அக்டோபர் 23, 2008

ஈழம்


இன்றைய தேதியில் நம்மிடையே எல்லா செய்திகளையும் பின் தள்ளி எல்லாரிரடமும் முதலில் வந்து நிற்பது ஈழமும் ஈழத்தமிழரின் துயரமும் தான்.

உலக செய்திகளில் இந்த செய்திகள் பத்தோடு பதினொன்று தான்.

சர்வதேச அளவில் எல்லோராலும் பார்க்கப்படுகிற அல்லது அது தான் உண்மையானது என்ற ஒரு எண்ணபாட்டை ஏற்படுத்தவல்லதாக இருக்கிற அல்லது அப்படி இருப்பதாக காட்டப்படுகிற பிபிசி சீஎன்என் அல்ஜெசீரா போன்ற செய்திகளில் இலங்கைத்தமிழர் நிலை பத்தோடு பதினொன்றாக கூட இல்லை.

தமிழகத்திலும் மற்றும் தமிழர் எங்கெங்கு புலம் பெயர்ந்து வாழ்கிறார்களோ அவர்களிடத்திலும் தமிழ் வலைப்பதிவுகளிலும் தான் முழு வீச்சுடன் இருக்கிறது.

தமிழகத்திலும் கூட ஈழத்தமிழர் பற்றிய அந்த குறுந்தகட்டுக்கு பின்னர் தான் அதுவும் தமிழக முதல்வர் திரு கலைஞர் அவர்கள் அந்த குறுந்தகட்டை பார்த்து, அவர் அதிர்ச்சியில் உறைந்து போனதை குமுதம் ரிப்போட்டர் எழுதியதை பார்த்த பின்னர் தான் தமிழக மக்களுக்கு உறைத்திருக்கிறது. உறைத்திருக்கிறது என்று கூற முடியாவிட்டாலும் இலங்கை தமிழனுக்கான ஆதரவை வழங்குவதிலிருந்த அரசியல் சார்ந்த பயம் நீங்கியிருக்கிறது….

விளைவு

தமிழர் அனுதாபம் சுனாமி போல் எழுந்து விட்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் உடனே காத்திரமான ஒரு தலையீட்டை காட்ட தமிழக அரசு மத்திய அரசை நிர்பந்திக்கிற அளவிற்கு போயிருக்கிறது. இவ்ளவு நாள் இந்த அளவு முழு வீச்சை இதில் தமிழகம் காட்டவில்லையே. அதாவது தற்போது நடக்கிற யுத்தம் தொடங்கி ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகின்றன அப்போதெல்லாம் நாம் எங்கிருந்தோம், நமக்கு தெரியாதா?. சீடி வந்து தான் நமக்கு தெரியுமா?.

எது எவ்வாறாயினும் இப்போததைய இந்த அலை எந்தவொரு சுயலாபத்தையோ, அரசியல் லாபத்தையோ கருத்தில் கொள்ளாது உண்மையில் இருதய சுத்தியோடு இலங்கை தமிழரின் ஏறக்குறைய 30 ஆண்டுகால பரிதவிப்புக்கும், தொடர்ந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும், மரணங்ளுக்கும், வாழ்வியல் விடிவிற்கு வழிவகுத்தால் உண்மையில் இத்தருணம் வரலாற்றில் குறிக்கப்படும் என்பது உண்மை.

இப்பதிவை எழுத வந்த நோக்கம் என்ன வென்றால் எல்லாரும் அவலங்களையும், பிரச்சினைகளையும் மட்டும் பேசுகிறோம், இதற்கான தீர்வு என்ன எனபது பற்றியும் அவர் அவர் கருத்துகளையும் கூறினால் நல்லதாக இருக்கும் என் எண்ணுகிறேன்.

அதற்காக தான் சொன்ன அல்லது சொல்கிற கருத்துகளை தான் மற்றவர்கள் ஏற்கனும், அது தான் சரி இது தான் சரி என்று நமக்குள் ஒரு சண்டை தேவையில்லை.

இது பிரச்சினையை கிளப்பிவிடுவதற்கும், நமக்குள் அதாவது தமிழ் வலைப்பதிவாளர்களுக்குள் சண்டை போடவும் அநாகரீக பின்னூட்டம் இடுவதற்கல்ல.

