மே 31, 2022

என் மனதில் பட்டது

 இன்று ஒரு பத்திரிகையில் வந்த  செய்தி

74 வயதில் கணிதபாட பரீட்சை எழுதிய முதியவர்!

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு செய்தி ஆனால் இதை சற்று ஆழமாக யோசித்தோமா?

கணித பாடம் தான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதா?  கணிதம் எனக்கு சரியாக வராது என்றால் நமக்கு வாழ்கை அவ்வளவு தானா? இலங்கை கல்வி முறைமையை பொருத்தவரை இது தான் நியதி. இது எவ்வளவு தவறான  முறைமை அல்லது கொள்கை என்பதை ஏன் இன்றுவரை யாருமே உணர மறுக்கிறோம். இதனால் எத்தனை பேர் வாழ்கையில் தான் நினைத்தை செய்ய முடியாது போயிருக்கிறது.

இது திட்டமிட்டசதியா? அல்லது அலட்சிய போக்கா? தெரியவில்லை. அந்த பரீட்சாத்தி ஒரிடத்தில் “ நான்கு திறமை சித்திகள் பெற்றிருந்தேன். பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.” என்று கூறுகிறார். எவ்வளவு வேதனையான விடயம்.

கணக்கியல் அல்லாத எந்த ஒரு துறைக்கும் கணக்கு அவசியமே இல்லை. அடிப்படை கணித அறிவு இருந்தாலே போதும். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவணுக்கு அடிப்படை கணித அறிவு நிச்சயம் இருக்கும்.
மேலும் கணக்கியல் இன்றி முடியாது என்று துறைககள் உள்ளது, பொறியியல், கணணி, துறை போன்றவை. ஆனால் வைத்திய துறைக்கு கூட பெரிய கணித அறிவு தேவைபடாது என்றே சொல்வேன்.
  அடிப்படை கணித அறிவு இருந்தாலே போதும் துறைசார் தகைமைகளை படித்து தேர்ச்சி பெறும் போது வைத்திய துறைக்கான அதற்குறிய கணித அறிவு அந்த நபருக்கு தேவையான அளவு வளர்ந்து விடும் அல்லது வளர்த்துக் கொள்ளலாம்.

மேலும் கணித பாடத்தில் சித்தியில்லை என்றால் ஒரு நபரால் ஒரு காசாளராக (கேசியர்) வேலை பார்க்க முடியாதா? வரவையும் செலவையும் எழுதி மிகுதி பணத்துக்கு பொறுப்பு கூற முடியாத அவ்வளவா முட்டாளாக இருப்பார்கள்?

ஆனால் இலங்கையில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை பாருங்கள் ஆச்சரியமாக இருக்கும். “ சில நேரம் ஒரே தடவையில் கணித பாடத்துடன் ஆறு பாடங்கள் அல்லது ஐந்து பாடங்கள் சித்தியடைந்திருத்தல்”  என்று வரும் கணிதம் அத்தனை அவசியமே இல்லாத ஒரு துறைக்கு.

ஆக இந்த கணக்கை வைத்து எவ்வளவு பெரிய தப்புகணக்கு போடுகிறார்கள்.

உலகில் மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் இப்படிதானா செய்கிறார்கள். அங்கெல்லாம் கல்வி முறை வேறு அது “மக்களை வாழவைக்கும் கல்வி முறை” இங்கு தான் இப்படி.

கைத்தொழிலில் கொடிகட்டி பறக்கும் சீனாவில் நாம் வாங்கி பாவிக்கும் சின்ன சின்ன இலக்ட்ரோனிக் சாதனங்கள்,மற்றும் விளையாட்டு பொருட்களை குடிசைக் கைதொழிலாக செய்கிறார்கள், அதில் வேலை செய்கிறவர்கள் எல்லாம் கணித மேதாவிகளா? … கணித பாடமே இல்லாமல் வாழ்கையில் ஜெயித்தவர் பட்டியல் கொஞ்சமல்ல.

