து வெளி வர நேர்ந்தால், அதற்காக கவனக்குறைவாக இருந்து நோயை தேடிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் சொல்லப்பட்டிருக்கலாம்.

இதற்காக எல்லாரும் இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை யாரோ ஒருத்தி சொன்னாள் அதனால் செய்வோம் என்று எல்லாரும் செய்வோமா?... இல்லையே!

நமது புத்திக்கும் தெரியும் எது நல்லது எது கெட்டது என்று. கட்டுபாடுகளுடன் மனதை ஒருவழிப்படுத்தி இருக்கிறவர்கள் அல்லது அப்படிதான் இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் அப்படி இருக்கட்டும். வடிகால் வேண்டும் என்று நினைப்பவர்கள் முட்டாள் தனமாக இல்லாது பாதுகாப்பாக இருக்கட்டும் என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக கலாச்சாரம், அது இது என்று அரசியல் செய்கிறோம் அல்லது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மைகளை யதார்த்ததை உணர்வதில்லை... ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டியது இல்லை கலாசாரம் கற்பு என்று அதன் பின்னால் ஒளிந்து கொள்வது....

உன் வாழ்கையை நீ முடிவு செய்... அதனால் வரும் விளைவுகளுக்கு நீ மட்டுமே பொறுப்பாயிரு என்று சொன்னால் போதாதா?

யாராவது ஒரு பெண் சொன்னாள் என்பதற்காக நமது பண்பாடு அழிந்து விடுமா?... அப்படியானால் அது என்ன பண்பாடு?.. புண்ணாக்கு பண்பாடு.

நான் நினைப்பது என்னவென்றால் இந்த ஆணாதிக்க சமுகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில் அனுபவம் உள்ளவளாக இருந்தால், எங்கே தன்னோடு உறவில் இருக்கும் போது அந்த பெண் முன்னைய அனுபவத்தை இப்போது ஒப்பிட்டு பார்த்து தன்னை எடைபோடக் கூடும் என்ற பயஉணர்வாக இருக்குமோ? என்று எண்ண தோன்றுகிறது?. (கொஞ்சம் விரசமாக இருக்கிறது இல்லையா? என்ன செய்ய வெளிப்படையாக பேச முனைந்தால் இப்படியெல்லாம் பேச/எழுத வேண்டி வருவதை தவிர்க்க முடியவில்லை).

காரணம் நம் சமூக அமைப்பு அப்படி. மனித மனம் என்பது ஒரு சிக்கலுக்குறிய ஒரு விடயம், அதனால் தான் " மனம் ஒரு குரங்கு" என்று சொல்லியிருக்கிறார்கள், எதுவும் நடக்கலாம்.

இதனால் அவளின் போக்கு மாறலாம். அப்படி ஆகும் பட்சத்தில் தனது விருப்பபடி அவள் வேறு ஆண்களை நாடிவிட்டால், அப்போது நமக்கு சமூகத்தில் இருக்கும் அல்லது நம்மால் ஏற்படுத்தபட்டிருக்கும் நமது நிலை குறித்து விமர்சனம் செய்யப்படலாம் என்ற காரணமாகவும் இருக்கலாம்.( இதற்காக தான் சும்மா சும்மா காட்டு கூச்சல் போடுறாங்கன்னு தோனுது).

மனிதனை அவ்வாறு செய்ய தூண்டாது இருக்கவும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை கடைபிடிக்கவும் கலாச்சாரம், பண்பாடு என்கிற கோட்பாடுகள் சட்டங்கள் கீழ் முன்னோர்கள் கட்டிப்போட்டிருக்கிறார்கள். கூடிய வரையில் ஆண் பெண் இருபாலாரையும் திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் பெரும்பாலும் வேலி தாண்டினாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்... ஆனால் பெண்கள் அவ்வாறு இல்லை..

இங்கு எல்லாம் அரசியல் ஆக்கப்பட்டு இருக்கிறது, பெண் விடுதலை என்று பேசுகிறவர்கள்... எல்லாரும் சும்மா ஒப்புக்கு தானே ஒழிய மனதறிந்து அதில் ஒன்றுபடுவதில்லை.

இப்போது கூட இந்த விடயத்தில் எவ்வளவு கருத்துகள்... ஆமோதிப்புகள், வெறுப்புகள், விமர்சனங்கள், எல்லாம் வருகின்றன இது கூட ஒரு விதத்தில் நல்லது தான், ஏனென்றால் நாலையும் கண்டு கேட்டு பட்டு அறிந்து ஒரு தெளிந்த சமூகம் உருவாகலாம்.