கருத்துகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான, எதிர்கால விடிவுக்கான ஒரு சிறு கல்லாக பயன்பட்டாலே போதும் என்று எண்ணுகிறேன். எழுதும் போது தயவுசெய்து தன் மனசாட்சிக்கு முதலிடம் கொடுத்து எழுதுங்கள்.

ஒருவருடைய கருத்து மற்றவருக்கு ஒவ்வாது இருக்கலாம், ஏனெனில் எல்லாரும் ஒரே வித கருத்துகளை கொண்டிருப்பது கிடையாது ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும்.

காரணம் அவரவர் வாழ்வியல் அனுபவம் வாயிலாக பெற்ற பெறுபேறுகளை கொண்டு எழுதலாம், அப்படி தான் அநேகர் முயற்சிக்ககூடும். அநேகர் தான் வாசித்தறிந்த அல்லது கேட்டு பார்த்த இலங்கை சம்பந்நதமான விடயங்களை வைத்து அதற்கான தீர்வை சொல்லகூடும், எழுதட்டும்.!

இதில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் கருத்துகள் மிகவும் உணாச்சிபொங்ககூடியதாக இருக்க வாய்பிருக்கிறது. அதிலும் இலங்கையில் நடக்ககூடிய போரை நியாயப்படத்தகூடிய வகையில் எழுதவும் வாய்ப்பிருக்கிறது, காரணம் அது அவர்களது அனுபவம் சார்ந்தது. எழுதட்டும்!

சிலர் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வாய்பிருக்கிறது காரணம் அது அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு அனுபவிக்கிற வாழ்வியல் அரசியல் காரணிகள் தீர்மான்க்கிற விடயமாக இருக்கலாம், எழுதட்டும்!

மேலும் சிலர் ஈழப்போராட்டதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் என்ற நிலையிலிருந்து எழுதலாம,; எழுதட்டும்!.

இப்படி பலரும் எழுதும் போது கருத்துகள் சங்கமிக்கிறபோது ஒரு புது தீர்வு பிறக்க நிச்சயம் வாய்பிருக்கிறது. அரசியலிலும், பெரும் பதிவிகளிலும், தீர்மானம் செய்யக்கூடிய நிலைகளில் உள்ளவர்களுக்கு மக்கள் மனதறிந்து செயற்பட இம்மாதிரியான கருத்துகள் ஒரு சிறு துளியாக மாற வாய்பிருக்கிறது.

உங்கள் உங்கள் பதிவுகளிலேயே எழுதுங்கள், அனைத்தையும் திரட்டி தரத்தான் வலைத்திரட்டிகள் இருக்கின்றனவே. நிச்சயம் ஒரு நிலையில் இது அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான பேச்சு மேசையில் வைக்கப்படும்…. அப்போது மக்கள் விருப்பங்களும், கனவுகளும், ஏக்கங்களும் அவர்களின் எதிர்பார்ப்புளும் கூட தீர்வு மேசையில் ஒரு நல்ல தீர்க்கமான தீர்வை எட்ட சிறந்த காரணிகளாக அமையும்.

எங்காவது ஒரு மின்னல் கீற்று பிறக்கும் நிச்சயம் இலங்கைதமிழர் வாழ்கைக்கு விளக்கேற்றும்.

தீர்வை எட்ட என்ன செய்யலாம்…. யாரினுடைய பங்களிப்புகள் மத்தியஸ்தம் தேவை. போராட்ட குழுகளின் அணுகுமுறைகள், இலங்கை அரசின் அணுகுமுறைகள் மற்றும் இந்த இருவரை விடுத்து தமிழ் கட்சிகளின் அணுகுமுறைகள் எப்படி இருக்கலாம்… யாருடைய அல்லது எந்த நாட்டை அல்லது நாட்டின் செயற்பாடுகளை அரசியல் கொள்கைகளை ஒரு முன்மாதிரியாக கொள்ளலாம், என்பதாக எழுதுங்கள்.

மக்களுக்கான விடுதலை என்று தொடங்கி, போராட்டம், பின்னர் சண்டை பின் சமாதானம் தீர்வு என்று எத்தனையோ நாடுகள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டிருக்கின்றன.

