ஆகஸ்ட் 17, 2005

எனக்குள் ஓரு வருத்தம்

ஏன் இந்த நிலை?

இப்போதெல்லாம் இணைய வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் தமிழ் வலைபதிவுகள் வந்துவிட்ட இந்த நேரங்களில் அதுவும் தமிழ்மணம் வந்தபின்..., ஏராளமான எழுத்தாளர்கள், எழுதும் ஆர்வலர்கள் எல்லாரும் இங்கே கடைவிரித்து சகலதையும் தருகிறார்கள் அல்லது தரவிளைகிறார்கள்.
இதில் சமூக அக்கரை, நாட்டுப்பற்று, காலாச்சார சீர்கேடுகள், காலமாற்றத்திற்கான காலாச்சார ஒவ்வாமைகள், அரசியல், பொருளாதார விழிப்புணர்வு, பெண் விடுதலை, அறிவியல், ஆன்மீகம், பற்றியெல்லாம் புதுப்புது வடிவங்களில் பதிய எண்ணக்கருத்துகளுடன், புதிய சிந்தனைகள் வீரியத்துடன் எழும்பி வந்து வாசிப்போரை சற்றே நிலைகுழைய வைக்கின்றன...., (நிலைகுழைய என்ற வார்த்தை எனது எண்ணத்தை அப்படியே சொல்கிறதா தெரியவில்லை). வாசகர், எழுதுவோர் மத்தியில் பெரும் சண்டைகளையும், சர்ச்சைகளையும், கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன.

வலைபதிவர்கள் தங்களுக்குள் நாகரீகமற்ற (தார்மீகமற்ற) தாக்குதல்களையும், வசைகளையும் பரிமாறிக்கொள்வதில்... இதில் என்னத்துக்கு ஒரு மரியாதை பச்சையாக சொன்னால் தங்களுக்குள் அடித்துக்கொள்வதும், மற்றும் தான் சொல்வது மட்டுமே சரியென்ற பிடிவாதமும் தான் மலிந்து கிடக்கின்றன...

இது அநேக நேரங்களில் வருத்தம் தருவாதாக இருந்தாலும் ஒன்றை மட்டும் தெளிவாக படம் பிடித்து காட்டுவது தெரிகிறது. அதாவது நமது சமுதாயத்திற்குள் அதுவும் தமிழ் சமூகத்துக்குள் அநேக மாறுதல்கள் மாற்றங்கள் வரவேண்டும் என்பதையும் அநேக கோளாறுகளும் குளறுபடிகளையும் கொண்டுள்ளன என்பதையும். அதனால் தான் யாராவது ஏதாவது உண்மையான ஒரு புதிய மாறுதலுக்கான நோக்கோடு ஒரு பதிய கருத்தை, புதிய சிந்தனைகளை எழுதவோ,அல்லது பகிர்ந்து கொள்ள முற்பட்டாலோ அது பலமான எதிர்ப்புகளுக்கும் தூற்றுதலுக்கும் ஆளாகிறது... இது இயற்கை தான், உண்மையும் கூடதான்.

ஏனெனில் உலகில் எந்த மாறுதலும் அல்லது எந்த ஒரு விளிப்புணர்வும் ஒரே இரவிற்குள் நடந்தேறியதாக சரித்திரமே இல்லை எனலாம். கால ஓட்டத்தில் எல்லாம் சரிபடுத்தப்படும் என நம்பிக்கை கொள்வோம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் எழுத வந்தது என்னவென்றால்.... கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி முதல் 14ம் திகதி வரை பின்லாந்து நாட்டில் ஹெல்சிங்கி நகரில் உலக சாம்பியன் பட்டத்திற்கான தடகள விளையாட்டுபோட்டிகள் இடம்பெற்று முடிந்தன.... உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வீர வீராங்கனைகள் கலந்துகொண்டு தன் திறைமைகளுக்கு முகவரி தேடிகொண்டார்கள். இதில் ஒரு சில பழைய உலகசாதனைகள் முறியடிக்கபட்டு புதியவை நிலைநாட்டப்பட்டன... குறிப்பாக பெண்களுக்கான ஈட்டி எறிதல், பெண்களுக்கான தடியூண்டி பாய்தல் (Pole volt) போன்றவற்றில் புதிய உலக சாதனைகள் நிலைநாட்டப்பட்டன..., ஆண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியின் தகுதிகாண் சுற்றில், தொடர்ந்தும் முதல் நிலையில் இருந்த அமெரிக்கா கோட்டை விட்டதும், குறிப்பிடும் சம்பவங்கள்.