வாழ்கைக்கு கல்வி மிக அவசியம் இதில் கணிதம் தெரிந்தால் தான் கல்வி, இல்லையென்றால் வாழ முடியாது ஜெயிக்கவும் இயலாது என்றால் அப்போது மற்றவைகள் எல்லாம் என்ன புண்ணாக்கா?.... 
கொஞ்சம் யோசிங்க! 

நன்றி! 

மே 09, 2022

 


ஜூன் 08, 2020

மலையக பெண்கள் கொழுந்தும் கையுமாகதான் இருக்கனுமா?





மலையக பெண்கள் கொழுந்தும் கையுமாகதான் இருக்கனுமா?

இன்று உலகில் நாகரீகம், அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று எல்லாவற்றிலும் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
அதிலும் இவற்றில் பெண்களின் பங்கு, மற்றும் அவர்களின் வளர்ச்சி என்பது இன்றியமையாதது. எதிலும் எந்த துறையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது யாரும் மறுக்க முடியாத இடத்தை எட்டியிருப்பது உண்மை. ஆக இன்றைய நவீன உலகின் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு சரிக்கு சரிபாதியை எட்டிவிட்டது என்றே சொல்லலாம், ஆக பாரதி கண்ட புதுமைப்பெண் கனவு மெய்ப்பட்டதாகவே கொள்ளவேண்டும்.
இதற்கு பாடுபட்ட,  இன்றும் பாடுபடும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்....... இப்போ இதுவல்ல பிரச்சினைமலையக பெண்கள் கொழுந்தும் கையுமாக தான் இருக்கனுமா இது தான் பேசு பொருள்....



என் பதில்! கொஞ்சம் மாத்தியோசிக்கனும்….
  
நம் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பது தேயிலை துறையும் தேயிலை உற்பத்தியும் தான். தேயிலை தொழிலால் தான் இலங்கைக்கு உலக வரைபடத்தில் ஒரு உயரிய முகவரி கிடைத்ததே என்றால் யாராலும் மறுக்க முடியுமா?.... 18ம் நூற்றாண்டில் கோப்பி செய்கை நலிவடைந்ததை தொடர்ந்து 19ம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை இலங்கையின் தேயிலைக்கு இருக்கும் வரவேற்பு, அல்லது பெறுமதி என்பது இன்னும் இறங்கு முகம் காணவில்லை,


(70களில் வெளிநாட்டு கடன் பெற நம்நாடு எத்தணிக்கும் போது தேயிலை தொழிற்துறையை மட்டுமே உறுதி பத்திரமாக நம்பி வெளிநாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தார்கள் என்று நான் சிறு வயதில் சொல்லக்கேட்டதுண்டு)  

இணைய புள்ளிவிபரப்படி இலங்கையின்

2019 ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானம் 240.6 பில்லியன்
2018 ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானம் 231.7 பில்லியன்
2017 ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானம் 233.3 பில்லியன்
,


இதை பார்க்கும் போது மெற்சொன்ன செவிவழி செய்தி உண்மையாகவும் இருக்கலாம்.

அப்படியிருக்க தேயிலை துறையில் இருக்கும் நம்மை அரசியல் ஆதாயத்துக்காக நமது பலம் நமக்கு தெரியாமல் இருக்க செய்வதற்காக பல்வேறு காய் நகர்த்தல்கள், ஏளனங்கள், மறுதலிப்புகளை செய்தாலும், அதேவேளை நம்மை விட்டு விடாது கைகுள் அடிமையாக வைத்துகொள்ளும் கைங்கரியம் மிகவும் சூட்சுமமாக நடந்து வருகிறது.
(இதைபற்றி எழுத விளைந்தால் கட்டுரை வேறு திசை நோக்கி பயணிக்கும் ஆகவே அதை விடுவோம்)

எத்தனை பெரிய வேலைகள் செய்தாலும், யானையை ஒரு சின்ன சங்கிலியில் அதன் காலை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம், உண்மையில் யானைக்கு இந்த சங்கிலியை உடைத்தெறிய நிமிடங்கள் அதிகம், ஆனாலும் அந்த சங்கிலிக்கு கட்டுபட்டு ரொம்பவும் பவ்வியமாக பாகன் போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எவ்வளவு பெரிய வேலையையும் சர்வசாதாரணமாக செய்து விட்டு தலையாட்டி காலாட்டி நிற்குமே அந்த நிலைதான் எம்மக்களுடையது என்றால் மிகையில்லை.

