ஆகஸ்ட் 31, 2005

இதோ ஒரு உண்மை சம்பவம்

அவசர காலசட்டமும் தமிழர் படும் பாடும்
என்ற பதிவின் தொடர்ச்சி.....

1996 ஏப்ரல் மாதம் 27ம் திகதி.

நான் இசைக்குழுக்களில் அங்கம் வகித்த காலங்களில், நானும் எனது நண்பர் ஒருவரும் ( இருவரும் சகோதரர்கள் மாதிரி). எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் எது செய்தாலும் இருவரும் தான்,.... அந்த காலங்களில் எங்கள் இரு வீடுகளிலும் நாங்கள் இருவரும் வாங்காத ஏச்சு கிடையாது, சும்மா மியூசிக், மியூசிக்கென்று வெட்டியா ஊர் சுத்துரோம் என்று, இருவரும் தொழில் செய்தாலும் மனசு எப்போதும் இசைபற்றிதான்....

உண்மையில் "அது ஒரு நிலா காலம்" தான்...... சரி அது ஏன் இப்போ விடயத்துக்கு போவோம்....

சரி!

மேற்சொன்ன தினத்தன்று கொழும்பிற்கு ஒரு இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்வதற்காக கிடைத்த அழைப்பை ஏற்று வந்திருந்தோம். 29ம் திகதி நிகழ்ச்சி ஏற்படாகியிருந்தது, 27ம் திகதி காலை இருவரும் நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு சென்றுவிட்டு மாலை எனது நண்பரின் மூத்த சகோதரர் வீட்டிற்கு சென்றோம். கொழும்பு வந்தால் வழமையாக அங்கு தான் தங்குவது வழக்கம். அவர் கொழும்பில் ஆடைகள் வியாபாரத்தில் உள்ளவர் மோதரை பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இத்தனைக்கும் அந்த வீட்டின் சொந்தகாரர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தை சோந்தவர்கள். எங்களுக்கு பக்கத்து வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.

வீட்டிற்கு போனால் அங்கே அண்ணியின் முதல் பிரசவத்திற்காக அவர் தனது செந்த இடமான தலவாகலைக்கு போக வேண்டி, (அதாவது எங்கள் வீட்டுக்கு), கிளம்பி கொண்டிருந்தார். சரியென்று அவரை வழியனுப்பிவிட்டு நாங்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு, சுயாதீன தொலைக்காட்சியில் (ITN) ஒளிபரப்பான ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம் பார்த்து கொண்டிருக்கையில், ஒரு 12.30 நடு இரவு திடீரென எங்கள் வீட்டை சுற்றி காலடியோசைகள்..... நாங்கள் என்ன ஏது என்று யோசித்து முடிவெடுக்கும் முன் வீட்டு கதவு தட்டப்பட்டது திறந்தோம் திடு திடுவென் போலீசார் உள்ளே புகுந்தார்கள். எங்களின் அடையாள அட்டையை கேட்டார்கள் கொடுத்தோம், எங்கே பதிவு செய்த கடிதம் என்றார்கள் நாங்கள் உண்மை நிலையை எடுத்து சொன்னோம்.... பக்கத்து வீட்டார் ( எங்கள் வீட்டு சொந்தக்காரர்) அவர்களும் வந்து எங்களை பற்றி விபரம் சொல்லியும் யாரும் கேட்கவில்லை,

மாறாக அவர்களை ஒரு போலீஸ்காரர் திட்டுகிறார் " உம்பலா தமாய் கொட்டியின்னட சப்போர்ட் கரண்ணே! " அதாவது நீங்கள் எல்லாம் தான்டா புலிக்கு ( த.வி.பு) உதவி செய்கிறீர்கள் என்று.....

இன்னொரு போலீஸ் எங்களை அடிக்க கை ஓங்கியது...., யார் செய்த புண்ணியமோ அடிக்கவில்லை. நாங்கள் கட்டியிருந்த லுங்கி, மேலே போட்டிருந்த டீ சேர்ட்டுடன் கையில் எங்கள் அடையாள அட்டையை பிடித்தபடி போலீஸ் பஸ்சில் ஏற்றப்பட்டோம்,

ஏற்றும் போது என்ன சொன்னார்கள் தெரியுமா? போலீஸில் ஒரு சில வழக்கமான விசாரிப்புகள் இருக்கின்றன... உடனே வந்து விடலாம் என்றார்கள்.