ஆக அதை விடுத்து குழம்பிய குட்டையில் மீன் பிடித்து அரசியல் பண்ணி, கூட்டம் சேர்த்துகொண்டு ஆளாளுக்கு அடித்துகொண்டோமானால்,...
யாருக்கு லாபம். இதை மற்றவர்கள் பார்த்தால் சிரிப்பா சிரிப்பார்கள். பார்த்தாயா தமிழனின் சிந்தனைகளை என்று சொல்லி....,

இது போல் குறுகிய சிந்தனைக்குள் தழினை, தமிழனே வைத்திருப்பதால் அல்லது வைத்திருக்க முனைவதால் தான் மாற்றான் தமிழனை அவன் தலையிலேயே மிளகாய் அறைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

அப்படியானால் நமது சமுகம் அழிந்து விடும் அப்படி இப்படின்னு ஒரு சிலர் புருடா விடலாம்... அப்படி நடக்க சான்சே இல்லை, உதாரணமாக அமெரிக்காவை எடுத்துககொள்ளுங்கள், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, ஜாதிக்கோ, மதத்திற்கோ என்று இல்லாது தனி மனித சுதந்திரத்தை விரும்பும் பல்லின மக்கள் ஒன்று கூடி வாழும் மக்கள் உள்ள நாடு. அதில் எம்மை விட பிரச்சினைகள் அரசியல் சித்துகள் என ஏராளம் இருக்கின்றன... ஆனால் கலாச்சாரம் பண்பாடு என்று பொய் முகமூடி போட்டு யாரும் இருப்பதில்லை.

அதனால் தான் அந்த நாடு இன்னும் உலகில் வல்லரசாக இருந்தாலும், இன்னமும் கூட முழுப்பூமி பந்தையே தன் காலுக்டியில் கொண்டு வரவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு செயல்படுகிறது, அதுவும் நம்மல மாதிரி, கற்பு, கலாச்சாரம், கன்னித்தன்மைன்னு, வேஷம் போட்டுக்கொண்டிருந்தால் இன்னமும் நம்மல மாதிரி தான் எல்லாத்துக்கும் அடுத்தவரை கையேந்தி கொண்டு தான் நின்றுகொண்டிருந்து இருக்கும்.
அட போங்கப்பா புண்ணாக்கு போயி வேலைய பாருங்க!...

ஒங்களோட இந்த கூச்சலுக்கு பயந்து வேணாம்முடா சாமின்னு வெளிநாட்டுகளுக்கு போய் அங்கு குடியேரும் நம்ம இளைய சனங்கள் நம்ம ஊரிலேயே இருந்து உழைக்கவும் இந்த உழைப்பினால் ஊருக்கும் ஏதாவது வழி பிறக்க வைக்க முடியுமான்னு பாருங்க. எத்தனை ஆயிரம் ஏழை குழந்தைகள் படிக்க முடியாது இருக்காங்க அதுக்கு வழி இருக்கா பாருங்க! எத்தனை பேர் கால் வயத்து கஞ்சி கிடைக்காது அல்லல் படுறாங்க அவுங்களுக்கு ஏதாவது செய்யுங்க... எத்தனை ஆயிரம் வாழ வழி தெரியாது, அல்லது இல்லாது தடுமாறுது அதுக்கு ஏதாவது செய்ய பாருங்க!

வறுமை தாங்காது தனது உடல் அவயவங்களையே விற்க வரும் நமது சமுகத்துக்கு ஏதாவது செய்யபாருங்க.

மற்றவர்கள் எல்லாம், குறிப்பா எல்லா வெளிநாடுகளிளுமே தமிழன் என்றால் எல்லாரும் ரொம்ப இலக்காரமா பார்கிற நிலையில இருந்து தமிழையும் தமிழனையும் மீட்க ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க...

அத வுட்டுப்புட்டு கற்பு, கன்னிதன்மை, அப்டின்னுகிட்டு. அப்படி என்னய்யா தமிழனின் கலாச்சாரம் மட்டும் என்ன கவட்டிக்குள்ளயா இருக்கு?....

தூற்றுவோர் தூற்றட்டும்
போற்றுவோர் போற்றட்டும்
நீ
நீயாக இரு!....

இத பத்தி இதே மாதிரி கருத்தை கூத்தாடி கூட சொல்லியிருக்கார், போயி பாருங்க!

அப்புறம் என்னை திட்டி தீக்கிற வழிய பாருங்க!
வாழ்க தமிழன்!

8 கருத்துகள்:

Vaa.Manikandan சொன்னது…

இருவருக்குமே கற்பு என்பது பொது தான்.ஆனால் மறுமலர்ச்சி,புதுமை,விடுதலை என்னும் பெயரில் இங்கு தொடர்ச்சியாக வைத்திருந்த மதிப்பீடுகள்(பண்பாடு என சொன்னால்,நீ என்ன பண்பாட்டுக் காவலனா என கேள்விகள் எழக்கூடும்)கிழிது எறியப்படுகின்றன.