சரி இவ்வளவு உயரிய பலம் கொண்ட ஒரு தொழிற்துறையில் இருக்கும் நம் பெண்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை
, கல்வியறிவிலும் உலகஅறிவியலும் நவீன தொழில்நுட்பம் வேண்டுமானால் அவர்களுக்கு தெரியாது இருக்கலாம், அதற்காக அவர்கள் குறைந்தவர்கள், கிடையாது. அவர்களின் தொழிற்திறன், வேகம், ஆளுமை, அபார அநுபவம், உடலுறுதி வேறு யாருக்கும் வராது என்பதை யாராவது எண்ணி பார்த்திருக்கோமா?

அவர்களை திட்டமிட்டு அடிமைபடுத்தி யானைக்கு சங்கிலி போட்டது போன்று அரசியல் சமூக அமைப்பு வைத்திருக்கிறது என்பது தான் உண்மை!

இப்படியான உயர்ந்த ஒரு தொழில் செய்யும் பெண்களை கவுரப்படுத்தி
, ஊக்கபடுத்தி அவர்களை நவீனபடுத்தி, விளிப்பூட்டல், செய்தால் நம் பெண்கள் எவ்வளவு பெருமை படுவார்கள்? கேவலப்படுத்துவதாலும் எதிர்மறையான எண்ணங்களை விதைப்பதாலும் நம் பெண்கள் இந்த பெருமதி வாய்ந்த துறையை விட்டு வெளியேற்றி பொருளாதாரத்தின் நமது பெரும் பங்களிப்பை இல்லாதொழித்து நம்மை மேலும் வலுவிழக்க செய்வது எப்படி ஒரு புத்திசாலி செயலாகும் என்று எண்ணி பார்த்திருக்கிறோமா?




சரி ஒரு வாதத்திற்காக நம்பெண்கள் எல்லாரும் தேயிலை துறையிலிருந்து


அ.    வெளியேறிவிட்டால் அவர்களுக்கான மாற்று வழி ஏதாவது கையில் இருக்கிறதா? அதை பற்றி சிந்தித்து செயற்திட்டங்கள் உண்டா?.... உடனடியாக அவர்களின் வாழ்வாதாரம் எப்படி நிர்வகிக்கப்படும்?.....

ஆ.    அதுவரை எதை உண்டு வாழ்வது... எது வாழ்வின் ஜீவாதாரமாக இருக்க  போகிறதுமாற்று வழி என்பது எடுத்தேன் கவுத்தேன்  என்ற பழமொழிக்கொப்ப ஒரே நாளிளோ அல்லது ஓரிரு வருடங்களிளோ சாத்தியப்படுமா?

இ.     நமது நிலமும் சூழலும் காலநிலையும் வேறு எந்த முழுமையான மாற்று பொருளாதாரத்துக்கு ஏற்றது? அதை எப்படி மாற்றிக்கொள்வது? எப்படி நமதாக்கி கொள்வது என்ற ஏதாவது திட்டம் உண்டாஎன்று சற்று யோசிக்க வேண்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