அவ்வளவு தான் விடியற்காலை ஒரு இரண்டு மணியளவில் அந்தப்பகுதியில் உள்ள எல்லா இடங்களையும் தேடி முடித்து எங்களோடு சேர்த்து ஒரு பத்து பன்னிரன்டு பேருடன் மோதரை போலீஸில் சிறையில் கொண்டு போய் அடைக்கப்பட்டோம்.

நான் சுற்றி சற்று நோட்டம் விட்டேன், எனது மற்ற சகோதரன் பேசவேயில்லை, ரொம்பவும் சூழ்நிலையால் பாதிக்கபட்டிருந்தார். பக்கத்து அறையில் ஏற்கனவே ஒரு எட்டு பத்து பேர் வரையில் இருக்கிறார்கள். எங்கள் அறைக்கு வெளியே ஒரு பெஞ்சில் ஒரு தாய் தனது இரண்டு மகளுடன் அமர்ந்திருக்கிறார், கொஞ்சம் தள்ளி இன்னும் கொஞ்ச பெண்கள் எங்களை போல் சந்தேகத்தில் அழைத்து வரப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

நாங்கள் விடப்பட்ட அறையில் ஓரு சிறிய திண்ணை போல சீமெந்தால் கட்டப்பட்ட ஒரு பகுதி, கைதிகள் நித்திரை செய்ய என்பது தெரிந்தது, அதை தாண்டி கதவுகள் இல்லாத ஒரு கழிப்பறை மாத்திரம், ஒரு சிறிய தண்ணீர் குழாய் தரையிலிருந்து ஒரு இரண்டடி உயரத்தில், ஓரு பழைய வெற்று பெயிண்ட் கொள்கலன் ( பெயிண்ட் டின்), துருப்பிடித்து, தனது உண்மை வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு......

சுத்தம் என்பது மருந்துக்கும் கிடையாது, ஒருபுறம் புழுக்கம், இன்னொரு புறம் துர்நாற்றம்....., தாங்க முடியவில்லை.

நான் இருந்த அறையில் ஒரு ஏழு பேர் வரையில் இருந்தோம். அந்த அறையில் ஒரு இளைஞர், ஒரு நாளுக்கு முதலே அவரை அழைத்து வந்திருக்கிறார்கள் சந்தேகத்தின் பேரில், பாவம் அவர் இரண்டு நாட்களாக பச்சை தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவரது தந்தையாரும் மற்றவர் உறவினர் என்று நினைக்கிறேன் இருவரும் வெளியிலிருந்து ஏதேதோ சமாதானம் சொல்கிறார்கள் ஆனால் அவர் கேட்பதாய் இல்லை. உரக்க கத்துகிறார், " எப்படியாவது என்ன வெளியில எடுங்கோ..." என்று. காரணம் என்ன தெரியுமா? அவரது உறவினர் சொன்னார் அடுத்த நாள் அவர் கனடா பயணமாக போகிறார் அதற்காக தான் கொழும்புக்கு வந்திருக்கிறார், என்று...

அந்த பயணத்தில், அவரது எதிர்காலத்தின் கனவில், மண்விழுந்து விட்ட சோகம், ஆற்றாமை, துடிப்பு தான் அவரை அவ்வாறு செய்ய தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பார்க்க வந்தவாகள் எல்லாரையும் போலீஸார் திருப்பியனுப்பிவிட்டனர். இப்போது போலீஸ் நிலையத்துள் அழைத்து வரப்பட்டவர்கள் மட்டும்.
நான் என்ன செய்தேன் தெரியுமா அந்த இடத்தின் வெறுமையை, சோகத்தை, போக்க நினைத்து எனது சகோதரனுடன் சேர்ந்து கொண்டு நகைச்சுவையாக பேச தொடங்கினேன் அங்கிருந்தவர்களிடம், எனது நோக்கம் அப்படியாவது
எங்களோடு இருந்தவர்கள் மத்தியில் ஒரு இறுக்கம் நீங்கி ஒரு பரஸ்பரம் வந்தால் எல்லாரும் சற்று கவலை மறக்கலாமே என்ற நினைப்பில். நேரம் நகர நகர எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயமானது போன்ற உணர்வு வரத்தொடங்கியது....

தொடர்ந்து வரும்.......!

1 கருத்து:

வசந்தன்(Vasanthan) சொன்னது…

வாசித்தேன்.
பதிவு அழுத்தமாகவும் இயல்பாகவுமிருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

இதை எழுதும்போது நிலமை இன்னும் மோசமாகவே இருக்கிறது. காணாமற்போவதும் இரண்டொரு நாளில் சடலமாக மீட்கப்படுவதும் நடந்துவருகிறது.