அக்டோபர் 09, 2005

தமிழரும்!.... தமிழ் வளர்ப்பும்!

கடந்த வாரம் மீண்டும் ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த ஒரு கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது, இது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஓரு பகுதியாக இந்திய தூதரகமும், உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து நடத்தி வந்த ஒரு மாதகால தொடர்விழா நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக, தமிழர்களுக்கான விழாநாள் தான் கடந்த செப்டம்பர் 28 ம் திகதி.

நிகழ்ச்சி ஜித்தா சர்வதேச இந்திய பாடசாலை ஆண்கள் பிரிவின் விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தொடர்ந்து இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இதே மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 8ம் திகதி முதல் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் தமிழர்களுக்கான விழா நாள் தான் கடந்த செப்டம்பர் 28 ம் திகதி.

இனி மேடையின் மையப்பகுதியில் இந்திய கொண்டாட்டம் 2005 ( Indian Festival 2005) என்ற பெரிய விளம்பர போஸ்டர். கீழே மேடையின் கீழ் பகுதியில் ஜித்தா தமிழ் சங்கத்தின் ஒரு போஸ்டர் அதில் ஒரு அழகான வரி "தமிழால் ஒன்றிணைந்தோம் தமிழ் வளர்ப்போம்" என்று, ஆகா! அதை வாசிக்கவே ஒரு சந்தோஷம். (வாசகத்துக்கு சொந்தக்காரர் உண்மையில் பாராட்டபடவேண்டியவர்).

நிகழ்ச்சிக்கு அநேகம் பேர் விருந்தினர்களாக வந்திருந்தனர், அவர்கள் பெயர் விபரம் வேண்டாம், நிகழ்ச்சிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது துணைவியார் வருகை தந்திருந்தனர், மற்றும் இலங்கை தூதுவர் கூட வந்து கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து திரையுலக நடிகர் நாசர் அவர்கள் வந்திருந்தார், ஆனால் மிகவும் தாமதமாக வந்தார் பயணத்தில் ஏற்பட்ட தடங்கல் என்று சொன்னார்.

நிகழ்ச்சி மாலை 5.30 என்று இருந்தது... நிகழ்ச்சியும் 5.30 க்கு தொடங்கியது.
சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லாரும் பங்கு பற்றிய பல நிகழ்ச்சிகள் நாடகம், நடனம், பாடல் என்று இருந்தது.

நிகழ்ச்சிகளில் முதலில் ஞாபகசக்தி அல்லது விரைவாக கணக்கிடுதல் என்ற ரீதியில், தமிழகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார்..., (பெயர் ஞாபகத்தில் இல்லை, ) பல இந்திய மற்றும் ஒரு சில ஆசிய மற்றும் உலக சாதனைகளை செய்தவர் என்று அறிமுகப்படுத்தப்ட்டார். கணணியுடன் போட்டி போட்டார், சபையில் உள்ளவர்கள் தங்கள் பிறந்த அல்லது திருமணமாண, அல்லது தங்களுக்கு விசேசமான திகதியை சொன்னால் அவர் உடனே அந்த நாளின் பெயரை கூறிவிடுவார்... கணணியில் விடை வருவதற்கு முன்னர். சரியாகதான் சொல்கிறார் என்று சபையினரின் கைதட்டல்கள் சான்று சொன்னது.

மற்றும்படி இதில் பங்கு கொண்ட சிறார்கள், நன்றாக தத்தமது பங்களிப்புகளை செய்தார்கள். ஆனால் பெரியவர்கள் அளித்த எந்த நிகழ்ச்சியும் நல்ல தரமானதாகவோ, அல்லது ஏதாவது கருப்பொருள் உள்ளதாகவோ இருக்கவில்லை என்பது சோகமான விடயம்.

ஒரேயொரு நடன நிகழ்ச்சி, பதினொரு மாதத்தங்களுக்கு முன் வந்து போன சுனாமி பற்றியதாகவும் அதன் கொடூரம் பற்றியதாகவும், அழிவு பற்றிய தாகவும், அதனால் மக்களின் வாழ்கை தலைகீழாக புரட்டிபோடப்பட்டதையும் சொன்னது, நிகழ்ச்சி நன்றாக நெறிப்படுத்தப்ட்டிருந்தது, ஒளியமைப்பு, காட்சியமைப்பு போன்றவைகள் நன்றாக திட்டமிடப்பட்டு கோர்க்க பட்டிருந்தன. ஆனால் அந்த நிகழ்ச்சி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது தான் யாரும் எதிர்பாராத சோகம்.

மொத்ததில் நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்திமயம், தமிழ் என்று பார்த்தால் சிறுமிகள் குழு ஒன்று நடனமாடிய " எங்களுக்கும் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால்..." என்ற பாடலுக்கான பொங்கள் நடனம் மட்டுமே தமிழாய் தமிழுக்காய் இருந்தது என்று சொல்லலாம்.