புலம் பெயர்ந்த தமிழன் வாழாத நாடுகளே இல்லை என்ற அளவிற்கு இன்று எங்கும் தமிழன் பரந்து வாழும் நிலையில் நல்லவைகள் எங்கிருந்தாலும் அதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

மீண்டும் தயவாக சொல்லிக்கொள்ள விரும்புவது நமது இந்த நோக்கம் இலங்கை தமிழனின் எதிர்கால விடிவுக்கு ராமர் பாலம் கட்ட உதவிய அணிலின் சிறு துளியாக இருந்தாலே போதும் என்றுதான்.

நடந்தவைகள் அனைத்தும் நடந்தவைகளாகவே இருக்கட்டும் கடந்த நிகழ்வுகளை நமக்கான எதிர்காலத்திற்கான அனுபவமாக எடுத்துக்கொள்வோம்.

கடைசியாக உதாரணத்திற்காக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் ஒரு திருமணம் ஒரு மரணம் ஒரு பூப்பெய்த விழா என நடத்தவேண்டிய கட்டாய நிலை தோன்றினால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்று நீங்கள் கருதுவீர்கள்.


தமிழ் பற்றியும் தமிழன் பற்றியும் ரொம்பவும் ஆர்வமாக பேசுகிறோம் எழுதுகிறோம், ஏன் தெரியுமா நமக்கெல்லாம் வாழ ஒரு ஆதாரம் இருக்கிறது வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் வீட்டில் மனைவி மக்களுடன் சுகமோ துக்கமோ பகிர்ந்து கொண்டு தின்று தூங்கி எழுந்து மறுநாள் மீண்டும் வேலைக்கு போவதும் வருவதுமாக இருக்க பழகிக்கொண்டோம்.

ஆனால்

இலங்கையில்ஓரு பக்கம் வடக்கில் ஒரு சமூகம் காட்டில் வாழ வழியின்றி ஆனால் ஏக்கத்தை மட்டுமே நெஞ்சில் விதைத்தப்படி அடுத்தவேளை என்பதை இருட்டில் தொலைத்து விட்டு நிற்கிறது.

இன்னொரு பக்கம் மத்தியில் ஒரு சமூகமோ இலங்கை பொருளாதாரத்தின் முதுபெலும்பாக இருந்து தன் உழைப்பால் நாட்டை உயர்த்திவிட்டு, சிறுமைப்பட்டு அடிமைபட்டு வாழ்விழந்து கிடக்கிறது.

மற்றொரு பக்கம் கிழக்கில் இன்னுமோர் சமூகத்தை பற்றிய செய்தியே வெளியில் வராத நிலையில் சொல்லமுடியாத சோகத்தோடு திண்டாடிக்கொண்டிருக்கிறது.

தமிழன் என்றாலே தீண்டதகாதவன் அல்லது புலிதான் என்ற பார்வையில் அல்லது சந்தேகத்தின்; மத்தியில் அனைத்து சமூக மக்களுமே தலைநகரில் அவதியுரும் நிலைமை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

வலைஞர்களே வாருங்கள்…. தமிழன் நிலைபற்றி எழுதுங்கள், உங்கள் கண்ணோட்டங்களை கருத்துகளை, சாத்தியங்களை எழுதுங்கள்.

பாரதியின் பொய்யாகி போன வரிகளை மெய்யாக்க விதை விதைப்போம்…. ரொம்பவும் காலம் தாழ்திய விதைப்புதான் ஆனால் நல்ல விளைச்சளை எதிர்பார்த்து.

3 கருத்துகள்:

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

எனது பதிவில் ஒரு சில எழுத்துபிழைகளை கவனக்குறைவாக விட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

சம்பந்நதமான - சம்பந்தமான
இலங்கைதமிழர் - இலங்கைத்தமிழர்
குழகளின் - குழுக்களின்
முதுபெலும்பாக - முதுகெலும்பாக

என்று படிக்கவும்
நன்றி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///கடைசியாக உதாரணத்திற்காக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் ஒரு திருமணம் ஒரு மரணம் ஒரு பூப்பெய்த விழா என நடத்தவேண்டிய கட்டாய நிலை தோன்றினால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்று நீங்கள் கருதுவீர்கள்.////
நல்ல பதிவு ஞாயமான கேள்வி..
அமைதியான ஈலம் காண ஏங்கும் தமிழனின் சிறுதுளி..

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

தூயா,
தமிழ் விக்கி
ஆ.ஞானசேகரன்

வந்தமைக்கு என் நன்றிகள்