ஜூன் 08, 2020

மலையக பெண்கள் கொழுந்தும் கையுமாகதான் இருக்கனுமா?





மலையக பெண்கள் கொழுந்தும் கையுமாகதான் இருக்கனுமா?

இன்று உலகில் நாகரீகம், அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று எல்லாவற்றிலும் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
அதிலும் இவற்றில் பெண்களின் பங்கு, மற்றும் அவர்களின் வளர்ச்சி என்பது இன்றியமையாதது. எதிலும் எந்த துறையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது யாரும் மறுக்க முடியாத இடத்தை எட்டியிருப்பது உண்மை. ஆக இன்றைய நவீன உலகின் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு சரிக்கு சரிபாதியை எட்டிவிட்டது என்றே சொல்லலாம், ஆக பாரதி கண்ட புதுமைப்பெண் கனவு மெய்ப்பட்டதாகவே கொள்ளவேண்டும்.
இதற்கு பாடுபட்ட,  இன்றும் பாடுபடும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்....... இப்போ இதுவல்ல பிரச்சினைமலையக பெண்கள் கொழுந்தும் கையுமாக தான் இருக்கனுமா இது தான் பேசு பொருள்....



என் பதில்! கொஞ்சம் மாத்தியோசிக்கனும்….
  
நம் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பது தேயிலை துறையும் தேயிலை உற்பத்தியும் தான். தேயிலை தொழிலால் தான் இலங்கைக்கு உலக வரைபடத்தில் ஒரு உயரிய முகவரி கிடைத்ததே என்றால் யாராலும் மறுக்க முடியுமா?.... 18ம் நூற்றாண்டில் கோப்பி செய்கை நலிவடைந்ததை தொடர்ந்து 19ம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை இலங்கையின் தேயிலைக்கு இருக்கும் வரவேற்பு, அல்லது பெறுமதி என்பது இன்னும் இறங்கு முகம் காணவில்லை,


(70களில் வெளிநாட்டு கடன் பெற நம்நாடு எத்தணிக்கும் போது தேயிலை தொழிற்துறையை மட்டுமே உறுதி பத்திரமாக நம்பி வெளிநாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தார்கள் என்று நான் சிறு வயதில் சொல்லக்கேட்டதுண்டு)  

இணைய புள்ளிவிபரப்படி இலங்கையின்

2019 ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானம் 240.6 பில்லியன்
2018 ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானம் 231.7 பில்லியன்
2017 ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானம் 233.3 பில்லியன்
,


இதை பார்க்கும் போது மெற்சொன்ன செவிவழி செய்தி உண்மையாகவும் இருக்கலாம்.

அப்படியிருக்க தேயிலை துறையில் இருக்கும் நம்மை அரசியல் ஆதாயத்துக்காக நமது பலம் நமக்கு தெரியாமல் இருக்க செய்வதற்காக பல்வேறு காய் நகர்த்தல்கள், ஏளனங்கள், மறுதலிப்புகளை செய்தாலும், அதேவேளை நம்மை விட்டு விடாது கைகுள் அடிமையாக வைத்துகொள்ளும் கைங்கரியம் மிகவும் சூட்சுமமாக நடந்து வருகிறது.
(இதைபற்றி எழுத விளைந்தால் கட்டுரை வேறு திசை நோக்கி பயணிக்கும் ஆகவே அதை விடுவோம்)

எத்தனை பெரிய வேலைகள் செய்தாலும், யானையை ஒரு சின்ன சங்கிலியில் அதன் காலை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம், உண்மையில் யானைக்கு இந்த சங்கிலியை உடைத்தெறிய நிமிடங்கள் அதிகம், ஆனாலும் அந்த சங்கிலிக்கு கட்டுபட்டு ரொம்பவும் பவ்வியமாக பாகன் போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எவ்வளவு பெரிய வேலையையும் சர்வசாதாரணமாக செய்து விட்டு தலையாட்டி காலாட்டி நிற்குமே அந்த நிலைதான் எம்மக்களுடையது என்றால் மிகையில்லை.

சரி இவ்வளவு உயரிய பலம் கொண்ட ஒரு தொழிற்துறையில் இருக்கும் நம் பெண்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை
, கல்வியறிவிலும் உலகஅறிவியலும் நவீன தொழில்நுட்பம் வேண்டுமானால் அவர்களுக்கு தெரியாது இருக்கலாம், அதற்காக அவர்கள் குறைந்தவர்கள், கிடையாது. அவர்களின் தொழிற்திறன், வேகம், ஆளுமை, அபார அநுபவம், உடலுறுதி வேறு யாருக்கும் வராது என்பதை யாராவது எண்ணி பார்த்திருக்கோமா?

அவர்களை திட்டமிட்டு அடிமைபடுத்தி யானைக்கு சங்கிலி போட்டது போன்று அரசியல் சமூக அமைப்பு வைத்திருக்கிறது என்பது தான் உண்மை!