அல்லாது ஓரிருவர் நிகழ்ச்சிகளின் இடையில் ஓரிரு தமிழ் (சினிமா) பாடல்களை பாடினர், இன்றைய காலகட்டத்தில் மிகப்பிரபலமான "கரோகே" (Karoake) என்ற பாடலுக்கான பின்னனி இசையை சிடியில் ஒலிக்க விட்டு இசைக்கு பாடும் முறையில் பாடினர்.

இந்த ஓரிரு பாடல்களிலும் கூட சங்கீத மேகம்...., சங்கராபரணம் போன்ற பாடல்கள் மட்டும் கேட்டக கூடியதாய் இருந்தது என்பது வேறு விடயம். ஒரு யுவதி " ஒவ்வொரு பூக்களுமே... என்று மிகுந்த போராட்டத்துடன் பாடி சென்றார், அதிலும் அவருடன் சேர்ந்து ஒரு சிலர் "பியூஷன்" Fusion என்ற பெயரில் ஏதேதோ செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு தபேலா வாசித்த நபர் தான் கதாநாயகன். மிகவும் துல்லியமாக அருமையாக வாசித்து சென்றார். அந்த ஒரு திருப்தி மட்டுதான்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் சினிமாப்பாடல்கள் தான் தலை தூக்கி நின்றன என்பதை சற்று வருத்ததுடன் சொல்லவேண்டியதாகிறது. அதிலும் எல்லாம் இந்தி மயம்தான். மேல் சொன்ன சுனாமி பற்றிய நிகழ்ச்சியில் வந்த மின்சார கனவு படப்பாடல்கள் எல்லாம் கூட இந்தி பதிப்பின் பாடல்கள் தான். கலைக்கு இனம் மொழி மதம் தேவையற்றது... என்பது சரி தான், ஆனால் தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை பயன்படுத்த ஏன் இந்த தயக்கம்?

நிகழ்ச்சியின் இடையில் திரு. நாசர் அவர்கள் மேடைக்கு பேச வந்தார், வந்ததும் தனது ஆதங்கத்தை அப்படியே கொட்டிவிட்டார், ஒரு சிறப்பு விருந்தினர் ஆற்ற வேண்டிய உரையாக இல்லாது ஜித்தா தமிழ் சங்கத்துக்கு அறிவுரை சொல்லவேண்டிய உரையாக ஆக்கிகொண்டார். அவர் பேசும் போது அவையில் ஏகப்பட்ட சலசலப்பு. சில நேரம் பேசாது போய்விடுவாரோ என்று கூட நினைத்தேன். கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத ரசிகர்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். கடைசியில் அவரும் தமிழிலிருந்து மாறி ஆங்கிலத்தில் தான் பேசினார். ( தமிழ் அல்லாத ரசிகர்கள் வந்திருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாமோ? என்னவோ? )

தமிழர்களுக்கான, தமிழ் சங்கம், ஏற்பாடு செய்த தமிழ் கொண்டாட்டத்தில் இதுவரை ஒரு தமிழ் நிகழ்ச்சி கூட வரவில்லை, வந்த நிகழ்ச்சிகளும் கூட தமிழ் அல்லாதவையாக தான் இருக்கின்றன...., இங்கு அவர்கள் ஆடிய சினிமா பாடல்கள் எல்லாம் பெரியவாகளால் பெரியவர்களுக்காக
எழுதப்பட்டவை, அதை அந்த சிறார்கள் ஆடும் போது அதன் அர்த்தம் தெரிந்து தான் ஆடுகிறார்களா? என்று தன் உரையில் ஆதங்கப்பட்டு போனார்.... நிகழ்ச்சியின் இடையிலேயே அரங்கத்திலிருந்து காணாமலும் போயிவிட்டார்.

இப்படியாக ஜித்தா தமிழ் சங்கத்தின் இந்தி நிகழ்ச்சிகள் யாவும் இரவு 11.30 மணியளவில் முடிவுபெறும் போது அரங்கத்துள் ஒரு கால்வாசிப்பேர் தான் மிஞ்சியிருந்தார்கள். இறுதியாக அரங்கத்துள் தேசிய கீதம் பாடப்பட்டது,

ஆனால் பாருங்கள் அப்போது தான் இருந்த மிச்சப்பேரும் எழுந்து அவரவராக அரங்கத்தை விட்டு வெளியே போக தொடங்கிவிட்டார்கள்.

ஆகா என்னே நாட்டுப்பற்று...!

நானும் எனது நண்பர்களும் மட்டும் கடைசிவரை எழுந்து நின்று விட்டு வெளியில் வந்தோம்.... அப்போது என் நண்பர்கள் சொன்னார்கள்.

"தமிழ் சங்கத்துக்கு வந்ததால் கொஞ்சம் இந்தி கற்றுக்கொண்டோம்"

இது இங்கு மட்டுமில்லை தமிழன் புலம் பெயர்ந்து வாழும் எல்லா
இடங்களிலும் நடக்கிற ஒரு சம்பவம் தான். இதற்கு காரணம் என்ன யாருக்காவது தெரியுமா?...

ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழன், தமிழ் கலாச்சராம், தமிழ் மொழியென்று என்று ஏதேதோ "பினாத்தல்கள் குழந்தைகள்" மட்டும் தினம் பிறந்த வண்ணம் இருக்கிறது.

வாழ்க தமிழ்!

5 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வேதனை தரும் உண்மையை தான் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். கலை என்றாலே சினிமா என்றாகி விட்டது. அர்த்தம் தெரிந்து கொள்ளக்கூடாத பாடல்களுக்கு குழந்தைகளை ஆட விட்டு அதை ரசிப்பது எப்படி யாருக்குமே உறுத்த மாட்டேங்கிறது :(

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

நன்றி காம்கி
அவர்களே!

"மொழி என்பது மத்தவங்களை புரிஞ்சுக்கிறதுக்கு தான்"..
உண்மை தான் ஒருவன் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் மிகவும் நல்லதுதான்..

அதற்காக தனது மொழியை விட்டுவிட வேண்டுமா? உதராணத்துக்கு தமிழர் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதற்காக அவர் எல்லாரிடமும் ஆங்கிலத்திலேயே பேச முடியுமா?

நாம நடத்துவது தமிழ் நிகழ்ச்சிகள்... அது தமிழில் இருக்கவேண்டும் என்பது நியாமானது. இதில் யாரும் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் பேசினால் தான் ரசிப்போம் என்று இருக்கவில்லை, விழா முடிந்து போகும் போது வந்திருந்த எல்லா தமிழ் ரசிகர்களிடமும் இந்த ஏமாற்றம் இருந்ததை கண்டேன்.

மேலும் ஒரு இருநூறு அல்லது முன்னூரு பேர் வரையில் தமிழர்களாக இருக்க, ஒரு பத்து அல்லது இருபது பேர் ரசிக்கிறார்கள் என்று முழு நிகழ்ச்சியையும் இந்தி மயமாக்க வேண்டுமா?

கலை நிகழ்ச்சியில் எல்லா மொழிகளும் பங்கு கொள்வது நல்லது சால சிறந்ததும் கூட. ஆனால் தமிழர் கொண்டாட்டதில் தழிழ் மறக்கபட்டுவிட்டதே அது எந்த வகையில் நியாயம்.

சரி விதண்டாவாதமாக ஒரு கேள்வி.., அதாவது மற்ற மொழி காரர்கள் தங்கள் கலை நிகழ்ச்சிகளில் தங்கள் மொழி தவிர்த்து அதுவும் தழிழுக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துவார்களா?

அப்படியே நடத்தினாலும் அதை கேலி நிகழ்ச்சியாக காண்பிப்பார்களேயொழிய, அவர்கள் நாம் செய்வது போல் (அதாவது அவர்கள் மொழிக்கு நாம் முக்கித்துவம் கொடுப்பது போல்)செய்யமாட்டார்கள்.

நமது கலைகள் மற்றவர்களின் கலைகளை விட எந்த விதத்தில் குறைவு?... அதை மற்றவர்களுக்கு தெரியபடுத்த வேண்டாமா? அதில் நாம் பெருமை பட வேண்டாமா?

வேறு மொழி பேசுபவர்களிடத்தில் போய் தமிழ் தான் பேசுவேன் என்றில்லாது அவர் மொழி பேசி அவர்களிடத்தில் உறவாடலாம் அது நல்லது தான்.

ஆனால் தமிழனிடமே ஒரு தமிழன் தமிழில் பேசாது, அந்நிய மொழியில் பேசலாமா?...

இதை நான் மொழி வெறியாக பார்க்கவில்லை, மாறாக மொழிப்பற்றாக பார்க்கிறேன். வெறிக்கும் பற்றுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

நல்ல பதிவு. நன்றிகள்.
(இப்படிச் சொல்வதை காம்கி வாத்துப் பின்னூட்டம் என்பார்.)
காம்கியின் கருத்துக்கு நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. அவர் நக்கலாகத்தான் சொல்லியுள்ளார்.

Unknown சொன்னது…

//என்ன கிறுக்குத்தனமான பதிவு சார். வந்திருக்கும் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கவேணும் என்பதாலே இந்தியிலும் இங்கிலீசிலும் பேசியது சரிதானே? //

ஜித்தா தமிழ் சங்கம் என்பதற்குப் பதிலாக வேறு பெயர் வைத்து இருக்கலாம். யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

பல மொழிகள் தெரிந்து இருப்பது தவறே அல்ல. தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொள்ளாதது கேவலம் தான்.

நான் வாழும் இடத்தில் பல சங்கங்கள் உள்ளன.(மாநில வாரியாக ) தமிழனைத் தவிர யாரும் அவர்கள் விழாவில் ஆங்கிலத்தில் பேசுவதில்லை.

யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, யார் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும், தமிழ் பேசுவதிலும் கர்வம் கொள்கிறார்களோ அவரே தமிழர் .... அம்புட்டுத்தான்.

பார்க்க எனது பதிவு:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com