1.       பெரும் தனவந்தர்கள், பெரும்பான்மையினர், வீட்டில் பணிப்பெண் வேலைக்கு தான் அமர்த்தபடுவார்கள், இது எவ்வளவு கேவலத்துக்குள்ளாகும்?
2.      ஆடை உற்பத்தியில் ஈடுபடுத்தலாம் சரிதான் எவ்வளவு பேரை உள் வாங்குவது?.....
3.      சுய தொழில், வியாபாரம், என்று இதரபல வேலைகளில் இறக்கிவிடலாம் இதில் எத்தனை பேர் தொழிற் திறனோடும், திட்டமிடுதலோடும் செயலாற்றுவார்கள்? அவர்களுக்கான அல்லது தொழிலுக்கான முதலீடுகள் பயிற்சிகள் எவ்வாறு திட்டமிடப்படும்?
4.      கடைசியில் விவசாய பண்ணைகள், பூ பண்ணைகள், நிலங்களுக்கு வேலைக்கு போவர்கள், அங்கும் கூலி வேலைதான்..... (எந்த அடிப்படை வசதிகளுமற்ற (ஓய்வூதியம், வீட்டுமனை,……. போன்ற))
5.       படித்த பெண்கள் என்றும் படித்தால் தேயிலை தொழில் கொரவம் இல்லை என்று தோட்டங்களை விட்டு வெளியேறினால் நமக்கான வேலை வாய்ப்புகள் ஓட்டல்களில், தனியார் நிறுவனங்களில், அழகு நிலையங்களில், பல்பொருள் அங்காடிகளில், கடைகளில், ஐந்து நடசத்திர விடுதிகளில், ஆடைதொழிற்சாலைகளில், உற்பத்தி தொழிற்சாலைகளில்....... என்று நிரம்பியிருக்கும் ஆனால் நமது இருப்பிடம் என்னவாகும்?...

நமது மொழி,  கலாச்சாரம், கலை பண்பாடு விழுமியங்கள் எங்கு பதியபடுத்தபடும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எப்படி கடத்தப்படும்?  

ஆக இப்படி போனால் நாமெல்லாம் படிப்படியாக வெளியேற்றப்பட்டு தேயிலை தொழில் ஆள் மாறி, கை மாறி இடமாறலாம், அப்போது நாமெல்லாம் ஒரு கொத்தடிமைகளாக பரிணாமப்படும் ஆபத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோமா?.

இது மிகவும் உயர்ந்த தொழில், நம் அடையாளம்,  கொரவம் மிக்க தொழில் இதில் நாம் தான் சுப்பர் ஸ்டார் நம்மை தவிர மிகவும் தரமாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேறாருமில்லை.

நாம் வஞ்சிக்கபட்டிருகிறோம், இன்னும் வஞ்சனைக்குள் சிக்குண்டு இருக்கிறோம். இவற்றிலிருந்து வெளிவந்து நமது தொழிலையே நாமே கையிலெடுத்து நமே நமக்கு முதலாளிகளாகவும், தொழிலாளியாகவும் இருந்து பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய சக்கிதியாக தொடர்ந்து திகழ்வது சரியாகுமா? இல்லை இக்கட்டுரையின் தலையங்கத்தையே தூக்கி பிடித்துகொண்டு அநாதையாகி போவது தான் சாணக்கியமா?

முடிவை மக்களிடமே விடுவோம்

சிந்தித்து, விவாதித்து, தெளிந்து முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கே! 

டிசம்பர் 16, 2018

சம்பளம்! சம்பளம்! சம்பளம்!