எனக்கு முழு சம்மதம்,எதற்கும் தடைகள்,வரைமுறைகள் தேவை இல்லை.பேசுகின்றவர்களின் இல்லங்களில்,(அட பெண்கள் இல்லை,ஆண்களும்) தறிகெட்டு சுற்றினால் எற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் இருக்கிறதா? எழுத்தாளர்களும்,படைப்பாளிகளும் தங்களின் புரட்சியாளர் முகமூடி அணிந்துகொண்டு எழுதியும்,பேசியும் வருகின்றனர்.முகமூடியைக் கழட்டி வைத்து உங்கள் கண்களில் பாருங்கள்.பக்கத்து வீட்டு நிகழ்ச்சிகள் பெரிய பாதிப்பை என்றும் தரப்போவதில்லை.

இந்த பிரச்சினைகளை இப்போதைக்கு வலைப்பூவில் குறைத்து வேறு விஷயங்களை விவாதிக்கலாம்.ஏதோ ஒரு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

P.V.Sri Rangan சொன்னது…

//நான் நினைப்பது என்னவென்றால் இந்த ஆணாதிக்க சமுகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில் அனுபவம் உள்ளவளாக இருந்தால், எங்கே தன்னோடு உறவில் இருக்கும் போது அந்த பெண் முன்னைய அனுபவத்தை இப்போது ஒப்பிட்டு பார்த்து தன்னை எடைபோடக் கூடும் என்ற பயஉணர்வாக இருக்குமோ? என்று எண்ண தோன்றுகிறது?. (கொஞ்சம் விரசமாக இருக்கிறது இல்லையா? என்ன செய்ய வெளிப்படையாக பேச முனைந்தால் இப்படியெல்லாம் பேச/எழுத வேண்டி வருவதை தவிர்க்க முடியவில்லை).

காரணம் நம் சமூக அமைப்பு அப்படி. மனித மனம் என்பது ஒரு சிக்கலுக்குறிய ஒரு விடயம், அதனால் தான் " மனம் ஒரு குரங்கு" என்று சொல்லியிருக்கிறார்கள், எதுவும் நடக்கலாம்.

இதனால் அவளின் போக்கு மாறலாம். அப்படி ஆகும் பட்சத்தில் தனது விருப்பபடி அவள் வேறு ஆண்களை நாடிவிட்டால், அப்போது நமக்கு சமூகத்தில் இருக்கும் அல்லது நம்மால் ஏற்படுத்தபட்டிருக்கும் நமது நிலை குறித்து விமர்சனம் செய்யப்படலாம் என்ற காரணமாகவும் இருக்கலாம்.( இதற்காக தான் சும்மா சும்மா காட்டு கூச்சல் போடுறாங்கன்னு தோனுது).//


மேற் சொன்னவை எனக்கும் பொருந்தும்.இந்தப் பயம் உருவாகும்போது பாதுகாப்புக் கவசம் பெண்ணைத் தெய்வமாக்கிவைக்க நாம் முனைகிறோம்.

துளசி கோபால் சொன்னது…

//இந்தப் பயம் உருவாகும்போது பாதுகாப்புக் கவசம் பெண்ணைத் தெய்வமாக்கிவைக்க நாம் முனைகிறோம்.//

நல்லாச் சொன்னீங்க. நல்ல பதிவு.

எல்லாமே பயம் பயம் பயம்.

கூத்தாடி சொன்னது…

நல்ல பதிவு .என்னுடைய எண்ணங்களுக்கு ஒத்தப் பதிவாக இருக்கிறது .நான் சொல்லாமல் விட்டதை விரிவாக பதிவு செய்திருக்கிறீர். என் பதிவ் பற்றி குறிப்பிட்டதுக்கு நன்றி.

தருமி சொன்னது…

இந்த 'தமிழ்ப் பண்பாடு'ங்கிற வார்த்தையை கெட்ட வார்த்தைனு சொல்லி அதை அப்படியே ஒதுக்கிடணும்னு நினைக்கிறேன். மனைதப் பண்பாடுன்னாவது அர்த்தம் இருக்கு; அது என்ன 'தமிழ்ப் பண்பாடு' - இல்லாத ஒண்ணச் சொல்லிச் சொல்லி...அடச் சே!

ஜோ/Joe சொன்னது…

தருமி,
'தமிழ் பண்பாடு' இல்லையென்றாலும் தமிழ்ப்பண் பாடு!

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

வீட்டுக்கு வந்து போன
கருத்து சொன்ன எல்லாருக்கும்
என் வாழ்த்துகள்.

இது வரை
யாரும் நான் எதிர்பார்த்திருந்த படி வந்து திட்டவில்லை,
ஒரு சின்ன திருப்தி
ஏனெனன்றால் நமது சமூகம் எதையும் இப்போது சிந்திக்க தொடங்கியிருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது.

இது நல்ல முறையில் வளாச்சி பெற்றால்
எதிர்காலம் எங்கள் எல்லாருக்கும்
சிறப்பானதாக இருக்கும் என நம்புவோம்!

நன்றி.

பெயரில்லா சொன்னது…

Nice Blog! This is such a fun and easy way to make money online. This survey resource shows you how to do online surveys and has all the information you need to get started. A great tool. Visit 5StarIdeas today!