முழு அளவிலான அனைத்து போட்டிகளும் கடந்த 14ம் திகதி முடிந்து நாடுகள் பெற்ற நிலைகள் என்று பார்த்தால் அமெரிக்கா முதலாம் இடம், ரஷ்யா இரண்டாம் இடம், எத்தியோப்பியா மூன்றாம் இடம்..... இப்படி பட்டியல் நீள்கிறது.

ஆனால் உலகத்தில் வல்லரசாக கனவு காண்பதிலும், உலகில் அதிகூடிய சனத்தொகை என்ற பட்த்திற்கும், கணணி மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சர்வதேச புகழையும் அங்கீகாரத்தையும் பெற்ற அல்லது பெற முனையும் இந்தியாவை ஒரு இடத்தில் கூட காண முடியவில்லை என்பது பெரும் வேதைனைக்குறிய விடயம் மட்டுமல்லாது நூறு கோடி பேரை கொண்ட நாடு ஆகக்குறைந்து 5 இடத்திற்குள்ளாவது இடம்பெற முடியாத நிலையில் உள்ளது என்பது வெட்கம் என்று கூட சொல்லலாம்.

வறுமையின் கோட்டிற்குள்ளே உள்ளதாக கணிக்கபட்டிருக்கும் எத்தியோப்பியா மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறது, மிகவும் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்தியாவிற்கு ??????....

இதற்கு யார் பொறுப்பு?.... இதை பற்றி யாராவது எழுதினால் என்ன?.... ஏன் வரமுடியவில்லை?.., யார் காரணம்? கிரிகெட் கிரிகெட் என்று அது மட்டுமே ஒரு விளையாட்டு என்று பித்து பிடித்து கோடி கோடியாக கொட்டியும் எல்லாத்தையும் கோட்டை விட்டு வரும் இந்திய அணிக்கு விரயமாக்கும் பணத்தில் மற்ற விளையாட்டு போட்டி வீரர்களை உருவாக்க முடியாதா?.... ஏன்? ஏன்?.... இந்த அவல நிலை இந்தியாவிற்கு.....

ஓரு பி.டி உஷாவிற்கு பிறகு யாராவது உலகம் பேசப்பட்ட அளவில் வந்தார்களா தெரியவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஓரிரு இந்தியர்களை தகுதிகாண் சுற்றுகளில் காணமுடிந்தது, ஆனால் இந்த போட்டிகளில் யாருமே என் கண்ணிற்கு படவேயில்லை. சில நேரம் மேற்கு நாடுகளின் தொலைகாட்சிகள் நமது வீரர்களை இருட்டடிப்பு செய்து விட்டதா? யாம் அறியோம்.

இந்தியா இதைப்பற்றி சற்று சிரத்தையுடன் சிந்தித்தால் நல்லது என்று எனக்கு படுகிறது. சும்மா கிரிக்கட் வீரர்களை மட்டும் கோடீஸ்வரரர்களாக்கிவிட்டு, வெற்றி கோப்பைகளை கோட்டைவிட்டுகொண்டிருக்கிறோம். நான் கிரிகெட்டுக்கு எதிரி கிடையாது. ஆனால் விளைச்சல் தராத பயிருக்கு ஏன் சும்மா பணத்தை முதலீடு செய்யவேண்டும். மாற்று பயிரை உற்பத்தி செய்யலாமே என்ற எண்ணம் தான்.

இதைபற்றி நமது தமிழ்மண மேதைகள், அறிவுஜீவிகள், மாற்றம் வேண்டி சீற்றம் கொள்ளும் சிந்தையாளர்கள், சற்று எண்ணி எழுதினால் ஏதாவது ஒரு மாற்றம் எங்காவது பூக்கமலா போகும்.

வரும் காலங்களில் இந்தியர்களையும் இந்திய கொடிகளையும் நாம் இந்த விளையாட்டரங்கங்களில் பார்க்கலாமா?...
கனவு காணலாமா?.... கனவு பலிக்குமா?

நன்றி!

3 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

"வாசிப்போரை சற்றே நிலைகுழைய வைக்கின்றன....,"

இது "வாசிப்போரை சற்றே நிலைகுலைய வைக்கின்றன...." என்று இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

ராகவன்!
என்
கிறுக்கலையும்
கவனித்து திருத்தியமைக்கு
நன்றி!

தருமி சொன்னது…

மாற்றம் வேண்டி சீற்றம் கொள்ளும் சிந்தையாளர்கள், சற்று எண்ணி எழுதினால் .........
அட போங்கயா! எழுதி எழுதி ஒண்ணும் ஆகறதில்ல..எழுதறவ எழுது...ஆட்றவங்க ஆடிக்க்கிட்டே இருப்பாங்க..!