நமக்கு மட்டும் தான் ஒவ்வொரு முறையும் இந்த போராட்டம் தேவையாக இருக்கு..... ஏன்?😪
பொதுவாக எங்குமே அதாவது எல்லா வேலை தளங்களிலும், நிறுவனங்களிலும் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் தன் வியாபாரத்தின் வரவு செலவு கணக்குகளை சோதித்து பார்த்து அதை தொழில்முறையாக சட்டவரைவுக்குட்பட்ட கணக்காய்வு செய்து (Internal and external Audit) தன் லாப நட்டங்களை மதிப்பீடு செய்வது என்பது எல்லாரும் அறிந்த விடயம்.
ஒவ்வொரு நிதியாண்டும் (Financial Year) அது முடியும் தருவாயிலோ இல்லை ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாவவோ அடுத்த நிதியாண்டிற்கான ஒரு வரவு செலவு திட்டத்தை (Budget) உருவாக்கி கடந்த ஆண்டு கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்புகளை சீர்செய்வார்கள், தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வார்கள். அதன் மூலம் தான் அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரித்தல், ஊழியர்களின் வேதன உயர்வு, போனஸ் கொடுப்பனவுகள், பதவியுயர்வுகள் என்று அத்தனை அனைத்து அம்சமும் தீர்மானிக்கபடுகின்றன கட்டமைக்கபடுகின்றன. ஆக இந்த பெருந்தோட்ட கம்பனிகளில் நிச்சயமாக இந்த நடைமுறை இருக்கும்.
தற்போது அரச அதிகாரம் பெற்று தோட்டங்களை நிர்வகிக்கும் 23 கம்பனிகள் இந்த நடைமுறையை நிச்சயம் பின்பற்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இப்படியிருக்கும் சந்தர்பத்தில் நட்டத்தில் இயங்கும் கம்பனிகள் என்றால் ஏன் தொடர்ந்து தோட்டங்களை நிர்வகிக்க வேண்டும்? அரசிடம் கொடுத்து விட்டு போக வேண்டியது தானே!...
நீங்கள் யாராவது தொடர்ந்து கடன் பட்டுகொண்டே நட்டத்தில் வியாபாரம் செய்விர்களா?... எந்த முட்டாளும் செய்யமாட்டான். ஆக லாபம் இருக்கத்தான் செய்யும்.....
அவ்வாறாயின் அதன் முதுகெலும்பாக இருக்கும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தில் ஏன் இந்த பாராமுகம். நமது தோட்ட தொழிலாளர்களுக்கு இவ்வளவு நாளைக்கு என்றாவது போராட்டம் என்ற ஒன்று இல்லாமல் ஒரு ரூபா சம்பளம் கூடியிருக்கிறதா?..... இந்த 100 அல்லது 150 கால வரலாற்றில் எனக்கு தெரிய ஒரு நாள் ஊதியம் 24 ரூபாவாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஒவ்வோர் கட்டத்திலும் போராடி தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது.

வேதனையாக இல்லையா?.... யோசிக்க நாதியில்லையா?.
இந்த லட்சணத்தில் மலையகத்தில் இப்போ கல்வியறிவு வீதம் ஒப்பீட்டளவில் அதிகம். அநேக கணக்காளர்கள், கணக்காய்வாளர்கள், வழக்குறைஞ்சர்கள் நீதிமான்கள் என இப்படியாக இந்த தோட்டத்தின் தேயிலை வேர்களில் இருந்து வந்திருக்கிறார்கள் ஆனா என்னா புண்ணாக்குக்கு..... நம்ம மக்களை தெளிவு படுத்தவோ?.... வழிநடத்தவோ ஒரு நாதியில்லை.

நாதியற்ற சமூகமாக.... அநாதைகளாக்கபட்டவர்களாக இருக்கிறோம்.
வருபவர் கண்களுக்கும் 
காண்பவர் மனசுக்கும்
பசுமை படைத்து நிற்கிறோம்

உடலுக்கும் உள்ளத்திற்கும்
இதமான தேநீர் தந்து நிற்கிறோம்

காலங்காலமாய் வாழ்வும் வளமும் வேண்டி
போராடி நிற்கிறோம்
இப்போ ஒரு ஆயிரம் ரூபாவிற்க்கு வீதியில் 
நிற்கிறோம்...... 

ஜூலை 14, 2015

அஞ்சலி






இனிமேல் இந்த பூமிபந்து இன்றைய ஜுலை பதிநான்காம் திகதியை தன் வாழ்நாள் உள்ள வரை மறக்க போதில்லை. காரணம்
தமிழிசைக்கு தன் திரையிசையால் முண்டாசு கட்டி அழகு பார்த்த ஒரு மாமேதை, ‘மெல்லிசை மாமன்னர்’ என்று போற்றப்பட்ட எங்கள் எம்எஸ்வி என்ற சகாப்தம் இசையை துறந்த நாள்…, இசையை சுவாசிக்க மறந்த நாள், பல்லாயிரகணக்காண இசை ரசிகர்களை உடலால் பிரிந்த நாள்……

இசைஞானிக்கு இசைவித்திட்டவரே
இன்னோறென்ன இசை கலைஞர்களுக்கும்
இசைவித்தகருக்கும் பாடகர்களுக்கும்
பாட்டுகாரர்களுக்கும் (இசைச்) சோறு
போட்டவரே 
சங்கீதம் தெரிந்ததை விட மிக அதிகமாக
இங்கிதம் தெரிந்தவரே!

ஐயா!
உலகம் உள்ள வரை உம் பெயர் நிலைக்கும்
ஒரு வேளை அது அழிந்து மீண்டு
உயிர்த்தாலும் – அந்த பொழுதும்
உங்கள் பெயரும் இசையும் வாழும்…..
எம்எஸ்வி ஒரு சகாப்தம்
எம்எஸ்வி ஒரு வரலாறு
எம்எஸ்வி ஓரு இனத்தின் இசை முகவரி
தமிழ் என்ற சத்தம் உள்ளவரை
ஓயாது உங்கள் இசை
மறக்காது உங்கள் நாமம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்!!
விடைதருகிறோம் போய் வாருங்கள்
மீண்டும் சந்திப்போம்.













ஓர் ஏகலைவனின் கண்ணீர் அஞ்சலி.

மார்ச் 20, 2012

இலங்கையும், - இனக்கலவரமும்

என்னத்த சொல்ல....!,
இலங்கையை பொறுத்தவரையிலும், அதன் பிரச்சினையை பொறுத்தவரையிலும், சர்வதேச சமூகம், அப்படி இப்படி என்பதெல்லாம் வெறும் புண்ணாக்கு அவ்வளவு தான். மொத்த பூமிபந்தில் உள்ள ஆதிக்க நாடுகளும் சரி, ஆதிக்கத்தை வலுபடுத்த உருவாகும் நாடுகளும் சரி… நம்மை (இலங்கையை) பார்ப்பது இந்த இளிச்ச வாயன்களை எப்படி பயன்படத்திகொள்ளலாம் என்பதை பற்றி மட்டுமே!...

கடந்த 30 வருட காலமாக பிரச்சினை இருந்தாலும் ஒரு 20 வருட காலமாக தான் யுத்தம் நடந்து கொண்டிருந்து. அப்போது நினைத்திருந்தால் இந்த புண்ணாக்கு சமூகம், இப்போ எடுக்கிற ஒரு கடும் போக்கை அப்போது எடுத்து இரண்டு பேரையும் அழைத்து ஏதாவது பண்ணியிருக்கலாம், பண்ணவில்லை ஏன்? அப்போது அவர்களுக்கு தேவை தனது ஆயுதங்களை சந்தை படுத்த ஒரு இடம், பத்தோடு பதின் ஒன்றாவதாக ஒரு ஒரு இடம் இருக்கிறது ஆகவே இரண்டு பக்கமும் விற்று முடிந்தவரை காசு பார்க்கலாம் என்ற எண்ணம்.

சரி பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று நடந்தது ஞாபகம் இருக்கலாம் அப்போது சரி யாராவது இந்த புண்ணாக்குகள் வந்து மத்தியஸ்தம் பண்ணியிருக்கலாம், அல்லது தொடந்த பேச்சு வார்தைக்கான ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போதெல்லாம் அவர்களுடைய எண்ணம், இது உள்நாட்டு பிரச்சினை, அவர்களாகவே தீர்த்து கொள்ளட்டும் என்பதான நடிப்பு. பேச்சு வார்த்தை முறிந்தபோது கூட ஒரு மூச்சும் இல்லை இந்த சமூகங்களிடமிருந்து. (நோர்வே மட்டும் வந்து போனது அது வேறு கதை) 

அடுத்தது இறுதி கட்ட போரின் போது இதே ஆதிக்க நாடுகள், வடபகுதியிலிருந்து பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்றவை தனது செயற்பாடுகளை நிறுத்தி வெளியேறுகையில் அந்த மக்கள் கதறினார்களே எங்களை விட்டு போக வேண்டாம் என்று அப்போது எங்கே போயின?. அப்படி அவர்கள் அங்கிருந்திருந்தால் பொது மக்களுக்கு நேர்ந்த பரிதாபங்களை தவிர்த்திருக்கலாம். நடந்தது படுகொலை இன சுத்திகரிப்பு என்றெல்லாம் இப்போது கொக்கரிக்காமல் வேறு வேலைகளை பார்த்திருக்கலாம்.

இப்போது மட்டும் எதற்கு இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம், இலங்கைக்கு உதவவா? அப்படி நாம் நினைத்தால் மீண்டும் தமிழனுக்கும் இலங்கைக்கும் வெவ்வே!

சமகால உலக வர்த்தக, அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆதிக்கம் போன்றவற்றில் கடந்த ஓரிரு வருடத்தில் உலகம் முழுவதிலம் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை கண்கூடு. ஆகவே ஆசியபிராந்திய, அரசியல், வியாபார, ஆதிக்க, இராணுவ நெறிபடுத்தல், போன்றவற்றிற்காக தற்போதைய நம் நிலைமையை வியாபாரம் ஆக்கி குட்டையை குழப்பி குழம்பிய நீரில் மீன்பிடிக்க தான் இந்த திட்டம், தீர்வு அல்லது சாட்சியில்லாத, நிரூபிக்க முடியாத முதலை கண்ணீர் எல்லாம்.

கடைசியில் நண்பனாய் இருந்த அல்லது இருக்கிறதாய் காட்டிய அல்லது காட்டுகிற அண்டை நாடும் இலங்கை நலனில் தன் லாபநட்ட கணக்குகளை போட்டு பார்த்ததில் இலங்கை பொறுட்டு வரும் லாபத்தை விட மற்ற வகையில் லாபம் அதிகம் இருப்பதாக கண்டு என்னவோ மெல்ல ஜகாவாங்க பார்க்கிறது… என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் நாமும் நமக்குள் பிளவுபடுவதை விடுத்து நம் இருவருமே மனசு விட்டு பேசி நாமே தீர்த்துகொண்டால்……. என்ன!

(நினைக்கவே புல்லரிக்கிறது போகாத ஊருக்கு பாதை போட்ட கதை மாதிரிதான் தெரியும் ஆனால் எதுவும் சாத்தியம்).
நாம், நம் இலங்கை தன் இனங்கள் சார்பில் அது கற்று வந்த பாடங்கள் 1968 லிருந்து இன்றுவரை யாரும் தெரியாதது அறியாதது அல்ல.

நாமும் நம்முள்ளும் தெரியாது போல் பலர் நடிக்கிறார்கள் அல்லது உணர்ந்தும் செயல் பட மறுக்கிறார்கள். இதை அரசாங்கம் உணருமா?... அல்லது அரசாங்கம் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள் உணர்வார்களா?.. என்பது தான் விடையில்லாத வினா, இனியும் பிரிவினை பேசினால் கோவணம் கூட மிஞ்சுவது கடினமாகலாம். தகாத வார்த்தைகளை உதிர்வது ஆப்பிலுத்த குரங்குக்கு ஒப்பாகலாம்

திருடராய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பதற்கிணங்க எல்லாரும் திருந்தினால் (இதில் ஒரு சில தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் தான்)

சுபீட்ச இலங்கை நிச்சயம்…., அல்லது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

நானொரு முட்டாளுங்க - ரொம்ப நல்லா தெரிஞ்சவுங்க நாலு பேரு சொன்னாங்க”!....