இப்படியான உயர்ந்த ஒரு தொழில் செய்யும் பெண்களை கவுரப்படுத்தி
, ஊக்கபடுத்தி அவர்களை நவீனபடுத்தி, விளிப்பூட்டல், செய்தால் நம் பெண்கள் எவ்வளவு பெருமை படுவார்கள்? கேவலப்படுத்துவதாலும் எதிர்மறையான எண்ணங்களை விதைப்பதாலும் நம் பெண்கள் இந்த பெருமதி வாய்ந்த துறையை விட்டு வெளியேற்றி பொருளாதாரத்தின் நமது பெரும் பங்களிப்பை இல்லாதொழித்து நம்மை மேலும் வலுவிழக்க செய்வது எப்படி ஒரு புத்திசாலி செயலாகும் என்று எண்ணி பார்த்திருக்கிறோமா?




சரி ஒரு வாதத்திற்காக நம்பெண்கள் எல்லாரும் தேயிலை துறையிலிருந்து


அ.    வெளியேறிவிட்டால் அவர்களுக்கான மாற்று வழி ஏதாவது கையில் இருக்கிறதா? அதை பற்றி சிந்தித்து செயற்திட்டங்கள் உண்டா?.... உடனடியாக அவர்களின் வாழ்வாதாரம் எப்படி நிர்வகிக்கப்படும்?.....

ஆ.    அதுவரை எதை உண்டு வாழ்வது... எது வாழ்வின் ஜீவாதாரமாக இருக்க  போகிறதுமாற்று வழி என்பது எடுத்தேன் கவுத்தேன்  என்ற பழமொழிக்கொப்ப ஒரே நாளிளோ அல்லது ஓரிரு வருடங்களிளோ சாத்தியப்படுமா?

இ.     நமது நிலமும் சூழலும் காலநிலையும் வேறு எந்த முழுமையான மாற்று பொருளாதாரத்துக்கு ஏற்றது? அதை எப்படி மாற்றிக்கொள்வது? எப்படி நமதாக்கி கொள்வது என்ற ஏதாவது திட்டம் உண்டாஎன்று சற்று யோசிக்க வேண்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

1.       பெரும் தனவந்தர்கள், பெரும்பான்மையினர், வீட்டில் பணிப்பெண் வேலைக்கு தான் அமர்த்தபடுவார்கள், இது எவ்வளவு கேவலத்துக்குள்ளாகும்?
2.      ஆடை உற்பத்தியில் ஈடுபடுத்தலாம் சரிதான் எவ்வளவு பேரை உள் வாங்குவது?.....
3.      சுய தொழில், வியாபாரம், என்று இதரபல வேலைகளில் இறக்கிவிடலாம் இதில் எத்தனை பேர் தொழிற் திறனோடும், திட்டமிடுதலோடும் செயலாற்றுவார்கள்? அவர்களுக்கான அல்லது தொழிலுக்கான முதலீடுகள் பயிற்சிகள் எவ்வாறு திட்டமிடப்படும்?
4.      கடைசியில் விவசாய பண்ணைகள், பூ பண்ணைகள், நிலங்களுக்கு வேலைக்கு போவர்கள், அங்கும் கூலி வேலைதான்..... (எந்த அடிப்படை வசதிகளுமற்ற (ஓய்வூதியம், வீட்டுமனை,……. போன்ற))
5.       படித்த பெண்கள் என்றும் படித்தால் தேயிலை தொழில் கொரவம் இல்லை என்று தோட்டங்களை விட்டு வெளியேறினால் நமக்கான வேலை வாய்ப்புகள் ஓட்டல்களில், தனியார் நிறுவனங்களில், அழகு நிலையங்களில், பல்பொருள் அங்காடிகளில், கடைகளில், ஐந்து நடசத்திர விடுதிகளில், ஆடைதொழிற்சாலைகளில், உற்பத்தி தொழிற்சாலைகளில்....... என்று நிரம்பியிருக்கும் ஆனால் நமது இருப்பிடம் என்னவாகும்?...

நமது மொழி,  கலாச்சாரம், கலை பண்பாடு விழுமியங்கள் எங்கு பதியபடுத்தபடும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எப்படி கடத்தப்படும்?  

ஆக இப்படி போனால் நாமெல்லாம் படிப்படியாக வெளியேற்றப்பட்டு தேயிலை தொழில் ஆள் மாறி, கை மாறி இடமாறலாம், அப்போது நாமெல்லாம் ஒரு கொத்தடிமைகளாக பரிணாமப்படும் ஆபத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோமா?.

இது மிகவும் உயர்ந்த தொழில், நம் அடையாளம்,  கொரவம் மிக்க தொழில் இதில் நாம் தான் சுப்பர் ஸ்டார் நம்மை தவிர மிகவும் தரமாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேறாருமில்லை.

நாம் வஞ்சிக்கபட்டிருகிறோம், இன்னும் வஞ்சனைக்குள் சிக்குண்டு இருக்கிறோம். இவற்றிலிருந்து வெளிவந்து நமது தொழிலையே நாமே கையிலெடுத்து நமே நமக்கு முதலாளிகளாகவும், தொழிலாளியாகவும் இருந்து பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய சக்கிதியாக தொடர்ந்து திகழ்வது சரியாகுமா? இல்லை இக்கட்டுரையின் தலையங்கத்தையே தூக்கி பிடித்துகொண்டு அநாதையாகி போவது தான் சாணக்கியமா?

முடிவை மக்களிடமே விடுவோம்

சிந்தித்து, விவாதித்து, தெளிந்து முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கே! 

கருத்துகள் இல்லை: