ஆகஸ்ட் 20, 2005

என் புத்திக்குள் வந்த வினா?

என் புத்திக்குள் வந்த வினா?
இலங்கை அரசியலில் கடந்த வாரம் திரும்பவும் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறிய கதையாகி போனதை எல்லாரும் அவதானித்தோம்....
சரி நடந்தது நடந்து விட்டது, இதெல்லாம் இலங்கை அரசியலில் சகஜமப்பா !!!! என்று சொல்லலாம், என்றாலும்....., எதற்கு நடந்தது, இதனால் உச்ச பயன் யாருக்கு? என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து போனதன் விளைவாக இந்த பதிவு.

இது யாரையும் உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ அல்லது மேதாவி தனம் காட்டவோ அல்ல.

விடுதலைப்புலிகள் செய்திருப்பார்களா?...
செய்திருக்கமாட்டார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. ஏனெனில் தற்போது தங்களது போராட்டத்தில் அரசியலையும் இணைத்துக்கொண்ட பின்னர் அவர்களின் சமீபகால செயற்பாடுகளும், எடுத்து வைக்கும் அடிகளும் மிக நிதானமானவை....! அவசரப்படமாட்டார்கள். அப்படி அவர்களுக்கு திரு. கதிர்காமரை கொலை செய்ய வேண்டுமென்றால் இவ்வளவு காலம் அவர்கள் காலம் தாழ்த்தியிருக்க மாட்டார்கள், அவர்களின் இப்போதைய போராட்ட நிலையில் கதிர்காமர் அவசியமேயில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவர் அவர்களுக்கு ஒரு டுபுக்கு அல்லது ஜுஜுபி!

இதை ஏன் ஜேவிபியினர் செய்திருக்க கூடாது என்ற கோணத்தில் பர்ர்த்தால் என்ன?,காரணம்:
1. இந்த ஜேவிபியினர் இலங்கையில் மக்களை உச்சபட்ச மூளைச்சலவை செய்து அரசியல் செய்பவர்கள். அவர்களது பேச்சு வன்மை அந்த அளவிற்கு தன்மை வாய்ந்தது.

உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இப்படி வருகிறது. " Kill him, not let him go".
அவனை கொல் போக விட வேண்டாம். இது தான் அர்த்தம்.
இந்த வசனத்தில் கமா அடையாளத்தை ஒரு சொல் மாற்றி பின்னால் போட்டு பாருங்கள் வாக்கியத்தின் முழு அர்த்தமே மாறிவிடும் எப்படி? "Kill him not, let him go" அதாவது அவனை கொல்ல வேண்டாம் போக விடு.

இப்படி தான் அவர்கள் வார்த்தைகளை மாற்றி பேசுவதில் அசகாய சூரர்கள், இதனால் தான் முன்பு பலிகளுடனான பேச்சு வார்தை ஒப்பந்தங்களின் வார்த்தைகளை இப்படி போடு அப்படி போடு என்று பெரும் குழப்பம் நடந்து ஜானாதிபதி பெரும் விசனப்பட்டு கருத்துகள் சொல்லியிருந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.....

சரி விடயத்திற்கு வருவோம்,
இந்த ஜேவிபியினர் ஆளும் கட்சியில் இருந்து விலகி ஒரு தீடீர் தேர்தலை கொண்டு வந்து குறைந்தபட்சமாக, உண்மை தெரியாத இல்லது தெரியாது போல நடிக்கும் பேரினவாத பெரும்பான்மை ஓட்டுக்களை சுருட்டி பாராளுமன்றத்தில் வார்த்தை ஜாலத்தால் பதவியை பிடிக்கலாம் என்ற அவர்களின் திட்டம் அல்லது கனவு பலிக்கமலே போனதும், மாறாக சுதந்திர கட்சி பெரும்பான்மை பலம் இல்லாவிடினும் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு நடத்திவருவதும் இவர்களுக்கு முதல் தோல்வி.

மேலும் திரு.கதிர்காமர் தான் அம்மையாருக்கு எல்லாவிடயங்களிலும் ஆலோசனை மந்திரியாக இருப்பவர் என்பதும் இவர்களுக்கு பெரிய தலைவலி மட்டுமல்ல ஒரு அரசியல் எதிரியும் கூட.

ஆக இவர்களுக்கு ஒரு காயை அடிக்கவேண்டும் ஆனால் இரண்டு பெரிய காய்கள் விழவேண்டும். அதற்காக திரு.கதிர் பயன் படுத்தப்பட்டிருக்கலாம். காரணம் விழப்போகும் கொலையினால் அரசாங்கமும், மக்களும், சர்வதேச நாடுகளும் உடனே புலிகளை தான் சந்தேகிக்கும் இது முதல், மற்றது தங்களை யாரும் பின் தொடரமாட்டார்கள் இது இரண்டு.

மேலும் இதனால் சமாதான முன்னெடுப்புகள் உடனே தடைபெறும். இப்படி நடந்து எல்லாரும் புலிகளை விமர்சித்து... ஏதாவது ஏடாகூடமாக போய் மீண்டும் ஒரு யுத்தத்தை கொண்டு வந்து விட்டால் போதும் இது கும்பிடபோன தெய்வம் குறுக்க வந்த மாதிரி.

மற்றது கொலையில் தங்களை யாரும் கண்டுகொள்வே மாட்டார்கள். ஏனென்றால் திரு. கதிர்காமர் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும், முன்னெடுப்புகளுக்கும் முதல் எதிரி என்பது சர்வதேச சமூகம் உட்பட உலகம் அறிந்த ஒரு விடயம். ஆகவே இந்த பழி வெகு சுலபமாக புலிகளை சேர்ந்து விடும் இதற்காக பெரிதாக பிரயத்தனபடத்தேலையில்லை.

இது மெய்ப்பட்டுப்போனது எப்படியெனில் எனது இந்த அனுபவம் ஒரு சிறு உதாரணம்.

எனது சிங்கள மொழி நண்பர்கள் (கொஞ்சம் படித்தவர்கள் இங்கு நல்ல பதிவியில் இருக்கக்கூடியவர்கள்) என்னிடம் இது பற்றி பேசும் போது உடனே சொன்னது ஐயோ பாவம் கதிர்காமர் படித்த மனிதர், அறிவாளி, நம் நாட்டுக்கு இப்போதைய அரசியலுக்கு தேவையான மனிதர், இதை புலிகள் தான் செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக சொன்னார்கள்.
எப்படி என்று கேட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விடயம் உலகிலேயே புலிகள் மட்டும் தானாம் பயங்கரவாத குழுக்களிலேயே தொலைதூரம் குறி பார்த்து தவறாது சுடுவதில் கெட்டிக்காரர்களாம். அதுவும் ஸ்னைப்பர் துப்பாக்கி சுடுவதில் அவர்கள் தான் வல்லவர்களாம். இவர்களை விட்டால் இலங்கையில் இந்த வேலையை செய்ய யாரும் இல்லியாம்.

அவர்களே இப்படியென்றால் இலங்கையில் இருக்க கூடிய மேற்சொன்ன உண்மை தெரியாத மற்றும் தெரியாது போல நடிக்கும் பேரினவாத பெரும்பான்மை மற்றும் சிந்திக்காத மக்கள் நிலை எப்படி இருக்கும் என்று இங்கு சொல்ல தேவையில்லை. ஆக இந்த அளவில் இதை செய்தவர்களுக்கு வெற்றி.

2. இனி ஒரு சரியான ஆலோசகர் இல்லாது சந்திரிகா அம்மையார் தான் அரசாங்கத்திற்குள் அல்லது கட்சிக்குள் எடுக்க போகும் முடிவுகளில் தடுமாறுவார், ஆக இது உட்கட்சி பூசலுக்கும் குழப்பத்துக்கும் இலகுவாக வழிசமைக்கலாம், இப்படி ஆகும் பட்சத்தில் அந்த கட்சியிலிருந்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினாகளை மற்றும் கட்சி அங்கத்தவர்களை இழகுவாக தம் பக்கம் கொண்டு வந்து தம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். ஆக அடுத்த தேர்தலில் நாற்காலி நிச்சயம், அப்படியே ஆட்சி போனாலும் எதிர்கட்சியாக நிச்சயம் வரலாம் என்ற கணக்கும் காரணமாக இருக்கலாம், இறந்த கால மற்றும் நிகழ்கால இலங்கை அரசியல் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுகிறது.

சரி எப்படி செய்திருக்கலாம் அல்லது எப்படி சாத்தியம்?
அரசு படைகளுக்குள் இருக்கும் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு நடத்தியிருக்கலாம்.
காரணம் கொலையாளி அங்கு எப்படி வந்தான் என்பது ஓருபுறம் இருக்க, அவ்வளவு பாதுகாப்பு இருக்கும் போது எப்படி தப்பியிருக்க முடியும் என்பது தான் பிரதான கேள்வி?. கொலை நடந்தது இருப்பது வீட்டிற்கு வெளியே.

ஆக பாதுகாப்பு படையினர் முன்னால் தான் கொலைசெய்யப்பட்டவர் சரிந்திருப்பார், உடனே படையினர் உஷாராகி அந்த ஏரியாவையே சுற்றி வளைத்து மூடியிருப்பார்கள்.
அப்படியானால் யாராவது அகப்பட்டிருக்க வேண்டும்.... அதுவும் இல்லை.

சரி புலிகள் செய்தால் அவர்கள் தப்பிக்க முயற்சிப்பார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள். அது தான் புலிகள் செய்த தாக்குதல் வரலாறுகள் வெளிப்படுத்தியிருப்பவை. அப்படியானால் ஒரு சடலமாவது கிடைத்திருக்க வேண்டும் கிடைக்கவில்லை. ஆக இந்த இடத்திலிருந்தும் புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிற எண்ணத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பது தெரிகிறது.

ஆக படையினரின் ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கலாம். தேடுதல் நடவடிக்கைகள், கைதுகள் என்பன கூட முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எங்கு எங்கு நடத்தப்படவேண்டும் எப்படி எப்படி கைதுகள் இருக்க வேண்டும் என்று ஆலோசித்து நடத்தப்பட்டிருக்கலாம். அப்படி இல்லையென்றால் அரசாங்கமே இதனை செய்திருக்கலாமோ என்னமோ? யார் கண்டார்கள்....!

அதையும் ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் மிகவும் துள்ளியமாக எப்படி பார்க்கபட்டு்ள்ளது என்பதை இங்கே சொடுக்கினால் தெரியும்.

2 கருத்துகள்:

வசந்தன்(Vasanthan) சொன்னது…

இரண்டாவது தடவையாக மாற்றுக் குரலொன்றைக் கேட்கிறேன்.
பரவாயில்லை. யார் செய்தது என்பது உறுதியாகாதவரையில், சாத்தியங்கள் அனைத்தையும் கதைப்பதாவது நல்லது. ஆனால் சிலர் தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள்தான் என்று நிற்கிறார்கள்.

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

//....இதனால் தான் முன்பு பலிகளுடனான பேச்சு வார்தை..//

"புலிகள்" என்று வரவேண்டியது... ச்சே!
பலிகள் என்று வந்து விட்டது.
மன்னித்துக்கொள்ளுங்கள்....
விஜயகாந் சொன்னது மாதிரி.. தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு தான் என்று சொல்லி யாரும் பின்னூட்டம் இடமாட்டார்கள் என நினைக்கிறேன்.